நீதிபதி சுவாமிநாதனை பதவி நீக்கம் செய்வதற்கான தீர்மானம் கொண்டு வர நோட்டீஸ்: லோக்சபா சபாநாயகர் ஓம் பிர்லாவிடம் வழங்கியது 'இண்டி' கூட்டணி
நீதிபதி சுவாமிநாதனை பதவி நீக்கம் செய்வதற்கான தீர்மானம் கொண்டு வர நோட்டீஸ்: லோக்சபா சபாநாயகர் ஓம் பிர்லாவிடம் வழங்கியது 'இண்டி' கூட்டணி
UPDATED : டிச 10, 2025 10:27 AM
ADDED : டிச 10, 2025 01:11 AM

சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளை நீதிபதி சுவாமிநாதனை, பதவி நீக்கம் செய்வதற்கான தீர்மானத்தை பார்லிமென்டில் கொண்டுவர வலியுறுத்தி, தி.மு.க., - காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகளை சேர்ந்த 107 எம்.பி.,க்கள் கையழுத்திட்ட நோட்டீஸ், லோக்சபா சபாநாயகரிடம் தரப்பட்டு உள்ளது.
கார்த்திகை தீபத்தன்று, திருப்பரங்குன்றம் மலை மீதுள்ள விளக்குத்துாணில் தீபம் ஏற்றுவதற்கு அனுமதி வழங்கி, சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளை நீதிபதி சுவாமிநாதன் பிறப்பித்த உத்தரவு, அரசியல் ரீதியாக தமிழகத்தில் அனலை கிளப்பிக் கொண்டிருக்கிறது.
கடும் அமளி
இந்த விவகாரம், கடந்த வெள்ளியன்று பார்லிமென்டிலும் எதிரொலித்தது. அன்று பூஜ்ஜிய நேரத்தில் பேசிய தி.மு.க., - எம்.பி., பாலு, நீதிபதி சுவாமிநாதன் குறித்து பேசிய வார்த்தையால், பா.ஜ., - எம்.பி.,க்கள் கடுமையாக கொந்தளித்ததுடன், அந்த வார்த்தையை சபைக்குறிப்பிலிருந்து நீக்கும் அளவுக்கு கடும் அமளியும் உருவானது.
விவகாரம் அத்துடன் முடியும் என்று எதிர்பார்த்த நிலையில், நீதிபதி சுவாமி நாதனை பதவி நீக்கம் செய்வதற்கான நடவடிக்கையில் நாங்கள் இறங்குவோம் என்று தெரிவித்த தி.மு.க., - எம்.பி.,க்கள், அதற்கான பணியிலும் இறங்கினர்.
அதன்படி, நீதிபதி சுவாமிநாதனை பதவி நீக்கம் செய்வதற்கான தீர்மானத்தை பார்லிமென்டில் கொண்டுவர வலியுறுத்தும் நோட்டீஸ் தயாரிக்கப்பட்டு, அதில், 'இண்டி' கூட்டணியில் இடம்பெற்றுள்ள காங்கிரஸ், சமாஜ்வாதி, விடுதலை சிறுத்தைகள் மற்றும் இடதுசாரி உள்ளிட்ட கட்சிகளை சேர்ந்த எம்.பி.,க்களிடம் கையெழுத்து வாங்கும் வேலைகளும் நடைபெற்றன.
சந்தேகம்
இந்நிலையில், தி.மு.க., எம்.பி., கனிமொழி தலைமையில் நேற்று கூடிய இண்டி கூட்டணி கட்சிகளின் எம்.பி.,க்கள், சபாநாயகர் ஓம் பிர்லாவை அவரது அறையில் சந்தித்து, நீதிபதி சுவாமிநாதனை பதவி நீக்கம் செய்வதற்கான தீர்மான நோட்டீசை வழங்கினர்.
நீதிபதிகள் விசாரணை சட்டம் 1968ன் கீழ், நடத்தை தவறுதல், திறமையின்மை என்ற விதிகளின் கீழ் நீதிபதி சுவாமிநாதனை பதவி நீக்க கோரும் தீர்மான நோட்டீசில், 107 எம்.பி.,க்கள் கையெழுத்திட்டுள்ளனர்.
