த.வெ.க., உடன் கூட்டணி வைக்க காங். , - எம்.எல்.ஏ.,க்கள் ரகசிய பேச்சு
த.வெ.க., உடன் கூட்டணி வைக்க காங். , - எம்.எல்.ஏ.,க்கள் ரகசிய பேச்சு
ADDED : ஜூலை 12, 2025 02:52 AM

'தமிழக சட்டசபை பொதுத் தேர்தலில், கூட்டணி ஆட்சிக்கு அழைப்பு விடுத்துள்ள தமிழக வெற்றி கழகத்துடன், கூட்டணி அமைக்க வேண்டும்' என, காங்கிரஸ் பொதுச்செயலர் கே.சி.வேணுகோபாலிடம், தமிழக காங்., - எம்.எல்.ஏ.,க்கள் ரகசியமாக பேசிய தகவல் வெளியாகியுள்ளது.
வரும் சட்டசபை தேர்தலில், தன் கட்சியுடன் கூட்டணி அமைக்கும் கட்சிகளுக்கு, ஆட்சியில் பங்கு உண்டு என, த.வெ.க., கட்சியை துவக்கியதும், அக்கட்சியின் தலைவர் விஜய் அறிவித்தார்.
விருப்பம்
அத்துடன், தி.மு.க., - பா.ஜ., கட்சிகளுடன், கூட்டணி அமைக்கப் போவதில்லை என, அக்கட்சி தீர்மானம், நிறைவேற்றி உள்ளது.
'தி.மு.க., கூட்டணியில், ஆட்சியில் பங்கு வேண்டும்; அதிக தொகுதிகளை கேட்க வேண்டும்' என, சட்டசபை காங்கிரஸ் தலைவர் ராஜேஷ்குமார் மற்றும் சில எம்.எல்.ஏ.,க்கள் விரும்புகின்றனர்.
தமிழக காங்கிரஸ் மேலிட பொறுப்பாளர் கிரிஷ் ஷோடங்கர், ஏற்கனவே சத்தியமூர்த்தி பவனில் நடத்திய, எம்.எல்.ஏ.,க்கள் கூட்டத்தில், த.வெ.க.,வுடன் கூட்டணி அமைக்க வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தினர். மும்பையில் கிரிஷ் ஷோடங்கரை, த.வெ.க., மாநில நிர்வாகி ஒருவர் சந்தித்து, கூட்டணி தொடர்பாக ஆரம்ப கட்ட பேச்சு நடத்தி உள்ளார்.
இதற்கிடையில், காங்கிரஸ் பொதுச்செயலர் கே.சி.வேணுகோபாலை, தென் மாவட்ட காங்.,- எம்.எல்.ஏ.,க்கள் சிலர் சந்தித்து பேசியுள்ளனர். அப்போது, தி.மு.க.,விடம் ஆட்சியில் பங்கு கேட்டாலும் கிடைக்காது; அதிக தொகுதிகளும் கிடைக்காது.
அதிகாரப்பகிர்வு
இந்த முறை, தி.மு.க.,வுடன் கூட்டணி வைத்தால், அடுத்த 2029ம் ஆண்டு லோக்சபா தேர்தலில், காங்கிரஸ் கட்சிக்கு வேலை செய்ய, தொண்டர்கள் இருக்க வாய்ப்பில்லை. எனவே, ஆட்சி அதிகாரப்பகிர்வு காங்கிரஸ் கட்சிக்கு கிடைத்தால் தான், கட்சியை வளர்க்க முடியும்.
அதற்கு த.வெ.க., விடம் கூட்டணி வைத்து போட்டியிட வேண்டும். விஜய்க்கு தமிழகம் மட்டுமல்ல, கேரளாவிலும் அதிக ரசிகர்கள் உள்ளனர். கேரள மாநிலத்திலும் காங்கிரஸ் ஆட்சி அமைய வாய்ப்பாக அமையும் என தெரிவித்துள்ளனர்.
அதற்கு, கே.சி.வேணுகோபால், 'பீகார் மாநில சட்டசபை தேர்தலில் ராகுல் மும்முரமாக உள்ளார். அந்த தேர்தலில், காங்கிரஸ் வெற்றி பெற்றால், தமிழகத்தில் கூட்டணி மாற்றம் குறித்து ஆலோசிக்கலாம். அதுவரை தி.மு.க., கூட்டணியில், பொறுமையாக இருக்க வேண்டும்' எனக் கூறியதாக, கட்சி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
- நமது நிருபர் -

