sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், டிசம்பர் 17, 2025 ,மார்கழி 2, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

ப்ரீமியம்

/

பழநி பாதயாத்திரை பக்தர்கள் வசதிகளில் தொடர் பின்னடைவு: கோயிலுக்கு வரும் பக்தர்கள் பெரும் சிரமம்

/

பழநி பாதயாத்திரை பக்தர்கள் வசதிகளில் தொடர் பின்னடைவு: கோயிலுக்கு வரும் பக்தர்கள் பெரும் சிரமம்

பழநி பாதயாத்திரை பக்தர்கள் வசதிகளில் தொடர் பின்னடைவு: கோயிலுக்கு வரும் பக்தர்கள் பெரும் சிரமம்

பழநி பாதயாத்திரை பக்தர்கள் வசதிகளில் தொடர் பின்னடைவு: கோயிலுக்கு வரும் பக்தர்கள் பெரும் சிரமம்


UPDATED : ஜன 10, 2024 12:42 AM

ADDED : ஜன 10, 2024 12:27 AM

Google News

UPDATED : ஜன 10, 2024 12:42 AM ADDED : ஜன 10, 2024 12:27 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஒளிரும் குச்சிகள் வழங்காததால் இரவில் தத்தளிக்கும் அவலம், நடைபாதைகள் ஆக்கிரமிப்பில் உள்ளதால் ரோட்டிற்கு வரும் பக்தர்களால் விபத்து ஆபத்து, தைப்பூச விழாவின் போது பாதயாத்திரை பக்தர்கள் வருவர் என்பது தெரிந்தும் நடக்கும் ரோடு பணிகளால் கால்களை பதம் பார்க்கும் கற்கள் என பழநி முருகன் கோயிலுக்கு வரும் பக்தர்கள் பெரும் சிரமத்தை சந்திக்கின்றனர்.

பக்தர்கள் காணிக்கை மூலம் கோடிக்கணக்கில் வருவாய் ஈட்டும் கோயில் நிர்வாகம் பக்தர்கள் வசதிகளில் தொடர்ந்து புறக்கணிக்கும் போக்கையே தொடர்வது பக்தர்கள் மட்டுமன்றி மக்களிடையே பெரும் அதிருப்தியை ஏற்படுத்தி வருகிறது .

தை மாதம் என்றாலே பொங்கல் பண்டிகையுடன் முருகன் கோயில்களில் தைப்பூசத்திருவிழா முக்கிய இடம் பெறுகிறது. இதற்காக முருக பக்தர்கள் விரதமிருந்து தமிழகத்தின் பல பகுதிகளிலிருந்து பாதயாத்திரையாக முருகன் கோயில்களுக்கு சென்று வழிபாடு நடத்துகின்றனர். அறுபடை முருகன் கோயில்களில் பிரசித்தி பெற்ற கோயிலாக பழநி முருகன் கோயில் உள்ளது.

இங்கு தினமும் லட்சக்கணக்கான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்கின்றனர். ஆண்டுதோறும் நடக்கும் தைப்பூசத்திருவிழா பார்போற்றும் அளவிற்கு நடக்கிறது. இதற்காக பக்தர்கள் காவடி ஏந்தி பாதயாத்திரையாக வருகின்றனர். தை மாதம் துவங்கும் முன்பே பக்தர்கள் வருகை அதிகரிக்கிறது . பழநி செல்லும் ரோடுகளில் முருகபக்தர்கள் கூட்டம்கூட்டமாக பாதியாத்திரை செல்வதை காண முடிகிறது .Image 1217676திருச்சி வழியாக வரும் பக்தர்கள் மணப்பாறை, வடமதுரை, வேடசந்துார், ஒட்டன்சத்திரம் வழியாகவும், மதுரையிலிருந்து வருபவர்கள் செம்பட்டி,ஒட்டன்சத்திரம் வழியாகவும், நத்தம்,சாணார்பட்டி,ஒட்டன்சத்திரம் வழியாகவும்,திருப்பூர்,தாராபுரம் வழியாகவும் பழநி முருகன் கோயிலுக்கு பக்தர்கள் சாரைசாரையாக வருகின்றனர்.