நோட்டீசில் கூறப்பட்டு உள்ளதாவது: பாரபட்சமின்மை, வெளிப்படைத்தன்மை மற்றும் நீதித்துறையின் சமூக நீதி அடிப்படையில் பார்க்கும்போது, நீதிபதி சுவாமிநாதனின் செயல்பாடுகள் சந்தேகத்துக்கு உரியதாக உள்ளன.
சித்தாந்த அடிப்படை வழக்குகள் குறித்து முடிவெடுப்பதில், ஸ்ரீசரண் ரங்கநாதன் என்ற மூத்த வழக்கறிஞருக்கும், குறிப்பிட்ட சமூகத்திற்கும் ஆதரவாக செயல்படுகிறார். வழக்குகள் மீது குறிப்பிட்ட அரசியல் சித்தாந்த அடிப்படையிலும், இந்திய அரசியலமைப்பு சட்டத்திற்கு எதிராகவும் முடிவுகளை எடுக்கிறார்.
எனவே, இந்திய அரசியலமைப்பு சட்ட பிரிவுகள் 217 மற்றும் 124 ஆகியவற்றின் அடிப்படையில், நீதிபதி சுவாமிநாதனை அவர் வகிக்கும் பதவியிலிருந்து நீக்க வலியுறுத்துகிறோம். இவ்வாறு நோட்டீசில் கூறப்பட்டுள்ளது.
நீதித்துறையை அச்சுறுத்துகிறது 'இண்டி'
கூட்டணி உயர் நீதிமன்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதனுக்கு எதிராக, தி.மு.க., அரசு உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்துள்ளது. ஆனாலும், சிறுபான்மையினரை தாஜா செய்யும் அரசியலுக்காக, நீதிபதி சுவாமிநாதனை தகுதி நீக்கம் செய்யும் தீர்மானம் கொண்டு வர, 'இண்டி' கூட்டணி கட்சிகள், லோக்சபா சபாநாயகரிடம் 'நோட்டீஸ்' கொடுத்துள்ளன. இது, ஓட்டு வங்கி அரசியலுக் காக, 'இண்டி' கூட்டணி நடத்தும் நாடகம். எந்தவொரு நீதிபதியின் தீர்ப்பையும், 'இண்டி' கூட்டணி விரும்பவில்லை என்றால், நீதித்துறையை அடிபணிய செய்ய, அச்சுறுத்தும் ஒரு கருவியாக பதவி நீக்கத்திற்கான நோட்டீஸ் கொடுப்போம் என்பது தான், அவர்கள் சொல்லும் செய்தியா? - அண்ணாமலை, முன்னாள் தலைவர், தமிழக பாஜ
வாய்ப்பூட்டு போட முயற்சி
தமிழர்களின் பண்பாட்டு உரிமைகளை, தன் தீர்ப்பின் வாயிலாக நிலைநாட்டிய நீதிபதி “ ஜி.ஆர்.சுவாமிநாதனுக்கு எதிராக பதவி நீக்க தீர்மானம் கொண்டு வர, 'இண்டி' கூட்டணி எம்.பி.,க்கள் எடுத்த முன்னெடுப்பு வெட்கக்கேடானது. நீதிக்கே வாய்ப்பூட்டு போட நினைக்கிறது இந்த மக்கள் விரோத கும்பல். அவர்களின் அரசியல் பிழைப்பிற்காக, இந்திய நாட்டின் ஜனநாயகத் துாணாக விளங்கும் நீதித்துறையையே அசைத்து பார்க்க நினைக்கும் செயல் இது. இதை, தேசிய ஜனநாயக கூட்டணி முறியடிக்கும். நீதித்துறையை மிரட்ட முயலும் தி.மு.க., - காங்கிரஸ் கூட்டணி மக்களால் தோற்கடிக்கப்படும். -நயினார் நாகேந்திரன், தலைவர், தமிழக பாஜ
- நமது டில்லி நிருபர் -

