காமராஜர் ஒரு உதாரணம்: தவிர்க்கப்பட்டிருக்க வேண்டிய தாமதம்
காமராஜர் ஒரு உதாரணம்: தவிர்க்கப்பட்டிருக்க வேண்டிய தாமதம்
ADDED : ஆக 27, 2024 10:46 AM

துாத்துக்குடி: பருவமழை காலத்தில் தாமிரபணி ஆற்றில் வெளியேறும் 13.8. டிஎம்சி தண்ணீர் வீணாக கடலில் கலக்கும் நிலை உள்ளது.
அந்த தண்ணீரை வறட்சி பகுதியான சாத்தான்குளம், திசையன்விளை, நாங்குநேரி, ராதாபுரம் பகுதி மக்கள் பயன்பெறும் வகையில், வெள்ளநீர் கால்வாய் திட்டத்தை 2009ல் அப்போதைய முதல்வர் கருணாநிதி துவங்கி வைத்தார். ஆனால் இதுவரை திட்டம் முழுமையடையவில்லை.
திட்டம் தாமதம் குறித்து, பொதுப்பணித்துறை நீர்வளத்துறை உயர் அதிகாரிகள் கூறியதாவது: வெள்ளநீர் கால்வாய்த் திட்டம் நிறைவேற்றப்பட்டால், திருநெல்வேலி மாவட்டத்தில் 32 கிராமங்களில் 33,312; துாத்துக்குடி மாவட்டத்தில் 18 கிராமங்களில் 23,620 ஏக்கர் நிலங்களும் பாசனம் பெறும். இரு மாவட்டங்களிலும் 252 குளங்கள், 5,220 கிணறுகள் பயன்பெறும். இதனால், நிலத்தடி நீர் மட்டும் கணிசமாக உயரும்.
திட்டத்தின் கடைசி பகுதியான எம்.எல்., தேரியில் இன்னும் 2 கி.மீ., துாரத்துக்கு குறைவாகவே பணிகள் நடக்க வேண்டியுள்ளன. அப்பகுதியை சேர்ந்த தனிநபர் ஒருவர் தனது இடம் பாதிக்கப்படும் என்பதால், கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார். வழக்கு தொடுத்த நபர் தன் நிலம் பாதிக்காமல் இருக்க, தடுப்புச் சுவர் அமைத்து தர வேண்டும் என கூறுகிறார். அப்பணியை செய்ய 1 கோடி ரூபாய் வரை செலவாகும். அந்த நிதிக்கு ஏற்பாடு செய்து, தடுப்புச் சுவர் கட்ட உறுதியளித்தால், தனிநபர் வழக்கை வாபஸ் பெற வாய்ப்பு உள்ளது. அதில் இருந்து ஒரு மாதத்துக்குள் பணியை முடித்துவிடலாம். இவ்வாறு அவர் கூறினார்.
காமராஜர் ஒரு உதாரணம்
இந்த நேரத்தில் முந்தைய முதல்வர் காமராஜர் செய்த ஒரு நெகிழ்ச்சியாகன சம்பவத்தை நினைவுகூர வேண்டி உள்ளது. மதுரையில் காளவாசல் - பழங்காநத்தம் இடையே பைபாஸ் ரோடு அமைக்கப்பட்டிருந்த நேரம். வழியில் இந்த சாலையை மதுரை - போடி ரயில்வே லைன் குறுக்கிடுகிறது. பாலம் கட்டினால் தான் சாலையில் போக்குவரத்து நெரிசல் ஏற்படாமல் இருக்கும் என்ற நிலைமை.
அப்போது இருந்த அதிகாரிகள் ரயில்வே லைனை ஒட்டி இருந்த இடங்களை ஆர்ஜிதம் செய்து பாலம் அமைக்கும் வேலையை ஆரம்பித்தனர். அங்கு நிலம் வைத்திருந்த ஒரு பெரியவர், நில ஆர்ஜிதத்திற்கு எதிராக வழக்கு தொடர்ந்தார். பாலப்பணியை முடிக்க முடியவில்லை.
அப்போது தற்செயலாக முதல்வர் காமராஜர் அந்த வழியாக காரில் சென்றார், ரயில்வே பாலம் வேலை முடியாமல் இருந்ததைப் பார்த்த காமராஜர் அதிகாரிகளிடம் காரணம் கேட்டிருக்கிறார். ஒரு பெரியவர் வழக்கு தொடர்ந்த விஷயத்தை அவர்கள் கூறியதும், அந்த பெரியவரைத் தேடி காமராஜர் சென்றார்.
சாதாரண ஓட்டு வீட்டில் இருந்த அந்த பெரியவர், வீட்டு முன்பு போலீஸ் வாகனங்களும், முதல்வர் காரும் வந்து நின்றதைப் பார்த்து ஆச்சரியத்துடன் வெளியே வந்தார். அதற்குள் வீட்டுக்குள் சென்ற காமராஜரைப் பார்த்த அந்த பெரியவருக்கு ஒன்றும் புரியவில்லை. உடனே காமராஜர் வந்த விஷயத்தை சொன்னதும், ‛‛ஐயா, நீங்களே வந்து கேட்ட பிறகு நானம் இடத்தை தராமல் இருப்பேனா'' என்று கூறி நிலத்தை தர சம்மதித்தார்.
அதிகாரிகளால் பல மாதங்களாக முடிக்க முடியாத விஷயத்தை, கவுரவம், பந்தா பார்க்காமல் தானே களத்தில் இறங்கி காமராஜர் காரியத்தை முடித்தார்.
அது போலவே தாமிரபரணி திட்டத்தையும் கவுரவம் பார்க்காமல் வழக்கு தொடர்ந்தவர்களுடன் அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தி இருந்தால் இந்நேரம் திட்டம் முடிந்திருக்கும். பல கோடி பணம் மிச்சமாகி இருக்கும்.