இதில் பக்தர்கள் திண்டுக்கல் மாவட்டத்தின் வழியாக வருவதால் நெடுஞ்சாலைத்துறை, பழநி முருகன் கோயில் நிர்வாகத்தினர் பாதாயாத்திரை பக்தர்களுக்காக தங்குமிடங்கள்,நடை பாதைகள்,குடிதண்ணீர் உள்ளிட்ட பல்வேறு வசதிகளை செய்துள்ளனர். ஜன.25ல் தைப்பூசத்திருவிழா நடக்க இருப்பதால் தற்போதிலிருந்தே பழநிக்கு பக்தர்கள் வரத்தொடங்கி உள்ளனர்.

ரோடு முழுவதும் ஜல்லிக்கற்கள்


செம்பட்டி ஒட்டன்சத்திரம் ரோடு வழியில் ஆத்துார் பகுதியில் பாதயாத்திரை பக்தர்கள் செல்வதற்காக ரோட்டோரங்களில் நடைமேடை இல்லை.

இதனால் பக்தர்கள் ரோட்டில் நடந்து செல்லும் நிலை உள்ளது. நடைமேடை இல்லாததால் ஆத்துார் ஊராட்சி நிர்வாகத்தினர் ரோட்டோரங்களில் நிற்கும் செடிகளை அகற்றுகின்றனர். இருந்தபோதிலும் அது பக்தர்களுக்கு எந்த வகையிலும் உதவி செய்ததுபோல் அமையவில்லை. குழுக்களாக இணைந்து வரும் பக்தர்கள் குழந்தைகளும், உடமைகளும் இருப்பதால் தங்களுடன் ஒரு வண்டியை அழைத்து வருகின்றனர். இந்த வண்டிகள் எங்கேயாவது பஞ்சர்,பழுதுகள் ஏற்பட்டாலும் அதை சரிசெய்யமுடியாமல் பக்தர்கள் திணறுகின்றனர். காராமடை ஒட்டன்சத்திரம் ரோட்டில் ரோடு பணிகள் நடப்பதால் ரோடு முழுவதும் ஜல்லிக்கற்கள் கொட்டப்பட்டுள்ளது.Image 1217677வெறுங்காலில் நடந்து வரும் பக்தர்கள் நடக்கமுடியாமல் தவிக்கின்றனர். பக்தர்களுக்காக செம்பட்டி,ஒட்டன்சத்திரம்,விருப்பாச்சி பழநி வரை பல்வேறு பகுதிகளில் தனியார் அமைப்புகள் சார்பில் அன்னதானம் வழங்கப்படுகிறது. இந்த உணவுகள் தரமான பொருட்களால் தயாரானதா என உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள் ஆய்வு செய்ய வேண்டும். ஆயிரக்கணக்கில் பக்தர்கள் சாப்பிடுவதால் காலம் தாழ்த்தாமல் மாவட்டம் முழுவதும் தங்கள் நடவடிக்கையை உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள் துரிதப்படுத்த வேண்டும்.

அசுர வேகத்தில் வாகனங்கள்


செம்பட்டி,ஒட்டன்சத்திரம் வழித்தடங்களில் சேதமாகவும்,கற்களாகவும் கிடப்பதால் சில பக்தர்கள் செருப்பு அணிந்து வருவதாக வேதனை தெரிவிக்கின்றனர். அதேபோல் தைப்பூசம் ஜன.25ல் நடக்க உள்ளநிலையில் கோவிந்தாபுரம் பகுதியில் தற்போது தான் பக்தர்களின் பாதயாத்திரை நடைபாதை அமைக்கும் பணி துவங்கப்பட்டுள்ளது. இதனால் அப்பகுதியில் மணல்,சிமென்ட்,கற்கள் அடுக்கி வைத்திருப்பதால் பக்தர்கள் அதில் மிதிக்காமல் ஒதுங்கி செல்ல ரோட்டிற்கு வருகின்றனர்.

