வி.சி.,யில் தொகுதிக்கு ஒரு மாவட்ட செயலர்; தி.மு.க., கூட்டணி கட்சிகள் குமுறல்
வி.சி.,யில் தொகுதிக்கு ஒரு மாவட்ட செயலர்; தி.மு.க., கூட்டணி கட்சிகள் குமுறல்
UPDATED : டிச 17, 2025 05:14 AM
ADDED : டிச 17, 2025 05:03 AM

'விடுதலை சிறுத்தைகள் கட்சியில், தொகுதிக்கு ஒரு மாவட்டச்செயலர் வீதம் நியமித்தால், தேர்தல் நேரத்தில், மற்ற கட்சி மாவட்டச் செயலர்கள் அவர்களுடன் இணைந்து செயலாற்றுவதில் சிக்கல் ஏற்படும்' என, கூட்டணி கட்சியினர் தெரிவித்துள்ளனர்.
விடுதலை சிறுத்தைகள் கட்சியை பலப்படுத்த, அக்கட்சி தலைவர் திருமாவளவன், லோ க்சபா தொகுதி வாரியாக, மண்டல பொறுப்பாளர்களை நியமித்தார். அதன் தொடர்ச்சியாக, ஒவ்வொரு சட்டசபை தொகுதிக்கும், ஒரு மாவட்ட செயலரை நியமிக்க, நடவடிக்கை எடுத்துள்ளார். இதற்கு கட்சியில் எதிர்ப்பு இருப்பதால், புதிய மா.செ.,க்கள் நியமனம் தள்ளிப்போகிறது.
இந்நிலையில், 'இன்னும் சில மாதங்களில், சட்டசபை தேர்தல் வரும் நேரத்தில், தற்போதைய மாவட்டச் செயலர்களை மாற்றுவதும், தொகுதிக்கு ஒரு மாவட்டச் செயலரை நியமிப்பதும், குழப்பத்தை ஏற்படுத்தும்' என, கூட்டணி கட்சியினர் தெரிவித்துள்ளனர்.
இதுகுறித்து, தி.மு.க., நிர்வாகிகள் சிலர் கூறியதாவது:
தி.மு.க., கூட்டணியில், அனைத்து கட்சிகளிலும், இரண்டு அல்லது மூன்று தொகுதிகளுக்கு, ஒரு மாவட்டச்செயலர் உள்ளார். சில மாவட்டங்களில், வருவாய் மாவட்டத்திற்கு ஒரு மாவட்டச்செயலர் உள்ளார். அவர்களுடன் தி.மு.க., மாவட்டச் செயலர்கள் இணைந்து செயலாற்றுவர்.
வி.சி.,யில் தொகுதிக்கு ஒரு மாவட்டச்செயலரை நியமித்தால், மற்ற கட்சி மாவட்டச் செயலர்கள், இரண்டு அல்லது மூன்று வி.சி., மாவட்டச் செயலர்களுடன், இணைந்து செயல்பட வேண்டிய நிலை ஏற்படும்.
தேர்தல் செலவுக்கு பணம் கொடுப்பது, பிரசாரத்திற்கு தொண்டர்களை அழைத்து வருவது போன்ற பணிகளில், அனைத்து மாவட்டச் செயலர்களையும் ஒருங்கிணைப்பதில் சிக்கல் ஏற்படும்.
ஒருவருக்கொருவர் போட்டி ஏற்பட்டால், அது தேர்தலில் எதிர் விளைவுகளை ஏற்படுத்தும். எனவே, தொகுதிக்கு ஒரு மாவட்டச் செயலர் நியமிப்பதை, தேர்தல் வரை ஒத்திவைக்குமாறு, திருமாவளவனிடம் கூறும்படி, கட்சி தலைமையிடம் தெரிவித்துள்ளோம். இவ்வாறு, அவர்கள் கூறினர்.
- நமது நிருபர் -

