சகோதரர்கள் உத்தவ் தாக்கரே, ராஜ் தாக்கரே கைகோர்ப்பு!: மாநில நலனுக்காக 'ஈகோ'வை விடுவதாக அறிவிப்பு
சகோதரர்கள் உத்தவ் தாக்கரே, ராஜ் தாக்கரே கைகோர்ப்பு!: மாநில நலனுக்காக 'ஈகோ'வை விடுவதாக அறிவிப்பு
ADDED : ஏப் 20, 2025 01:19 AM

மும்பை: கடந்த 19 ஆண்டுகளாக அரசியலில் எதிரெதிராக செயல்பட்டு வரும் சகோதரர்கள் உத்தவ் தாக்கரே, ராஜ் தாக்கரே இணைந்து செயல்படுவதற்கு தயாராக இருப்பதாக தெரிவித்து உள்ளனர். மாநில நலனுக்காக, சொந்த 'ஈகோ'வை விடத் தயாராக இருப்பதாக இருவரும் கூறியுள்ளனர்.
மஹாராஷ்டிராவில் முதல்வர் தேவேந்திர பட்னவிஸ் தலைமையில் பா.ஜ., சிவசேனா, தேசியவாத காங்கிரஸ் கூட்டணி ஆட்சி அமைந்துள்ளது. பால் தாக்கரே உருவாக்கிய சிவசேனா கட்சி, 2022ல் பிளவுபட்டது. ஏக்நாத் ஷிண்டே தனியாக பிரிந்து சென்றார். அவருடைய அணிக்கு, சிவசேனா கட்சியின் பெயர், சின்னம் கிடைத்தது.
பால் தாக்கரேயின் மகனான உத்தவ் தாக்கரே அணிக்கு, சிவசேனா உத்தவ் தாக்கரே பிரிவு என்று பெயரிடப்பட்டது.
முன்னதாக, பால் தாக்கரேயின் இளைய சகோதரரின் மகனான ராஜ் தாக்கரே, 2006ல் சிவசேனா கட்சியில் இருந்து வெளியேறினார். கட்சியில் உத்தவ் தாக்கரேவுக்கு முன்னுரிமை கொடுக்கப்பட்டதால், எதிர்ப்பு தெரிவித்து வெளியேறிய அவர், எம்.என்.எஸ்., எனப்படும் மஹாராஷ்டிரா நவநிர்மாண் சேனா என்ற அரசியல் கட்சியைத் துவக்கினார்.
உத்தவ் தாக்கரே மற்றும் ராஜ் தாக்கரேயின் தாயும் சகோதரிகள். கடந்த 19 ஆண்டுகளாக, உத்தவ் தாக்கரே மற்றும் ராஜ் தாக்கரே எதிரெதிர் அரசியலில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்நிலையில், மாநிலத்தில் பள்ளிகளில் மூன்றாவது மொழியாக ஹிந்தியை கற்றுத் தருவது கட்டாயமாக்கப் போவதாக அரசு அறிவித்தது. இதற்கு, எதிர்க்கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன.
இந்த சூழ்நிலையில், மாநில நலனுக்காக சொந்த ஈகோவை விட்டு, இணைந்து செயல்படத் தயாராக இருப்பதாக ராஜ் தாக்கரே மற்றும் உத்தவ் தாக்கரே கூறியுள்ளனர்.
கடந்த பிப்ரவரியில் மும்பையில் நடந்த ஒரு நிகழ்ச்சியில், உத்தவ் தாக்கரே மற்றும் ராஜ் தாக்கரே சந்தித்து, சிறிது நேரம் பேசிக் கொண்டிருந்தனர். அப்போதே, இருவரும் தங்களுடைய பழைய பகையை மறந்து செயல்படுவர் என்று எதிர்பார்க்கப்பட்டது.
தற்போது இருவரும் இணைந்து செயல்படுவது குறித்து பேசியுள்ளனர். இது, மஹாராஷ்டிரா அரசியலில் மாற்றத்தை ஏற்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது.

