தொடர்ந்து காவு வாங்கும் தொப்பூர் கணவாய் சாலை: 12 ஆண்டுகளில் 500க்கும் மேற்பட்டோர் பலி
தொடர்ந்து காவு வாங்கும் தொப்பூர் கணவாய் சாலை: 12 ஆண்டுகளில் 500க்கும் மேற்பட்டோர் பலி
ADDED : ஜன 28, 2024 01:52 AM

தொப்பூர்: தொப்பூரில் தொடர் விபத்துகளால், 12 ஆண்டுகளில், 500க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தும், அரசு தரப்பில் உரிய சாலை சீரமைப்பு நடவடிக்கை மேற்கொள்ளப்படவில்லை என, குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
தர்மபுரி மாவட்டத்தில், பெங்களூரு - சேலம் தேசிய நெடுஞ்சாலையில் அமைந்துள்ளது தொப்பூர் கணவாய் பகுதி. இங்கு, தர்மபுரி மாவட்டம், கட்டமேடில் இருந்து தொப்பூர் வரை, 6 கி.மீ., சாலை சாய்தளமாக உள்ளது.
இதில், லோடுடன் செல்லும் கனரக வாகனங்கள் கட்டுப்பாட்டை இழந்து முன்னால் செல்லும் வாகனங்கள் மீது மோதுவதும், சாலையில் கவிழ்வதும், உயிர் பலிகள் நடப்பதும் தொடர்கின்றன. இந்தியாவிலேயே மிகவும் மோசமான விபத்து பகுதியாக இந்த சாலை பார்க்கப்படுகிறது.
கடந்த 2012 முதல், 12 ஆண்டுகளில் மட்டும் மொத்தம், 1,020 விபத்துகளில், 500க்கும் மேற்பட்டோர் பலியாகியுள்ளனர். இதில், கோர விபத்துகள் பல நடந்துள்ளன.
குற்றச்சாட்டு
கடந்த, 2020, டிச., 12ல் தொப்பூர் கணவாய் பகுதியில், இரு லாரிகள் மோதி விபத்துக்குள்ளாகின. இதனால் ஏற்பட்ட போக்குவரத்து நெரிசலால், வாகனங்கள் மிக மெதுவாக சாலையில் ஊர்ந்து சென்றன.
அச்சமயத்தில், பின்னால் வேலுாரிலிருந்து சேலத்திற்கு, சிமென்ட் மூட்டைகள் ஏற்றிய லாரி வந்தது. தொப்பூர் கணவாயின் சரிவான சாலையில் கட்டுப்பாட்டை இழந்த அந்த லாரி, முன்னால் சென்ற லாரிகள் மற்றும் ஊர்ந்து சென்ற வாகனங்கள் மீது சரமாரியாக மோதியது.
இதில், 12 கார், 2 லாரி மற்றும் ஒரு வேன் என, 15 வாகனங்கள் ஒன்றின் மீது ஒன்று மோதி நசுங்கின. இந்த விபத்தில், ஏழு பேர் பலியாகினர்.
கடந்த, 24ல் தொப்பூர் இரட்டைபாலம் அருகில், கர்நாடக மாநிலத்திலிருந்து, ஈரோடு மாவட்டம், காங்கேயத்திற்கு நெல் மூட்டைகள் ஏற்றிச் சென்ற லாரி கட்டுப்பாட்டை இழந்து, முன்னால் சென்ற இரு லாரிகள் மற்றும் கார் மீது மோதியது.
இந்த விபத்தில், நெல் லோடு லாரி, கார் இரண்டும் தீப்பிடித்ததில், காரில் பயணித்த, நான்கு பேர் உடல் கருகி பலியாகினர். விபத்திற்குள்ளான மற்றொரு லாரி, பாலத்தின் பக்கவாட்டு சுவரை இடித்து தள்ளி, 50 அடி பள்ளத்தில் கவிழ்ந்தது.
விபத்து பகுதியான இச்சாலையில், 'ஸ்பீடு பிரேக்கர்' ஒளிரும் ஸ்டிக்கர்கள், வாகன வேகம் குறித்து ஒலிப்பெருக்கியில் அறிவிப்பு என செய்திருந்தாலும், விபத்துக்களும், உயிர்பலிகளும் தொடர்கதையாகவே உள்ளன.
சாலை விதிகளை மதிக்க வேண்டும் என்ற அரசின் உத்தரவை அதிகாரிகள் செயல்படுத்த நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.
இருந்தாலும், தொப்பூர் கணவாய் பகுதியில், மரணம் நிகழ்ந்து விடுமா என்ற சந்தேகத்தில் செல்லும் வாகன ஓட்டிகளுக்காகவும், உயிரிழப்புகளை தடுப்பதற்காகவும் சாலை சீரமைப்பு பணியோ, முறையான தடுப்பு நடவடிக்கைகளோ எடுக்கப்படவில்லை என்ற குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
அதிக பாரம்
தொப்பூர் அருகே, பாளையம் டோல்கேட்டின் இருபுறத்திலும், எடைமேடை உள்ளது. இங்கு லோடு ஏற்றி வரும் கனரக வாகனங்களை எடையிட்டு, அதிகபாரம் ஏற்றினால் அவற்றை இறக்கி, அபராதமும் விதிக்க வேண்டும்.
ஆனால், அதிகாரிகளோ, இதை முறையாக கண்காணிப்பதில்லை. அதிக பாரத்தோடு சென்று, கட்டுப்பாட்டை இழக்கும் லாரிகள், முன்னால் செல்லும் வாகனங்களில் செல்வோரை கொத்து கொத்தாக, பலி வாங்கி வருகிறது.
அச்சம்
விபத்தை தடுக்க தொப்பூரில், உயர்மட்ட சாலை அமைக்கப்படும் என, எட்டு ஆண்டுகளாக மக்கள் பிரதிநிதிகள் கூறி வந்தாலும், நடவடிக்கை இல்லை.
கடந்த, 2016ல் அப்போதைய தர்மபுரி பா.ம.க., - எம்.பி., அன்புமணி, ''120 கோடி ரூபாயில் உயர்மட்ட சாலை அமைக்கப்படும்,'' என்றார். தற்போது, தி.மு.க., - எம்.பி.,யாக உள்ள செந்தில்குமாரும், ''775 கோடி ரூபாயில் உயர்மட்ட சாலை அமைக்கப்படும்,'' என, கூறியுள்ளார்.
ஆனால், இந்த இடைப்பட்ட காலத்தில், அதற்கான எந்த பணிகளும் நடக்கவில்லை. மாறாக உயிர்பலி தான் அதிகரிக்கிறது. உயிர்பலி வாங்கும் தொப்பூர் கணவாய் சாலையை கடக்கும் போதெல்லாம் பயத்துடனே செல்ல வேண்டிய நிலை உள்ளதாக, வாகன ஓட்டிகள் அச்சம் தெரிவிக்கின்றனர்.

