UPDATED : பிப் 26, 2024 04:04 AM
ADDED : பிப் 25, 2024 08:37 PM

உடுமலை:உடுமலை, பாலாற்றில் ஆக்கிரமிப்புகளை முழுமையாக அகற்றவும், ஆற்றை துார்வாரி, தடுப்பணைகள் கட்டவும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
உடுமலை, திருமூர்த்தி மலையில், உருவாகும் சிற்றாறுகள் ஒருங்கிணைந்து பாலாறாக மாறி, மேற்குநோக்கி, 40 கி.மீ., துாரம் பயணிக்கிறது. துணை ஆறாக, நல்லாறு மற்றும் ஆனைமலை மலைத்தொடர்களிலிருந்து உருவாகும் ஓடை, சிற்றாறுகளும் இணைந்து, மிகப்பெரிய நீர் வழித்தடமாக இருந்தது.
பசுமை சூழ்ந்த மலைகள், ஆயிரக்கணக்கான ஏக்கர் விவசாய நிலங்களுக்கு மத்தியில், பாலாறு பயணிப்பதால், விவசாயம் மற்றும் வழியோரத்திலுள்ள, 50க்கும் மேற்பட்ட கிராமங்களுக்கு, குடிநீருக்கான நிலத்தடிநீர் ஆதாரமாகவும் உள்ளது.
திருமூர்த்தி அணை கட்டப்பட்டதால், பாலாறு, நல்லாற்றில் நீர்வரத்து குறைந்து காணப்படுகிறது. இருப்பினும், பருவமழை காலங்களில், பாலாறு, நல்லாறு மற்றும் ஓடைகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு, வழியோர கிராமங்களில் வெள்ள நீர் புகுந்தும், விவசாய நிலங்களும் பாதிக்கப்பட்டு வருகின்றன.
தொடர் பராமரிப்பு இல்லாமல், ஆக்கிரமிப்புகளால் பாலாறு, நல்லாறு மற்றும் ஓடைகள், மிகவும் குறுகலாக மாறியுள்ளது. பல இடங்களில், நீர் வழித்தடத்தை மறித்து, முழுமையாக ஆக்கிரமிக்கப்பட்டுள்ளது.
மழை பொழிவு இல்லாத காலங்களில், இரு புறமும் உள்ள கிணறு, போர்வெல் உள்ளிட்ட நீர் நிலைகள் வறண்டு, இப்பகுதிகள் கடும் வறட்சியை சந்திக்கின்றன. எனவே, பாலாறு, நல்லாறு மற்றும் ஓடைகளிலுள்ள ஆக்கிரமிப்புகளை முழுமையாக அகற்றி, நீர் வழித்தடங்களை மீட்க வேண்டும்.
பருவமழை காலங்களில் கிடைக்கும் நீரை முழுமையாக சேமிக்கும் வகையில், தடுப்பணைகள் கட்ட வேண்டும், என பல ஆண்டுகளாக விவசாயிகள் வலியுறுத்தி வருகின்றனர்.
ஆறு ஆண்டுக்கு முன், பாலாற்றில் உள்ள ஆக்கிரமிப்புகள் குறித்து அளவீடு செய்யப்பட்டது. இந்நிலையில், கடந்தாண்டு, நீர் நிலைகளிலுள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டதன் அடிப்படையில், அரசு துறை அதிகாரிகள் இணைத்து, திருமூர்த்தி அணைப்பகுதியில், 300 மீட்டருக்கு மட்டும் ஆக்கிரமிப்பு அகற்றினர்.
ஆனால், அப்போது, வெட்டப்பட்ட மரங்கள் ஒரு ஆண்டாகியும் அகற்றப்படாமல், நீர் வழித்தடத்தை மறித்து காணப்படுகின்றன. எனவே, அரசு துறை அதிகாரிகளை ஒருங்கிணைத்து, தனி குழு அமைத்து, 40 கி.மீ., துாரம் அமைந்துள்ள பாலாற்றின் இரு கரையிலும் உள்ள ஆக்கிரமிப்புகளை முழுமையாக அகற்ற வேண்டும்.
ஆற்றுப்படுகையை துார்வாரி, மண், முட்புதர்களை அகற்றி, எளிதில் நீர் செல்லும் வகையில், பராமரிக்க வேண்டும். வழியோர கிராமங்கள் பயன்பெறும் வகையில், தேவையான இடங்களில் தடுப்பணைகள் அமைக்கவும், மீண்டும் ஆக்கிரமிப்புகள் உருவாகாதவாறு, வெள்ள தடுப்புசுவர்களும் குறிப்பிட்ட பகுதிகளில் அமைக்க வேண்டும் என்கின்றனர் விவசாயிகள்.

