பிராமண சமூகத்தினருக்கு 'சீட்'; தி.மு.க., பிரசார வியூகம்
பிராமண சமூகத்தினருக்கு 'சீட்'; தி.மு.க., பிரசார வியூகம்
ADDED : செப் 14, 2025 04:22 AM

நலிந்த பிராமணர்களுக்கு நல வாரியம் அமைக்கும் வாக்குறுதியை, தி.மு.க., தேர்தல் அறிக்கையில் இடம்பெறச் செய்ய முதல்வர் ஸ்டாலின் ஆலோசித்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
முன்னாள் முதல்வர் ஜெயலலிதா தலைமையில் அ.தி.மு.க., செயல்பட்டபோது, பிராமண சமூகத்தினருக்கு தேர்தலில் போட்டியிட வாய்ப்பளிக்கப்பட்டது.
அவர் மறைவுக்கு பின், அ.தி.மு.க., பொதுச்செயலர் பழனிசாமியும், கடந்த 2021 சட்டசபை தேர்தலில், பிராமணர் சமூகத்தினருக்கு, 'சீட்' வழங்கினார்.
தற்போது, 2026 சட்டசபை தேர்தலை, பா.ஜ., கூட்டணியுடன் அ.தி.மு.க., சந்திக்கிறது. எனவே, இரு கட்சிகளிலும், பிராமணர் சமூகத்தினருக்கு, 'சீட்' வழங்கப்படும்.
தி.மு.க.,வில் பிராமணர் சமூகத்தினருக்கு தேர்தலில் போட்டியிட வாய்ப்பு தருவதில்லை என்ற அதிருப்தி நீடித்து வருகிறது. எனவே, வரும் சட்டசபை தேர்தலில், 'எல்லாருக்கும் எல்லாம்' என்ற அடிப்படையில், பிராமண சமூகத்தினருக்கு 'சீட்' வழங்குமாறு, முதல்வரிடம் பிராமண சமூகத்தைச் சேர்ந்த பிரமுகர்கள் சிலர் விருப்பம் தெரிவித்துள்ளனர்.
பிராமண சமூகத்தினருக்கு சில தொகுதிகளை ஒதுக்கினால், 'சமூக நீதி, எல்லாருக்கும் எல்லாம்' என்ற இலக்கு நிறைவேறும் என, தி.மு.க., தலைமையும் கருதுகிறது.
பிராமண சமூகத்தினரின் கோரிக்கையை நிறைவேற்றினால், அவர்களின் ஓட்டு தி.மு.க.,வுக்கு கிடைக்கும் எனவும், பிராமணர் நல வாரியம் அமைக்கும் கோரிக்கையை தி.மு.க., தேர்தல் அறிக்கையில் இடம்பெறச் செய்யவும் முதல்வர் ஸ்டாலின் ஆலோசித்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இதுகுறித்து கட்சி வட்டாரங்கள் கூறியதாவது:
சட்டசபை தேர்தலில், அ.தி.மு.க., - தி.மு.க., இடையே கடும் போட்டி இருக்கும். சில லட்சம் ஓட்டுகள் வித்தியாசம் கூட, ஆட்சியை நிர்ணயிக்கலாம். தமிழகத்தில் பிராமண சமூகத்தினர், 40 லட்சம் பேர் உள்ளனர்.
இவர்களில், 5 லட்சம் பேர் வறுமை நிலையில் உள்ளனர். எனவே, பிராமணர்களின் ஓட்டுகளை கவர, தி.மு.க., திட்டம் வகுத்துள்ளது.
ஆந்திரா, தெலுங்கானா, கர்நாடக மாநிலங்களில், நலிந்த பிராமணர்களின் கல்வி, சமூக மேம்பாட்டிற்காக, 'பிராமணர்கள் நல வாரியம்' அமைத்து, 50 கோடி ரூபாய் வரை வழங்கி உள்ளனர்.
அதேபோல், முதல்வர் ஸ்டாலினும் வழங்கினால், நலிந்த பிராமணர் குடும்பத்தைச் சேர்ந்தவர்கள், தி.மு.க.,வுக்கு ஆதரவாக மாறுவதோடு, அது தி.மு.க., ஆட்சி அமையவும் உதவும்.
எனவே, பிராமணர் ஓட்டு வங்கிக்காக, தேர்தலில் போட்டியிட வாய்ப்பு வழங்குவது உட்பட அவர்களின் கோரிக்கைகளை நிறைவேற்றுவது குறித்து, தி.மு.க., தலைமை ஆலோசித்து வருகிறது. இவ்வாறு அந்த வட்டாரங்கள் தெரிவித்தன.
- நமது நிருபர் -