வாகனங்கள் வேகமாக செல்ல வேண்டாம் என ஆங்காங்கே பழநி முருகன் கோயில் நிர்வாகம் சார்பில் விழிப்புணர்வு பதாகைகள் வைக்கப்பட்டிருந்தபோதிலும் அதை யாரும் மதிக்காமல் அரசு பஸ் முதல் தனியார் பஸ்கள் வரை வேகமாக தான் செல்கின்றன. இதனால் பக்தர்கள் அச்சத்துடன் தங்கள் பயணத்தை மேற்கொள்கின்றனர். குய்யவநாயக்கன் பட்டியில் சில கிலோ மீட்டர் துாரம் பக்தர்கள் நடைமேடை உள்ளநிலையில் அதுவும் பராமரிப்பில்லாமல் பாதி இடங்களில் முட்செடிகள் வளர்ந்து பக்தர்கள் நடப்பதற்கு தடையை ஏற்படுத்துகிறது.

கருப்பன்சேர்வை காரன்பட்டி பகுதியில் பக்தர்கள் நடைமேடையில் நடு பகுதியில் பனைமரம்,மின் கம்பிகள் உள்ளது. இரவு நேரங்களில் வரும் பக்தர்கள் சிலர் தடுமாறி கீழே விழும் நிலையும் தொடர்கிறது. மின்வாரிய அதிகாரிகள் இதை சரி செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும். ஒட்டன்சத்திரம் ரோடு ஸ்ரீ ராமபுரத்தில் பாதயாத்திரை நடை பாதைகள் முழுவதும் கடைகள், டூவீலர்களை நிறுத்தி ஆக்கிரமித்துள்ளனர்.

அதுமட்டுமின்றி தங்கள் நிறுவன விளம்பர போர்டுகளை வைத்து முழுமையாக ஆக்கிரமித்துள்ளனர். இதனால் பக்தர்கள் நடந்து செல்ல வழியின்றி ரோட்டில் இறங்கி நடக்கின்றனர். அந்த ஊரை கடந்து செல்லும் வரை இதேநிலை தான் தொடர்கிறது. இதுமட்டுமின்றி ஸ்ரீராமபுரத்தில் தெருநாய்களும் அதிகளவில் நடை பாதையில் படுத்து பக்தர்களை அச்சுறுத்துகின்றன. சிலர் நாய்களுக்கு பயந்து ரோட்டுக்கு வருகின்றனர். குறிப்பாக குடிதண்ணீர் தேவையான ஒன்றாக உள்ளது.

கோயில் நிர்வாகத்தினரோ குறிப்பிட்ட சில இடங்களில் மட்டும் ஏற்பாடு செய்துள்ளனர். இருந்தபோதிலும் பெரும்பாலான பக்தர்கள் காசு கொடுத்து தான் தண்ணீரை வாங்குகின்றனர். இதற்காகவே ரோட்டோரங்களில் பலரும் தற்காலிக கடைகளை அமைத்து பிழைப்பு நடத்துகின்றனர். பெண்கள்,குழந்தைகளும் இந்த பாதயாத்திரை நடை பயணத்தில் ஈடுபடுவதால் அவசரத்திற்கு ஒதுங்குவதற்கு கூட கழிப்பறை வசதிகள் இல்லாமல் உள்ளது. இதனால் பெரும் சிரமத்தை பக்தர்கள் சந்திக்கின்றனர். கோயில் நிர்வாகத்தினர் நடமாடும் கழிப்பறைகளை ஏற்பாடு செய்ய வேண்டும்.

