தி.மு.க., கூட்டணியா த.வெ.க., கூட்டணியா? வரும் 15ல் காங்., மேலிடம் ஆலோசனை
தி.மு.க., கூட்டணியா த.வெ.க., கூட்டணியா? வரும் 15ல் காங்., மேலிடம் ஆலோசனை
ADDED : டிச 13, 2025 06:01 AM

தி.மு.க., கூட்டணியில் நீடிப்பதா அல்லது த.வெ.க.,வுடன் கூட்டணி அமைப்பதா என்பது குறித்து, தமிழக காங்கிரஸ் முன்னணி தலைவர்கள் 20 பேரிடம், நாளை மறுதினம், டில்லி மேலிட தலைவர்கள் கருத்து கேட்க திட்டமிட்டுள்ளனர்.
த.வெ.க., தலைவர் விஜயை, சென்னையில் அவரது வீட்டில், அகில இந்திய காங்கிரஸ் தரவு பகுப்பாய்வு பிரிவு தலைவர் பிரவீன் சக்கரவர்த்தி சந்தித்து பேசினார்.
ராகுல் துாதராக சந்தித்த பிரவீன் சக்கரவர்த்தியிடம், 'எங்கள் கொள்கைக்கு ஏதுவாக இருக்கும் காங்கிரசுடன் கூட்டணி அமைக்க தயார். எங்களுடன் கூட்டணி அமைத்தால், ஆட்சி அதிகாரத்தில் பங்கு தருவோம்' என விஜய் கூறியுள்ளார்.
இதற்கிடையில், தமிழக காங்கிரசில் உள்ள தி.மு.க., ஆதரவு கோஷ்டியினர், பிரவீன் மீது நடவடிக்கை எடுக்குமாறு மேலிடத்திற்கு கோரிக்கை விடுத்தனர். ஆனால், கட்சி மேலிடம் கண்டுகொள்ளவில்லை. அதோடு, விஜயை சந்தித்து பேசியது குறித்து பிரவீன் சக்கரவர்த்தி விளக்கம் அளித்தார்.
தமிழக காங்கிரசில் கூட்டணி விஷயத்தை பொறுத்தவரை, 'தி.மு.க., கூட்டணியில் நீடிக்க வேண்டும்' என ஒரு கோஷ்டியும், 'விஜய் கட்சியுடன் கூட்டணி சேர வேண்டும்' என மற்றொரு கோஷ்டியும் விரும்புகின்றன. இதனால், யாருடைய முடிவை ஏற்பது என்ற குழப்பம் மேலிடத்திற்கு ஏற்பட்டு உள்ளது.
இந்நிலையில், காங்., கட்சியில் தமிழகத்துக்கான மேலிட பொறுப்பாளர் கிரிஷ் ஷோடங்கரிடம், 'ஆட்சியில் பங்கு மற்றும் அதிக தொகுதிகள் தந்தால், தி.மு.க., அணியில் நீடிக்கலாம்; இல்லையென்றால், த.வெ.க., அணியில் இணையலாம். தி.மு.க.,வுடன் இணைந்திருந்தால், காங்கிரஸ் வளர்ச்சி பெறாது' என தமிழக காங்., நிர்வாகிகள் சிலர் தெரிவித்து உள்ளனர்.
இந்நிலையில், டில்லியில் நாளை, ஓட்டு திருட்டை கண்டித்து, காங்., - எம்.பி., ராகுல் தலைமையில் பேரணி நடக்கிறது. அதில், தமிழக காங்., சார்பில், 1,000 பேர் பங்கேற்கின்றனர். நாளை மறுதினம், கூட்டணி குறித்து ஆலோசனை கூட்டம் நடைபெற உள்ளது.
அதில், தொகுதி பங்கீடு குறித்து பேச்சு நடத்தும் ஐவர் குழுவினர், தமிழக காங்., முன்னாள் தலைவர்கள், எம்.பி.,க்கள் மற்றும் முன்னணி தலைவர்கள் என, மொத்தம் 20 பேர் பங்கேற்கின்றனர். அவர்களிடம் தனித்தனியாக கருத்து கேட்க, டில்லி மேலிட தலைவர்கள் திட்ட மிட்டுள்ளனர்.
அந்த கூட்டத்தில், 'தி.மு.க., கூட்டணியில் நீடிப்பதா அல்லது த.வெ.க.,வுடன் கூட்டணி அமைப்பதா?' என்பது குறித்து முக்கிய ஆலோசனை நடைபெறுகிறது.
- நமது நிருபர் -

