தி.மு.க.,வை மட்டுமே நம்பி இருக்கவில்லை: திருமா பேச்சால் தொண்டர்கள் குழப்பம்
தி.மு.க.,வை மட்டுமே நம்பி இருக்கவில்லை: திருமா பேச்சால் தொண்டர்கள் குழப்பம்
ADDED : ஏப் 21, 2025 06:25 AM

சென்னை : “நாம் தி.மு.க.,வை மட்டுமே நம்பி கிடக்கிறோம் என்ற தோற்றத்தை ஏற்படுத்த முயற்சிக்கின்றனர். தேர்தல் அரசியலில் நம்மால் எந்த முடிவையும் எடுக்க முடியும்,” என, வி.சி., தலைவர் திருமாவளவன் தெரிவித்தார்.
அவர் தன் கட்சியினரிடம், முகநுால் நேரலையில் பேசியதாவது:
சென்னையில் இன்று காலை மாவட்டச் செயலர்கள் கூட்டம்; மதியம் கட்சி மறு சீரமைப்புக்கான மேலிட பொறுப்பாளர்கள் கூட்டம் நடக்க உள்ளது.
மன அழுத்தம்
வக்ப் திருத்த சட்டத்துக்கு எதிராக, அடுத்த மாதம் நடத்த உள்ள பேரணி, மாநிலம் தழுவிய என் சுற்றுப்பயணம் குறித்து விவாதிக்க உள்ளோம். இக்கூட்டங்களுக்கு பிறகே, மறுசீரமைப்பு பணிகளில் கவனம் செலுத்த முடியும்.
இதற்கென நாட்களை ஒதுக்கினாலும், அந்நாட்களில் நிகழ்ச்சிகளை திணித்து கட்சியினர் கட்டாயப்படுத்துவதால், மறுசீரமைப்பு பணிகளில் கவனம் செலுத்த முடியவில்லை. இது மன அழுத்தத்தை தருகிறது.
மே மாதம் நிகழ்ச்சிகளுக்கு அழைக்கும் பணிகளை, நிர்வாகிகள் முற்றாக கைவிட வேண்டும். அனைத்து கட்சியினரும் தேர்தலை நோக்கி காய் நகர்த்தி வருகின்றனர்.
பா.ஜ., அரசு சாதுர்யமாக காய் நகர்த்தி, அரசியலமைப்பு சட்டத்தை நீர்த்து போக வைக்கும், அனைத்து வேலைகளையும் செய்கிறது. இதை அமைதியாக வேடிக்கை பார்க்க முடியாது. தேர்தல் களத்தில், அவர்களை முறியடிக்க வேண்டியது எவ்வளவு முக்கியமோ, அதைவிட அரசியலமைப்பு சட்டத்தை பாதுகாப்பது, பன்மடங்கு முக்கியம்.
அரசியல் விவாதங்களில், நாம் பங்கேற்க வேண்டும்; ஆனால், சிக்கி கொள்ளக்கூடாது. தமிழகத்தில் பா.ஜ., வலிமை பெறக்கூடாது எனக் கருதுகிறோம். ஆனால், நாடு தழுவிய அளவில், அவர்கள் அனைத்தையும் கட்டுப்பாட்டில் வைத்துள்ளனர். தமிழக அரசியலில், தேவையற்ற உரையாடல்களை திட்டமிட்டு உருவாக்குகின்றனர். ஜாதிய, மதவாத சக்திகளை ஊக்கப்படுத்துகின்றனர்.
தி.மு.க., கூட்டணி பாதுகாப்பாக இருக்க வேண்டும் என்ற அடிப்படையில் கருத்துகளை முன்வைப்பதால், உதிரிகளை வைத்து வி.சி., கட்சிக்கு எதிரான அவதுாறுகளை பரப்புகின்றனர்.
துருப்புச் சீட்டு
நாம், தி.மு.க.,வை மட்டுமே நம்பி கிடக்கிறோம் என்பதை போன்ற தோற்றத்தை உருவாக்குகின்றனர். அந்த அற்பர்களின் அவதுாறுகளை கடந்து சென்றாலும், கட்சியினர் ஒரு தெளிவை பெற வேண்டும்.
தேர்தல் அரசியலில், எந்த முடிவையும் நம்மால் எடுக்க முடியும். அது ஒன்றும் பெரிய கம்ப சூத்திரம் இல்லை. எல்லா கதவுகளையும் திறந்து வைத்திருப்பது, ஒரே நேரத்தில் பலருடன் பேரம் பேசுவது, கூடுதலாக பேரம் படிகின்ற இடத்தில் கூட்டணி வைப்பது, ராஜதந்திரம் அல்ல. அது சுயநலம் சார்ந்த சந்தர்ப்பவாத அரசியல். நாம் அதில் ஈடுபாடு காட்டவில்லை.
எந்த எதிர்பார்ப்பும் இல்லாமல், நிபந்தனையும் விதிக்காமல், ஒரு கூட்டணியில் தொடர்கிறோம் என்றால், அதற்கு துணிவு, தெளிவு, தொலைநோக்கு பார்வை வேண்டும். இதை புரிந்துகொள்ள முடியாதவர்கள், அவதுாறு பரப்புகின்றனர்.
எனவே, அரசியல் விவாதங்களில், தலைமை முடிவை அறிந்து, மூத்த நிர்வாகிகள் எச்சரிக்கையுடன் கருத்துகளை பகிர வேண்டும். தி.மு.க., கூட்டணியை பலவீனப்படுத்த, அவர்களுக்கு இருக்கும் துருப்புச் சீட்டாக வி.சி.,யை கருதுகின்றனர். ஆளுங்கட்சியுடன் இருக்கும் முரணும், கூட்டணி தொடர்பான உத்தியும் வெவ்வேறானவை. இவ்வாறு, அவர் பேசினார்.

