ம.தி.மு.க., கம்யூனிஸ்ட்கள், வி.சி., போட்ட திட்டத்தை முறியடித்த தி.மு.க.,
ம.தி.மு.க., கம்யூனிஸ்ட்கள், வி.சி., போட்ட திட்டத்தை முறியடித்த தி.மு.க.,
ADDED : டிச 20, 2025 05:23 AM

சென்னை: நுாறு நாள் வேலை திட்டத்தை முடக்கும் சட்டத்தை திரும்ப பெற வலியுறுத்தி, விடுதலை சிறுத்தைகள் கட்சியும், கம்யூனிஸ்ட் கட்சிகளும் இணைந்து தனி ஆர்ப்பாட்டம் நடத்தினால், கூட்டணி ஒற்றுமையை பாதிக்கும் என்பதால், தி.மு.க., தலைமையில் மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி கட்சிகள் பங்கேற்கும் ஆர்ப்பாட்டமாக அது மாற்றப்பட்டுள்ளது.
மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டம் என்கிற பெயர், வளர்ந்த பாரத வேலைவாய்ப்பு மற்றும் வாழ்வாதார ஊரக உறுதியளிப்பு சட்டம் என மாற்றப்பட்டுள்ளது. இதை எதிர்த்து, தமிழக காங்கிரஸ் சார்பில், சென்னையில் நேற்று முன்தினம் கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது.
அதையடுத்து, வி.சி., இந்திய கம்யூனிஸ்ட் கட்சி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிகள் கூட்டாக, வரும் 23ம் தேதி, தமிழகம் முழுதும் ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என அறிவித்தன.
இந்த ஆர்ப்பாட்டத்தில், ம.தி.மு.க.,வும் பங்கேற்கும் என, அக்கட்சி பொதுச்செயலர் வைகோ தெரிவித்தார்.
இப்படி, தி.மு.க., கூட்டணியில் உள்ள கட்சிகள் தனித்தனியாக போராட்டம் நடத்தினால், தேர்தல் நேரத்தில் கூட்டணி ஒற்றுமை கேள்விக்குறியாகி விடும் என, ஆளும் தரப்பு கருதுகிறது.
அதனால், தி.மு.க., தலைமையில் உள்ள மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி கட்சிகள் இணைந்து, வரும் 24ல் போராட்டம் நடத்த முடிவு செய்யப் பட்டுள்ளது.
அது தொடர்பான அறிக்கையில், 'தேசிய ஊரக வேலை உறுதியளிப்பு சட்டத்தை சிதைக்கும் புதிய சட்டத்தை திரும்ப பெற வலியுறுத்தி, வரும் 24ம் தேதி சென்னையிலும், அனைத்து ஒன்றியங்களிலும் ஆர்ப்பாட்டம் நடத்தப்படும்' என கூறப்பட்டுள்ளது.

