த.வெ.க.,வுடனான கூட்டணி பேச்சு; விஜயை சந்தித்தாரா வேணுகோபால்?
த.வெ.க.,வுடனான கூட்டணி பேச்சு; விஜயை சந்தித்தாரா வேணுகோபால்?
ADDED : டிச 23, 2025 05:40 AM

- நமது நிருபர் -
த.வெ.க., தலைவர் விஜயை தனியாக சந்தித்து பேச திட்டமிட்டிருந்த காங்கிரஸ் பொதுச்செயலர் வேணுகோபால், அச்சந்திப்பை திடீரென தவிர்த்து விட்டு, போனிலேயே பேசியதாக தெரிகிறது.
கடந்த இரு நாட்களுக்கு முன் சென்னை வந்த வேணுகோபால், விஜயை ரகசியமாக சந்தித்து பேச திட்டமிட்டிருந்தார்.
அவரது வருகை குறித்து கட்சி நிர்வாகிகளுக்கும், மத்திய -- மாநில உளவுத்துறை போலீசாருக்கும் தெரிய வந்ததால், நேரடியாக இருவரும் சந்திக்கும் திட்டம், கடைசி நேரத்தில் தவிர்க்கப்பட்டது.
அதனால், ஏற்கனவே திட்டமிட்டிருந்த, பட்டினப்பாக்கத்தில் உள்ள நட்சத்திர ஹோட்டலில் வேணுகோபால் தங்கவில்லை; சென்னை அண்ணா சாலை அருகே உள்ள நட்சத்திர ஹோட்டலில் தங்கினார்.
வேணுகோபால் வருகை குறித்த தகவல் தெரிய வந்ததும், அவரை வரவேற்க, தமிழக காங்கிரஸ் எம்.பி., - எம்.எல்.ஏ.,க்கள் விமான நிலையம் சென்றனர்.
அவர்களை பார்த்த வேணுகோபால், தன்னை சந்திக்க யாரும் ஹோட்டலுக்கு வர வேண்டாம் என கூறி சென்று விட்டார்.
அன்று இரவில் சென்னையில் தங்கிய வேணுகோபால், த.வெ.க.,வுடனான கூட்டணி குறித்து நிறைய பேரை சந்தித்து பேசியதாக தகவல் வெளியாகி உள்ளது.
நேற்று முன்தினம் சென்னையில் இருந்து கோவைக்கு சென்ற அவர், அங்கிருந்து ஊட்டிக்கு சென்று தங்கியதாகவும், அங்கு சிலரை சந்தித்ததாகவும் கூறப்படுகிறது.

