'தி.மு.க., லஞ்சத்தை தவிர்த்தால் புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் நிறைவேறும்'
'தி.மு.க., லஞ்சத்தை தவிர்த்தால் புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் நிறைவேறும்'
ADDED : ஜன 12, 2024 01:54 AM

ஊட்டி;''முதலீட்டாளர்கள் மாநாட்டில் போடப்பட்ட புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் அனைத்தும் நிறைவேற வேண்டும் என்றால் தி.மு.க., அரசு லஞ்சம், ஊழலில் ஈடுபட கூடாது,'' என, பா.ஜ., மாநில துணை தலைவர் வலியுறுத்தியுள்ளார்.
மத்திய அரசு மிகவும் பின் தங்கிய பழங்குடி சமூகத்தினரின் நலனில் அக்கறை செலுத்தி, அவர்களின் வாழ்வாதாரத்தை உறுதி செய்ய, 24 ஆயிரம் கோடி ரூபாய் திட்டத்தை உருவாக்கியது.
இதன் பயன் குறித்து அறிய, நீலகிரி மாவட்டம் கூடலுார், பந்தலுார் பகுதிகளில் வாழும் பழங்குடியின கிராமங்களில், பா.ஜ., மாநில துணை தலைவர் நாராயணன் திருப்பதி, மாவட்ட தலைவர் மோகன்ராஜ் உட்பட கட்சி நிர்வாகிகள் ஆய்வு மேற்கொண்டனர்.
தொடர்ந்து, ஊட்டியில் பா.ஜ. மாநில துணை தலைவர் நாராயணன் திருப்பதி நிருபர்களிடம் கூறியதாவது:
நீலகிரி மாவட்டத்தில், கூடலுார், பந்தலுாரில் உள்ள சில பழங்குடியின கிராமங்களில் ஆய்வு செய்தோம். வீடு இல்லாதவர்களுக்கு வீடு கட்டி கொடுக்கப்பட்டாலும் அந்த வீடுகளில் விரிசல் ஏற்பட்டுள்ளது. சமையலறைக்கு தேவையான வசதிகள் இல்லை. குடிநீர் இணைப்பு வழங்கப்பட்டிருந்தாலும், குழாயில் குடிநீர் வருவதில்லை.
கழிப்பறை கட்டி கொடுத்தாலும் பயன்படுத்த முடியாத அவல நிலையில் உள்ளது. மக்களின் அடிப்படை தேவைகளில் முறைகேடு நடந்திருப்பதுடன், மாநில அரசு அதிகாரிகளின் அலட்சியத்தை காட்டுகிறது.
மாநில அரசின் அலட்சிய போக்கால் மின்வாரியத்தில், மாநிலத்தில் பல மாவட்டங்களில் மின் திட்டப்பணிகள் முடிக்கப்படாமல் உள்ளது. பசுமை குடில் திட்டத்தையும் முறையாக செயல்படுத்தவில்லை. கிறிஸ்துவ மதத்தை போற்றி வழிப்பட சென்ற அண்ணாமலை மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளதை பா.ஜ., வன்மையாக கண்டிக்கிறது.
அதே சமயம், 'இந்து மதத்தை ஒழிப்பேன்' என்று சொன்ன உதயநிதிக்கு அமைச்சர் பதவி. இதுதான் திராவிட மாடலா என்பதுதான் என் கேள்வியாக உள்ளது. நீலகிரியில் சிறுத்தை தாக்கி பலர் காயமடைந்திருப்பதும், ஒரு சிலர் பலியான சம்பவம் நடந்துள்ளது.
மக்கள் பாதுகாப்பில் வனத்துறை; போலீசார் அக்கறை செலுத்த வேண்டும்.
அதானி, அதானி நிறுவனத்தை தனிப்பட்ட முறையில் உதயநிதியும், ஸ்டாலினும் விமர்ச்சனம் செய்தனர். அதானியிடம், 50 ஆயிரம் கோடி ரூபாய்க்கு புரிந்துணவு ஒப்பந்தம் போட்டுள்ளனர். மலிவான அரசியலுக்காக இப்படி பேசுவதை நிறுத்தி கொள்ள வேண்டும்.
முதலீட்டாளர்கள் மாநாட்டில் போடப்பட்ட புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் அனைத்தும் நிறைவேற வேண்டும் என்றால், தி.மு. க., அரசு லஞ்சம், ஊழலில் ஈடுபட கூடாது.
முதல்வர் ஸ்டாலின் பழங்குடியின மக்களின் வசதிகள் குறித்து உடனடியாக ஆய்வு செய்து, முறைகேட்டில் ஈடுபட்டவர்களை தண்டிக்க வேண்டும். பழங்குடியின கிராமங்களில் நாங்கள் ஆய்வுக்கு சென்ற பின், 120 குடும்பங்களுக்கு மின் இணைப்பு வழங்கப்பட்டது. இன்னும், 240 குடும்பத்திற்கு விரைவில் வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
இவ்வாறு, நாராயணன் திருப்பதி கூறினார்.

