போன் நம்பர் எதுக்கு கேக்கறாங்க தெரியுமா... நான் சொல்லவே தேவையில்லை: பழனிசாமி
போன் நம்பர் எதுக்கு கேக்கறாங்க தெரியுமா... நான் சொல்லவே தேவையில்லை: பழனிசாமி
ADDED : ஜூலை 15, 2025 03:24 AM

சேலம் : சேலம் மாநகர் மாவட்ட அ.தி.மு.க.,விற்கு புதிய அலுவலகம் கட்டப்பட்டு, நேற்று திறப்பு விழா நடந்தது. அலுவலகத்தை திறந்து வைத்த பின், கட்சியின் பொதுச்செயலர் பழனிசாமி அளித்த பேட்டி:
அ.தி.மு.க., தலைமையிலான கூட்டணி வலிமையாக உள்ளது. இதில் யாரும் குழப்பம் ஏற்படுத்த முடியாது.
வரும் 2026 சட்டசபை தேர்தலில் அ.தி.மு.க., தனி பெரும்பான்மை பெற்று ஆட்சி அமைக்கும். இதில் யாருக்கும் எவ்வித சந்தேகமும் வேண்டாம்.
அடுத்தாண்டு நடைபெறும் சட்டசபை தேர்தலுக்காக, 'உங்களுடன் ஸ்டாலின்' திட்டத்தை துவங்கி உள்ளனர். நான்கரை ஆண்டுகளாக எதையும் செய்யாமல், ஆட்சியின் இறுதி கட்டத்தில் புதிது புதிதாக ஏதேதோ சொல்லி, மக்களை ஏமாற்றப் பார்க்கின்றனர்.
'உங்களுடன் ஸ்டாலின்' திட்டம் வாயிலாக தி.மு.க.,வினர் வீடு வீடாகச் சென்று, ஒவ்வொருவரின் மொபைல் எண்ணையும் குறித்துக் கொள்கின்றனர். இதெல்லாம் எதற்காக பயன்படுத்த போகின்றனர் என்பதை நான் சொல்ல தேவையில்லை.
இப்படி சேகரிக்கப்படும் அனைத்து எண்களும், தி.மு.க.,வின் ஐ.டி., அணிக்குச் செல்கிறது. அவர்கள் தேர்தல் நேரத்தில் அதை ஓட்டுக்காக பயன்படுத்துவர்.
அ.தி.மு.க., ஆட்சியில் இருந்தபோது, தி.மு.க., தலைவர் ஸ்டாலின் ஊர் ஊராக சென்றார். மக்கள் முன் ஒரு பெட்டியை வைத்து, அதில் குறைகளை எழுதிப் போடுங்கள்; ஆட்சிக்கு வந்த ஒரே மாதத்தில் பிரச்னையை தீர்க்கிறேன் என்றார்.
நான்காண்டுகள் கடந்த பின்பும், ஒரு பிரச்னையும் தீரவில்லை. ஆனால், பெட்டி காணாமல் போய் விட்டது. அ.தி.மு.க., கட்டணியின் மவுசு மக்களுக்கு தெரியத் தெரிய, நிறைய கட்சிகள் கூட்டணி நோக்கி வரும்.
கனிம வளத் துறை உள்பட தமிழகத்தின் அனைத்து துறைகள் வாயிலாகவும் கொள்ளையோ கொள்ளை நடக்கிறது. அ.தி.மு.க., ஆட்சிக்கு வந்த பின், ஒவ்வொரு துறை ஊழல் மீதும் விசாரித்து நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு அவர் கூறினார்.

