தி.மு.க., - மா.கம்யூ., பேச்சு தொகுதி பங்கீட்டில் இழுபறி
தி.மு.க., - மா.கம்யூ., பேச்சு தொகுதி பங்கீட்டில் இழுபறி
ADDED : பிப் 26, 2024 02:53 AM

சென்னை, : ''தி.மு.க.,வுடன் தொகுதி பங்கீடு பேச்சு இணக்கமாக நடந்தது; எந்த நெருடலும் இல்லை,'' என, மா.கம்யூ., தொகுதி பங்கீட்டு குழு தலைவர் சம்பத் கூறினார்.
தி.மு.க., கூட்டணியில், லோக்சபா தேர்தலுக்கான தொகுதி பங்கீடு பேச்சு தொடர்ந்து நடந்து வருகிறது. இந்திய யூனியன் முஸ்லீம் லீக் கட்சிக்கு ராமநாதபுரம்; கொங்குநாடு மக்கள் தேசிய கட்சிக்கு நாமக்கல் தொகுதி ஒதுக்கப்பட்டு உள்ளது. காங்., - வி.சி., - ம.தி.மு.க., கட்சிகளுடன் பேச்சு இழுபறியில் உள்ளது.
இந்நிலையில், மா.கம்யூ., கட்சியின் மத்திய குழு உறுப்பினர் சம்பத் தலைமையிலான தொகுதி பங்கீட்டு குழுவினர், அறிவாலயத்திற்கு நேற்று வந்தனர். தி.மு.க., தொகுதி பங்கீட்டு குழு தலைவர் டி.ஆர்.பாலு உள்ளிட்ட நிர்வாகிகளுடன், இரண்டாம் கட்ட பேச்சு நடத்தினர்.
முந்தைய தேர்தலில் மதுரை, கோவை தொகுதிகளில் வெற்றி பெற்றதால், அந்த தொகுதிகளுடன் கூடுதலாக கடலுார் தொகுதியை மா.கம்யூ., எதிர்பார்க்கிறது. மதுரை, மயிலாடுதுறை தொகுதிகளை ஒதுக்க தி.மு.க., முன்வந்ததால், உடன்பாடு எட்டப்படவில்லை.
பின், சம்பத் கூறியதாவது:
கூட்டணி பேச்சு இணக்கமாக இருந்தது; எந்த நெருடலும் இல்லை. மனம் திறந்து பேசினோம். தொடர்ந்து விவாதிக்க வேண்டியுள்ளது. அடுத்தகட்ட பேச்சு விரைவில் நடக்கும்; தொகுதி உடன்பாடு ஏற்படும். நல்ல செய்தியை விரைவில் தெரிவிப்போம்.
இவ்வாறு அவர் கூறினார்.
இதனிடையே, இ.கம்யூ., நிர்வாகிகளுடன் தொகுதி பங்கீடு குறித்து, அறிவாலயத்தில் இன்று பேச்சு நடத்தப்பட உள்ளது.

