பா.ஜ., மாநிலங்களுக்கு மட்டுமே திட்டங்களா: ஜெய்சங்கர் மறுப்பு
பா.ஜ., மாநிலங்களுக்கு மட்டுமே திட்டங்களா: ஜெய்சங்கர் மறுப்பு
ADDED : அக் 28, 2024 12:12 AM

மும்பை: பா.ஜ., ஆளும் மாநிலங்களுக்கு மட்டுமே மத்திய அரசின் திட்டங்கள், முதலீடுகள் கிடைப்பதாகக் கூறப்படுவதை, வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் மறுத்துள்ளார்.
மஹாராஷ்டிராவில் சிவசேனா, பா.ஜ., தேசியவாத காங்கிரஸ் கூட்டணி ஆட்சி அமைந்துள்ளது. இங்கு, நவம்பர் 20ல் சட்டசபை தேர்தல் நடக்க உள்ளது.
இது தொடர்பாக மும்பையில் நேற்று நடந்த பா.ஜ., கூட்டத்தில், ராஜ்யசபா எம்.பி.,யும், வெளியுறவு அமைச்சருமான ஜெய்சங்கர் பங்கேற்றார்.
கடும் போட்டி
அப்போது நிருபர்களிடம் அவர் கூறியதாவது:
மஹாராஷ்டிராவுக்கு கிடைக்க வேண்டிய பல திட்டங்களை, முதலீடுகளை, குஜராத்துக்கு மத்திய அரசு மாற்றியுள்ளதாக கூறுகின்றனர்.
இதில், மத்திய அரசின் பங்கு எதுவும் இல்லை. தங்களுடைய முதலீடுக்கு தகுந்த பலன் கிடைக்க வேண்டும் என்பதை முதலீட்டாளர்கள் எதிர்பார்ப்பர்.
அதனால், மாநிலங்கள் குறித்து நன்கு அலசி ஆராய்ந்து அதற்கேற்பவே தங்களுடைய முடிவை எடுப்பர்.
உலகளவில் இந்தியாவில் முதலீடு செய்வதற்காக மத்திய அரசு தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது.
நாட்டின் பிம்பம் மற்றும் இங்குள்ள வாய்ப்புகளை குறிப்பிட்டு, முதலீடுகளை ஈர்த்து வருகிறோம். அந்த திட்டங்களை பெறுவது, அந்தந்த மாநில அரசுகளின் கைகளிலேயே உள்ளது.
இதில், மாநிலங்களுக்கு இடையே கடும் போட்டி உள்ளது; இது நல்ல விஷயம். போட்டி கூட்டாட்சியே நாட்டுக்கு நல்லது.
முதலீடுகள்
அதுபோல, ஒரு மாநிலத்துக்கு கிடைக்க வேண்டிய திட்டங்களை, மற்றொரு மாநிலத்துக்கு மாற்றும் முடிவை மத்திய அரசு எடுப்பதில்லை.
கடந்த 10 ஆண்டுகளில், பா.ஜ., ஆளும் மாநிலங்களுக்கு மட்டுமே முதலீடுகள் கிடைக்கவில்லை. பா.ஜ., ஆளாத மாநிலங்களுக்கும் முதலீடுகள் கிடைத்து வருகின்றன.
மும்பையில் 2008ல் மிகப்பெரிய பயங்கரவாத தாக்குதல் நடந்தது. அது போன்ற ஒன்று மீண்டும் நடக்கக்கூடாது. அதுபோலவே, அந்தத் தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கப்படவில்லை. அது போன்ற ஒன்று, பா.ஜ., ஆட்சியில் நடக்காது.
இவ்வாறு அவர் கூறினார்.