Image 1217680

குச்சிகள் வழங்குவதில் குளறுபடி


எல்லைப்பட்டி பகுதியில் நடைபாதை இருந்தற்கான சாட்சியே இல்லாமல் உள்ளது. மூலச்சத்திரம் டூ ஒட்டன்சத்திரம் ரோட்டில் பாலப்பணிகள் கிடப்பில் இருப்பதாலும் பாதயாத்திரை பக்தர்களுக்கு சிரமம் ஏற்படுகிறது. ஒளிரும் குச்சிகளை இரவில் செல்லும் பக்தர்கள் பயன்படுத்த வேண்டும் என கோயில் நிர்வாகத்தினர் தெரிவிக்கின்றனர். ஆனால் ஒளிரும் குச்சிகள் எந்த பக்தர்களுக்கும் வழங்க அதிகாரிகள் நடவடிக்கை எடுத்தபாடில்லை. ஒளிரும் குச்சிகள் இல்லாமலிருப்பதால் இரவில் நடந்து செல்லும் போது ரோட்டில் வரும் வாகனங்களுக்கு அடையாளம் காண்பிப்பதற்காக அலைபேசி லைட்டுகளை ஒளிரவிட்டு செல்கின்றனர்.

ஒட்டன்சத்திரம் ரயில்வே மேம்பாலத்தில் பக்தர்கள் செல்வதற்காக டிரம்களை வைத்து கயிறுகள் கட்டி வைக்கப்பட்டுள்ளது. இதுவும் ஒருசில பகுதிகளில் கயிறுகள் இல்லாமல் உள்ளது. செய்வதையாவது முறையாக செய்யுங்கள் என பக்தர்கள் கூறுகின்றனர். ஒட்டன்சத்திரம் நகர் பகுதிகளிலும் நடைமேடை அமைக்கும் பணி தற்போது தான் துவங்கப்பட்டுள்ளது. காலதாமதமாக செய்யும் பணிகளை இதற்கு முன்னதாகவே செய்திருந்தால் பக்தர்களுக்கு பயனுள்ளதாக அமையும். விருப்பாச்சி பகுதியில் பழநி முருகன் கோயில் சார்பில் தகரத்தால் ஆன கூரையுடன் அமைக்கப்பட்டுள்ள தங்குமிடத்தில் பயணிகள் வீசி செல்லும் உணவுக்கழிவுகள் அப்படியே கிடக்கிறது.

பல நாட்களாக சுத்தம் செய்யாமலிருப்பதால் சுகாதாரக்கேடாக உள்ளது. அதே பகுதியில் ரோட்டின் இருபுறமும் வடிகால் கட்டும் பணிகள் நடப்பதாலும் பக்தர்கள் ரோட்டில் செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. பக்தர்கள் ரோட்டோரங்களில் வீசி செல்லும் குப்பையை அந்தந்த ஊராட்சி நிர்வாகம் சுத்தப்படுத்த வேண்டும். இப்பணிகள் நடக்காமலிருப்பதால் ரோடெங்கும் குப்பையாக உள்ளது. இரவில் பல பகுதிகளில் தெருவிளக்குகள் இல்லாமலிருப்பதால் பக்தர்கள் நடக்க முடியாமல் தடுமாறுகின்றனர்.

இதோடு மட்டுமில்லாமல் பக்தர்கள் ரோட்டோரங்களில் உணவு சமையல் செய்து விட்டு கழிவுகளை அப்படியே விட்டு செல்கின்றனர். இதனாலும் சுகாதாரக்கேடாக உள்ளது. மழை பெய்யும் நேரத்தில் பக்தர்கள் எங்கே ஒதுங்குவது என தெரியாமல் இடம் தேடி அலைகின்றனர். பழநி கோயில் நிர்வாகத்தினர் காணிக்கை மூலமாக ரூ.கோடிக்கணக்கில் பணம் வசூலிக்கின்றனர். ஆனால் பக்தர்களுக்கான அடிப்படை வசதிகள் செய்வதில் கோட்டை விடுகின்றனர். மாவட்ட நிர்வாகமாவது இதன்மீது கவனம் செலுத்தி பழநி பாதயாத்திரை பக்தர்களுக்கு ஏற்படும் இன்னல்களை போக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

