கள்ளக்குறிச்சி தொகுதியை பெற காங்., - வி.சி., முயற்சி; தாரைவார்க்குமா தி.மு.க.?
கள்ளக்குறிச்சி தொகுதியை பெற காங்., - வி.சி., முயற்சி; தாரைவார்க்குமா தி.மு.க.?
ADDED : பிப் 27, 2024 06:26 AM

கள்ளக்குறிச்சி லோக்சபா தொகுதியை கூட்டணிக்கு தாரைவார்க்காமல் தொகுதியை சேர்ந்தவருக்கே போட்டியிட வாய்ப்பு வழங்க வேண்டும் என தி.மு.க., தொண்டர்கள் எதிர்பார்க்கின்றனர்.
லோக்சபா தேர்தல் நெருங்குவதையொட்டி அரசியல் கட்சித் தலைவர்கள் கூட்டணி குறித்த பேச்சுவார்த்தையில் தீவிரமாக ஈடுபட்டுள்ள நிலையில் தேர்தல் களம் சூடு பிடிக்கத் துவங்கியுள்ளது.
தி.மு.க., தனது கூட்டணியில் உள்ள காங்., மற்றும் வி.சி., கள்ளக்குறிச்சி தொகுதியைப் பெற பகீரத பிரயத்தனம் செய்து வருகிறது. குறிப்பாக வி.சி., துணை பொதுச் செயலாளராக சமீபத்தில் பொறுப்பேற்ற ஆதவ் அர்ஜூன் தி.மு.க., கூட்டணி வேட்பாளராக கள்ளக்குறிச்சி தொகுதியில் நிறுத்தப்படுவார் என அக்கட்சி தொண்டர்கள் மத்தியில் பரபரப்பாக பேசப்படுகிறது.
அவர் வி.சி., கட்சி வேட்பாளராக இருந்த போதிலும் உதயசூரியன் சின்னத்தில் போட்டியிடுவார் என்ற தகவலும் வெளியாகிறது. இது கள்ளக்குறிச்சி தொகுதியில் உள்ள தி.மு.க., தொண்டர்களுக்கு மிகுந்த அதிர்ச்சியை அளித்துள்ளது.
கடந்த சட்டசபை தேர்தலில் கள்ளக்குறிச்சி தனி தொகுதி காங்., கட்சிக்கு ஒதுக்கப்பட்டதன் காரணமாக வெற்றி பெற வேண்டிய தொகுதி பறிபோனதாக தி.மு.க., வினர் இன்று வரை புலம்புகின்றனர்.
கடந்த 2009ம் ஆண்டு தொகுதி மறு சீரமைப்பு செய்யப்பட்டபோது கள்ளக்குறிச்சி தொகுதி உருவாக்கப்பட்டது. அதே ஆண்டு கடந்த 2009ம் ஆண்டு நடந்த லோக்சபா தேர்தலில் தி.மு.க., வேட்பாளர் ஆதிசங்கர், 2014ம் ஆண்டு தேர்தலில் அ.தி.மு.க., வேட்பாளர் காமராஜ், 2019ம் ஆண்டு தேர்தலில் தி.மு.க., வேட்பாளர் கவுதம சிகாமணி வெற்றி பெற்றனர்.
தொகுதி உருவானதிலிருந்து நடந்த 3 தேர்தல்களில் 2ல் தி.மு.க., வெற்றி பெற்றுள்ளது. தி.மு.க., சார்பில் வெற்றி பெற்ற ஆதிசங்கர் மற்றும் கவுதம சிகாமணி ஆகிய இருவருமே தொகுதிக்கு அப்பாற்பட்டவர்கள் ஆவார்.
இது அப்போதே தொண்டர்களுக்கு ஏமாற்றத்தை அளித்திருந்தது. அவர்கள் நினைத்தது போலவே கவுதம சிகாமணி எதிர்பார்த்த அளவுக்கு தொகுதியில் மக்களை சந்திக்கவில்லை என்று குறை இன்றளவும் உள்ளது.
குறைந்தபட்சம் தேர்தல் வெற்றிக்குப் பிறகு நன்றி தெரிவிக்க கூட அவர் வரவில்லை என்பது தொண்டர்களின் ஆதங்கமாக பேசப்படுகிறது.
இதன் காரணமாக கள்ளக்குறிச்சி தொகுதியை கூட்டணிக்கு தாரைவார்க்காமல் தி.மு.க., நேரடியாக போட்டியிட வேண்டும். அதிலும் தொகுதியை சேர்ந்தவரையே வேட்பாளராக நிறுத்த வேண்டும் என்ற கோரிக்கை தொண்டர்களிடையே வலுத்து வருகிறது.
