புடவை வியாபாரி மீது போதை கும்பல் தாக்குதல்; திருத்தணியில் மீண்டும் ஒரு அதிர்ச்சி சம்பவம்
புடவை வியாபாரி மீது போதை கும்பல் தாக்குதல்; திருத்தணியில் மீண்டும் ஒரு அதிர்ச்சி சம்பவம்
ADDED : ஜன 01, 2026 05:05 AM

திருத்தணி: திருத்தணியில் ஒடிஷா வாலிபரை, 'கஞ்சா' சிறுவர்கள் நான்கு பேர், சரமாரியாக அரிவாளால் வெட்டிய விவகாரம் ஓய்வதற்குள், அதே ஊரில், புடவை வியாபாரி ஒருவரை, போதை ஆசாமிகள் தாக்கிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
திருவள்ளூர் மாவட்டம், திருத்தணி ரயில் நிலையம் அருகே, கடந்த 27ம் தேதி, கஞ்சா போதையில் இருந்த சிறுவர்கள், ஒடிஷா வாலிபர் சுராஜ், 20 என்பவரை அரிவாளால் வெட்டி, அதை வீடியோவாக பதிவு செய்து, சமூக வலைதளங்களில் பரப்பினர். பதைபதைக்க வைக்கும் வகையில் அந்த காட்சிகள் இருந்தன.
இந்த சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தி உள்ளது. தமிழகம் போதை பொருட்களின் புகலிடமாக மாறி வருகிறது என, பல்வேறு அரசியல் கட்சி தலைவர்களும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.
இது தொடர்பாக, நான்கு சிறுவர்களை போலீசார் கைது செய்தனர். பாதிக்கப்பட்ட வடமாநில வாலிபர், 'டாக்டர்களிடம் எழுதி கொடுத்துவிட்டு, சொந்த ஊருக்கு சென்று விட்டார்' என, போலீசார் கூறினர்.
இந்த விவகாரம் ஓய்வதற்குள், திருத்தணி ரயில் நிலையத்தில் போதை ஆசாமிகள், நேற்று மீண்டும் ஒரு அட்டூழியத்தில் ஈடுபட்டுள்ளனர்.
திருவள்ளூர் மாவட்டம், திருத்தணி நேரு நகரைச் சேர்ந்தவர் ஜமால், 40; புடவை வியாபாரி. இவர், நேற்று முன்தினம் இரவு, திருத்தணி ரயில் நிலையத்தில் நின்றிருந்தார். அப்போது, அங்கு வந்த இரண்டு வாலிபர்கள், ஜமாலை, சரமாரியாக கைகளால் தாக்கிவிட்டு சென்றனர்.
தாக்குதலில் காயமடைந்த ஜமால், திருத்தணி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். அவரிடம், திருத்தணி போலீசார் விசாரித்தபோது, 'திருத்தணி ரயில் நிலையம் அருகே சிறுநீர் கழிக்க சென்றேன். எதற்காக என்னை அடித்தார்கள் என்றே தெரியவில்லை' என்றார்.
தாக்குதல் குறித்து, திருத்தணி போலீசாரும், ரயில்வே போலீசாரும் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.
தனி போலீசார் திருத்தணி சம்பவத்தை அடுத்து, வட மாநில தொழிலாளர்களின் பிரச்னைக்கு தீர்வு காண, காவல் நிலையம்தோறும் தனியாக எஸ்.ஐ., மற்றும் இரண்டு போலீசார் நியமிக்கப்பட்டு உள்ளனர். அவர்கள், வட மாநில தொழிலாளர்கள் தொடர்பான பதிவேடுகளையும் பராமரிப்பர் என, போலீஸ் உயர் அதிகாரிகள் தெரிவித்தனர்.

