இ.பி.எஸ்.,க்கு எதிராக அடுத்த கட்டம்: ஓ.பி.எஸ்., சசிகலா தனித்தனி திட்டம்
இ.பி.எஸ்.,க்கு எதிராக அடுத்த கட்டம்: ஓ.பி.எஸ்., சசிகலா தனித்தனி திட்டம்
ADDED : ஜூன் 18, 2024 05:53 AM

சென்னை : லோக்சபா தேர்தல் தோல்வியை தொடர்ந்து, அ.தி.மு.க.,வில் இருந்து நீக்கப்பட்டவர்கள் அனைவரையும் ஒன்றிணைக்கும்படி, இ.பி.எஸ்.,க்கு மறைமுக நெருக்கடி கொடுக்க சசிகலா மற்றும் ஓ.பி.எஸ்., திட்டமிட்டுள்ளனர். இதற்காக கட்சியினரை சந்திக்க, சசிகலா சுற்றுப்பயணம் செல்ல உள்ளார். ஓ.பி.எஸ்., தன் ஆதரவு மாவட்டச் செயலர்கள் கூட்டம், நாளை மறுதினம் நடக்கும் என அறிவித்துள்ளார்.
லோக்சபா தேர்தலில், அ.தி.மு.க., அனைத்து தொகுதிகளிலும் தோல்வியை தழுவியது. சில தொகுதிகளில் டிபாசிட்டை பறிகொடுத்ததுடன், மூன்றாம் இடத்திற்கு தள்ளப்பட்டது. இ.பி.எஸ்., தலைமை ஏற்ற பின், கட்சி தொடர்ச்சியாக 10 தேர்தல்களாக தோல்விகளை சந்தித்து வருவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இதைத் தொடர்ந்து, கட்சியை ஒருங்கிணைக்க வேண்டும் என்ற கோஷமும், இ.பி.எஸ்., எதிர் வட்டாரத்தில் கிளம்பியுள்ளது.
ஓ.பி.எஸ்., ஆதரவாளர்களாக இருந்த பிரபாகர், பெங்களூரு புகழேந்தி ஆகியோர், முன்னாள் எம்.பி., கே.சி.பழனிசாமியுடன் இணைந்து, அ.தி.மு.க., ஒருங்கிணைப்பு குழுவை துவக்கியுள்ளனர். இ.பி.எஸ்., ஓ.பி.எஸ்., சசிகலா, தினகரன் ஆகியோரை சந்திக்க நேரம் கேட்டு, கடிதம் அனுப்பி உள்ளனர்.
தொடர் தோல்வியை சந்தித்து வரும் சூழ்நிலையில், மீண்டும் தோல்வியை சந்திக்க விரும்பாத இ.பி.எஸ்., விக்கிரவாண்டி இடைத்தேர்தலை புறக்கணிப்பதாக அறிவித்தார். இ.பி.எஸ்., பலவீனமடைந்துள்ள நிலையில், கட்சியில் மீண்டும் இணைந்துவிட சசிகலா, ஓ.பி.எஸ்., காய் நகர்த்துகின்றனர்.
இ.பி.எஸ்.,க்கு நெருக்கமாக உள்ள அ.தி.மு.க., நிர்வாகிகளுடன் தொடர்ந்து இணைப்பு தொடர்பாக பேசி வருகின்றனர். அனைவரும் ஒன்றிணைய வேண்டும் என்பதே இவர்களின் கோரிக்கையாக உள்ளது. ஆனால், சசிகலா, ஓ.பி.எஸ்., ஆகியோரை கட்சியில் இணைப்பதை இ.பி.எஸ்., விரும்பவில்லை. இந்த சூழ்நிலையில், வெறுமனே கட்சியை ஒன்றிணைப்பதாக அறிக்கை விட்டால் போதாது; செயலில் இறங்க வேண்டும் என சசிகலா முடிவெடுத்துள்ளார்.
நிர்வாகிகளை சந்தித்து பேச, தமிழகம் முழுதும் சுற்றுப்பயணம் செய்வது, கட்சியில் உள்ள தன் ஆதரவாளர்களை, இ.பி.எஸ்.,க்கு எதிராக திரட்டுவது என அவர் முடிவு செய்துள்ளார். அதேபோல், ஓ.பி.எஸ்., தன் ஆதரவாளர்களிடம் ஆலோசித்து, அடுத்தகட்ட செயல்பாடுகளை திட்டமிட உள்ளார்; அதற்காக, அ.தி.மு.க., தொண்டர்கள் மீட்பு குழு சார்பில் செயல்படும் மாவட்டச் செயலர்கள் கூட்டத்தை கூட்டியுள்ளார். நாளை மறுதினம் மாலையில் சென்னையில் இக்கூட்டம் நடக்கிறது.
இது குறித்து, ஓ.பி.எஸ்., மற்றும் சசிகலா ஆதரவாளர்கள் கூறியதாவது: கட்சி ஒன்றிணைய வேண்டும் என்ற எண்ணம், இரண்டாம் மட்ட தலைவர்களிடம் ஏற்பட்டுள்ளது. இது தொடர்பாக, சில முன்னாள் அமைச்சர்களுடன் பேச்சு நடந்து வருகிறது. இ.பி.எஸ்.,ம், ஓரிரு முன்னாள் அமைச்சர்களும் மட்டும் தடையாக உள்ளனர்.
விரைவில் அடுத்தகட்ட நடவடிக்கைகள் துவங்கும். கட்சியை ஒன்றிணைக்க வேண்டும் என்ற குரல், இ.பி.எஸ்., வட்டத்திலேயே எழும். சட்டசபை தேர்தலுக்கு முன், கட்சியை ஒன்றிணைக்க வேண்டும் என்பதே எங்களின் ஒரே இலக்கு. இவ்வாறு அவர்கள் கூறினர்.