ரோடுகள் மோசமாக உள்ளது


அழகு,பக்தர்,பெரியகுளம்: பெரியகுளத்திலிருந்து செம்பட்டி வழியாக பழநி முருகன் கோயிலுக்கு பாதயாத்திரையாக செல்கிறேன். ரோடு மிக மோசமாக உள்ளது. காலில் கற்கள் குத்துவதால் நடக்கவே முடியவில்லை. செய்வதறியாது இந்த முறை தான் செருப்பு அணிந்து நடக்கிறேன். ரோடுகளை தரமான ரோடுகளாக சீரமைக்க வேண்டும். என்னை போன்று ஏராளமான பக்தர்கள் இதுபோன்ற பல்வேறு பிரச்னைகளால் அவதிப்படுகின்றனர். கோயில் நிர்வாகத்தினர் இதன்மீது கவனம் செலுத்த வேண்டும்.

தண்ணீர் வசதி கூட இல்லை


கார்மேகம்,பரமக்குடி: குடும்பத்தோடு பாதாயாத்திரையாக வருகிறேன். தண்ணீர் வசதிகள் இல்லாமல் உள்ளது. குழந்தைகள் தாகத்தில் தவிக்கின்றனர். மருத்துவ வசதிகள் ஏற்படுத்தினால் பக்தர்களுக்கு உதவியாக இருக்கும். டவுன் பகுதிகளில் மட்டும் மருத்துவ பொருட்கள் கிடைக்கிறது. அதுவும் அதிக விலை விற்கப்படுகிறது. ஒருசிலர் இலவசமாக மருந்து மாத்திரைகளை வழங்குகின்றனர். அதை உண்ணுவதால் ஏதும் பிரச்னைகள் ஏற்படுமோ என அச்சமாக உள்ளது. பாதயாத்திரை பக்தர்களுக்காக மருத்துவ வசதிகள் ஏற்படுத்த வேண்டும்.

Image 1217681

பணிகளை விரைந்து முடியுங்க


வேளாங்கண்ணி,விருதுநகர்: பல ஊர்களில் ரோடு பணிகள் நடந்து வருவதால் பக்தர்கள் செல்லும் போது கால்களில் கற்கள் குத்துகிறது. இதனால் நடக்க முடியவில்லை. ஏன் இந்த ரோடு பணிகளை இவ்வளவு தாமதமாக செய்கின்றனர். பாதயாத்திரை பக்தர்கள் செல்லும் வழித்தடத்தில் நடக்கும் பணிகளை தைப்பூசத்திற்கு முன்னால் முடித்திருக்கலாம்.

இரவில் அச்சமாக உள்ளது


கார்த்திக்,மதுரை: வழியில் அடிப்படை வசதிகள் எதுவுமே இல்லை. இரவில் நடந்து வருவதற்கு படாத பாடு பட வேண்டியுள்ளது. வாகனங்கள் எங்கள் மீது இடிக்க வரும் தோரணையில் ரோட்டில் ஓட்டி செல்கின்றனர். அரசு பஸ்களும் சரி தனியார் பஸ்களும் சரி புயல் வேகத்தில் செல்கின்றன . இதை பார்க்கும் போது எங்களுக்கு அச்சமாக உள்ளது. பெண்கள்,குழந்தைகள் செல்லும் போது ஏன் இதுபோன்று பொறுப்பற்ற முறையில் டிரைவர்கள் செயல்படுகின்றனரோ . இதைக்கட்டுப்படுத்த போக்குவரத்துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

நடக்க முடியவில்லை


கண்ணன்,மதுரை: பாதயாத்திரை நடை மேடைகளில் பல பகுதிகளில் ஆக்கிரமிப்புகள் உள்ளது. இதனால் பக்தர்கள் நடக்க முடியாமல் ரோட்டில் இறங்கி நடக்கும் நிலை உள்ளது. தொடரும் இப்பிரச்னையால் விபத்துக்கள் ஏற்படும் நிலை உள்ளது. இரவில் விளக்குகள் இல்லாமலிருப்பதால் பக்தர்கள் ரோட்டில் நடக்க முடியாமல் திணறுகின்றனர்.

