கள தகவல்களால் இ.பி.எஸ்., 'அப்செட்': அடுத்த கட்டம் குறித்து ஆலோசனை
கள தகவல்களால் இ.பி.எஸ்., 'அப்செட்': அடுத்த கட்டம் குறித்து ஆலோசனை
ADDED : ஏப் 22, 2024 04:47 AM

நடந்து முடிந்த லோக்சபா தேர்தல் முடிவுகள் வரும் ஜூன் 4ல் தான் வெளியாகும் என்றாலும், பல தரப்பில் இருந்து கிடைக்கும் விபரங்களை வைத்து, தமிழக அரசியல் கட்சித் தலைவர்கள், யூகக் கணக்கு போட்டு வருகின்றனர்.
அந்த வகையில், தி.மு.க., கூட்டணி 35 தொகுதிகளுக்கு மேல் வெற்றி பெறும் என, கட்சியினர் மற்றும் உளவுத்துறை அளித்துள்ள தகவல், தி.மு.க., தலைவர் ஸ்டாலினுக்கு உற்சாகத்தை அளித்துள்ளது. அதேநேரம், பா.ஜ., கூட்டணி ஐந்து இடங்களில் வெல்லக்கூடும் என்ற தகவல் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
ஆர்வம்
இருப்பினும், 2026ல் சட்டசபை தேர்தலுக்கு, இப்போதே கட்சியினர் தயாராக வேண்டும் என ஸ்டாலின் முடுக்கி விட்டுள்ளார்.
தமிழகத்தில் 39 லோக்சபா தொகுதிகள் இருந்தபோதும், கோவையில் அண்ணாமலை வெற்றி பெறுவாரா என தெரிந்து கொள்வதில், தி.மு.க., தலைவர் ஸ்டாலினும், எதிர்க்கட்சித் தலைவர் இ.பி.எஸ்.,சும் ஆர்வம் காட்டுகின்றனர்.
களத்தில் இருந்து வரும் தகவல்கள், அ.தி.மு.க.,வுக்கு சாதகமாக இல்லாததால், பொதுச்செயலர் இ.பி.எஸ்., அப்செட் ஆகியுள்ள தகவல் வெளியாகி உள்ளது.
தேர்தலுக்குப் பின், சேலத்தில் தங்கியிருக்கும் அவர், தினந்தோறும் கட்சியினரை சந்தித்து வருகிறார். உற்சாகமாக இருப்பது போல காட்டிக் கொண்டாலும், அதையும் மீறி பதற்றத்தை உணர முடிகிறது என்கின்றனர், அவரை சந்தித்த மூத்த தலைவர்கள்.
அ.தி.மு.க., மூத்த தலைவர் ஒருவர் கூறியதாவது:
தமிழகத்தைப் பொறுத்தவரை, தி.மு.க., - அ.தி.மு.க.,வை கடந்து தான், வேறு இயக்கங்களுக்கு இடம் கிடைக்க வேண்டும். அதில், இரு கட்சிகளும் உறுதியாக இருந்து செயல்பட வேண்டும் என்பது இ.பி.எஸ்.,ன் விருப்பம்.
அதனால் தான், கடந்த தேர்தலில் தி.மு.க., ஆட்சி அமைந்தாலும், இரண்டு ஆண்டுகள் வரை விமர்சிக்காமல் அமைதி காத்தார்.
அதன்பின், ஒவ்வொரு விஷயத்தையும் எதிர்க்கத் துவங்கி, தொடர் விமர்சனங்களை வைத்தார். அவர் துவக்கத்தில் இருந்தே வேகமாக செயல்படாதது, கட்சித் தொண்டர்கள் மற்றும் பொதுமக்கள் மத்தியில் அவநம்பிக்கையை ஏற்படுத்தி விட்டது.
'எதற்கும் ஒரு கால அவகாசம் உள்ளது. ஆட்சிக்கு வந்த மறுநாளில் இருந்து அவர்களை எதிர்க்க வேண்டும் என்பது ஆரோக்கியமான அரசியல் இல்லை. சந்தர்ப்பம் வரும்போது விமர்சிக்கலாம்; எதிர்க்கலாம்' என்று பழனிசாமி கூறி வந்ததையும் கட்சியினர் ரசிக்கவில்லை.
இதற்கிடையில், தமிழகத்தின் பிரதான எதிர்க்கட்சி போல பா.ஜ., செயல்பட, அக்கட்சி பக்கம் பலருடைய பார்வையும் திரும்பிவிட்டது. இதனால், லோக்சபா தேர்தலுக்கு பா.ஜ., தலைமையில் வலுவான கூட்டணி அமைந்து விட்டது.
சாதகமாக இல்லை
இதனால் சோர்ந்து போன அ.தி.மு.க.,வினர், தேர்தலில் போட்டியிட தயங்கி ஒதுங்கினர். ஆனாலும், பணக்கார வேட்பாளர்களாக தேர்வு செய்து, அவர்களை களம் இறக்கினார் இ.பி.எஸ்.,
இது, கட்சியில் இருக்கும் சாமானியர்களை சோர்வாக்கியது. இது, கட்சிக்கு சாதகமாக இல்லை என்பதை தாமதமாக உணர்ந்திருக்கும் இ.பி.எஸ்., அப்செட் ஆகி உள்ளார். முடிவுகள் சாதகமாக இல்லாவிட்டால், தனக்கே பெரும் பிரச்னை ஏற்படும் என அஞ்சுகிறார்.
இருப்பினும், தேர்தலுக்குப் பின் கட்சியை நடத்தி செல்வது குறித்து, இரண்டாம் கட்டத் தலைவர்களிடம் கருத்து கேட்கிறார்.
ஒவ்வொருவர் கருத்தையும் குறித்து வைக்கும் பழனிசாமி, அதற்கேற்ப செயல் திட்டம் வகுக்க உள்ளார். பா.ஜ.,வுடனான உறவை சீராக்கலாம் என சிலர் சொல்ல, அதை இ.பி.எஸ்., ஏற்க மறுத்து விட்டார். இவ்வாறு அந்த தலைவர் கூறினார்.
- நமது நிருபர் -

