தமிழகத்தை நாசம் செய்வது யார் என தி.மு.க., - அ.தி.மு.க., இடையே போட்டி: சீமான்
தமிழகத்தை நாசம் செய்வது யார் என தி.மு.க., - அ.தி.மு.க., இடையே போட்டி: சீமான்
ADDED : ஜன 04, 2026 04:25 AM

திருச்சி: ''விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் தேவைக்கேற்ப மாற்றி மாற்றி பேசுகிறார்,'' என நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்தார்.
திருச்சியில் நேற்று அவர் அளித்த பேட்டி:
இலங்கையில் என் இனத்தின் கனவை அழித்து நாசமாக்கிய காங்கிரசுக்கு ஓட்டுகளை வாங்கி தந்து, அரசியல் அதிகாரத்தையும் பெற்றுக் கொடுத்ததால், இன்று விடுதலைப்புலிகள் தலைவர் பிரபாகரன் படம் வைத்தால் வர மாட்டோம் என்கின்றனர்.
திராவிடம் என்பது தமிழ் தேசியத்திற்கு எதிரானது என்று எனக்கு கற்பித்தவர், விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன். தற்போது, திராவிடமும், தமிழ் தேசியமும் ஒன்று தான் என, தேவைக்கேற்ப மாற்றி மாற்றி திருமாவளவன் பேசுகிறார்.
திராவிடம் தமிழை எங்கே காக்கிறது? தமிழகத்தில் தமிழ் படிக்கவோ, எழுதவோ தெரியாதவர்கள் தான் அதிகம் உள்ளனர். ஹிந்தி எதிர்ப்புக்காக போராடிய மாணவர்களை துப்பாக்கியால் சுடச் சொன்னவர் ஈ.வெ.ரா., இங்கு, ஹிந்தி எதிர்ப்பு என்பது நாடகம் தான்.
தமிழக ஆட்சி அதிகாரத்துக்கு தெரியாமல் போதை பொருள் விற்பனைக்கு வருவதாக கூறுவது வெட்கமாக இல்லையா? தெருவுக்கு தெரு மதுக் கடையை திறந்து வைத்து, விற்பனையை அதிகப்படுத்தி விட்டு, 'போதை பொருளை தடுப்போம்' என்று முதல்வர் ஸ்டாலின் கூறுவது வேடிக்கையாக உள்ளது.
இந்த மண்ணில் நிலவும் திராவிடம் என்ற ஆட்சி முறையை மாற்றுவது தான் மாற்றம். கூட்டணி மாறுவதால் ஆட்சி மாறும்; ஆட்சி முறை மாறாது.
தி.மு.க.,வுக்கு மாற்று அ.தி.மு.க., என கூறுவது வெறும் வார்த்தையில் தான்; கொள்கையில், கோட்பாட்டில் எந்த மாற்றமும் கிடையாது.
துாத்துக்குடி துப்பாக்கிச் சூடு, கோடநாடு கொலை, கொள்ளை விவகாரம் போன்றவற்றில் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை; இருவரும் கூட்டு களவாணிகள்.
தமிழகத்தை யார் அதிகம் நாசம் செய்வது என்பதில் தான் தி.மு.க.,வுக்கும், அ.தி.மு.க.,வுக்கும் இடையே போட்டி உள்ளது. இவ்வாறு அவர் தெரிவித்தார்.