ஒளிரும் குச்சிகள் இல்லை


ஸ்ரீகாந்த், அதலை : இரவில் ஒளிரும் குச்சிகள் பக்தர்களுக்காக அதிகாரிகள் தரப்பில் வழங்கப்படுவதாக தெரிவிக்கின்றனர். இதுவரை எங்கும் வழங்கியதாக தெரியவில்லை. தண்ணீர் கூட விலைக்கு வாங்க வேண்டியநிலை உள்ளது. அடிப்படை வசதிகளை செய்து கொடுத்தால் தான் பக்தர்களின் இன்னல்களை போக்க முடியும். ஒளிரும் குச்சிகள் இன்றி இரவில் ரோட்டில் செல்வதால் விபத்துக்கள் ஏற்படும் அபாயம் உள்ளது.

Image 1217682

தங்குமிடம் நோ யூஸ்


அருண்குமார்,சோழவந்தான்: ஆண்கள்,பெண்கள்,குழந்தைகள் என ஏராளமான பக்தர்கள் அதிகமாக வருகின்றனர். இவர்கள் இரவில் தங்குமிடம் இல்லாமலிருப்பதால் அவதிப்படுகின்றனர். சில பக்தர்கள் அருகிலிருக்கும் கட்டடங்களில் தங்குகின்றனர். மற்றவர்கள் தாங்கள் கொண்டு வரும் வண்டிகளில் தங்குகின்றனர். சில பகுதிகளில் மட்டும் தங்கும் இடங்கள் அமைக்கப்பட்டுள்ளது. அதுவும் சுகாதாரமில்லாமல் உள்ளது. நல்ல முறையில் தங்கும் இடங்களை அமைக்க வேண்டும்.

நடைமேடை இல்லாமல் சிரமம்


மாதவன்,மாற்றுத்திறனாளி,சமயநல்லுார்: 34 ஆண்டுகளாக நான் பழநி முருகன் கோயிலுக்கு பாதயாத்திரையாக எனது 3 சக்கர வாகனத்தில் வருகிறேன். நடைமேடை பல பகுதிகளில் இல்லாமலிருப்பதால் சிரமமாக உள்ளது. இரவில் ரோட்டோரங்களில் செல்லவே முடியவில்லை.

ஆய்வு செய்வோம்


கலைவாணி,உணவு பாதுகாப்பு மாவட்ட அலுவலர்,திண்டுக்கல்: பழநி முருகன் கோயிலில் முதல்கட்டமாக பிரசாதம்,அன்னதானம் பஞ்சாமிர்தம் தயாரிக்கும் இடங்களில் ஆய்வு செய்ய இருக்கிறோம். தனியார் அன்னதான கூடங்களுக்கு உரிமம் வழங்க உள்ளோம். செம்பட்டி,ஒட்டன்சத்திரம் வழித்தடத்தில் வழங்கப்படும் அன்னதான கூடங்களையும் ஆய்வு செய்யப்படும்.

ஒளிரும் குச்சிகள் வழங்கியுள்ளோம்


மாரிமுத்து,இணை ஆணையர்,முருகன் கோயில்,பழநி: இரவில் நடந்து வரும் பாதயாத்திரை பக்தர்களுக்காக ஒளிரும் குட்சிகளை வழங்குவதற்காக பழநி,திண்டுக்கல் போலீசாரிடம் ஆயிரக்கணக்கில் வழங்கி உள்ளோம். அவர்கள் மூலமாக பக்தர்களுக்கு வழங்கப்படுகிறது. எல்லா தங்குமிடங்களும் சம்பந்தபட்ட உள்ளாட்சிகள் மூலம் பராமரிக்கப்பட்டு வருகிறது. ஏதாவது புகார்கள் வந்தாலும் உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படும். பக்தர்களுக்குகோயில் சார்பாக ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.

-நமது சிறப்பு நிருபர்-






      Dinamalar
      Follow us