பழநி கோயிலில் கைங்கரியம் செய்யும் மிராஸ் பண்டாரங்களை தடுக்க முயற்சியா?
பழநி கோயிலில் கைங்கரியம் செய்யும் மிராஸ் பண்டாரங்களை தடுக்க முயற்சியா?
ADDED : அக் 15, 2024 07:19 AM

திண்டுக்கல் : பழநி முருகனுக்கு பரம்பரை பரம்பரையாக திருமஞ்சன கைங்கரியம் செய்துவரும் மிராஸ் பண்டாரங்களை அறநிலையத்துறை தடுப்பதாக பா.ஜ., குற்றஞ்சாட்டியுள்ளது.
பழநி கோயிலில் சுவாமிக்கு தினமும் திருமஞ்சன கைங்கரியம் நடக்கிறது. இதற்கென 64 பேர் உள்ளனர். வரதமாநதி அணையிலிருந்து புனித நீரை தலையில் சுமந்து படிப்பாதை வழியாக வந்து தினமும் அபிஷேகம் செய்வது இவர்கள் பணி. இவர்களுக்கு மாத ஊதியம் கிடையாது. பக்தர்கள் கொடுக்கும் காணிக்கைகளே வருமானம்.
சமீப காலமாக இவர்களை தடுக்கும் முயற்சியில் தேவஸ்தான நிர்வாகம் ஈடுபடுவதாக பா.ஜ., வினர் குற்றஞ்சாட்டியுள்ளனர்.
பா.ஜ., மேற்கு மாவட்ட தலைவர் கனகராஜ் கூறியதாவது: பழநி மலைக்கும், பண்டாரங்களுக்கும் மிகப்பெரிய பாரம்பரிய தொடர்பு இருக்கிறது.
போகர் சித்தரால் உருவாக்கப்பட்ட நவபாஷாணத்தில் ஆன தண்டாயுதபாணி சுவாமிக்கு நடக்கும் ஆறு கால பூஜைக்கு தினமும் அபிஷேகம் செய்ய திருமஞ்சன நீரை பல ஆண்டுகளாக ஆத்மார்த்தமாக பண்டாரங்கள் செய்கின்றனர். இந்நிலையில் கடந்த சில ஆண்டுகளாக பாரம்பரியமான நிகழ்வுகளை அழிக்கும் வகையில் குருக்கள், பண்டாரங்கள், மடாதிபதிகளுக்கு அரசு பல வழிகளில் நெருக்கடி கொடுக்கிறது.
குங்குமம், விபூதி பூ விற்கிறார்கள், பக்தர்களிடம் காசு வாங்குகிறார்கள் என்று கூறி இவர்கள் மலைக்கு வரக்கூடாது என உத்தரவு போடுகிறார்கள். மூன்று மாதமாக 20-க்கு மேற்பட்ட பண்டாரங்கள் இறை தொண்டு செய்ய அனுமதிக்கப்படவில்லை. கோயிலுக்கு சென்றால் ஏ.சி., டி.சி., ஜே.சி., மேனேஜர் அனுமதி வாங்கி வருமாறு அலைகழிக்கப்படுகின்றனர். தடுப்பது தொடர்ந்தால் பா.ஜ., மிகப்பெரிய போராட்டத்தை கையிலெடுக்கும் என்றார்.
இது குறித்து தேவஸ்தான கருத்தை கேட்க பலமுறை முயற்சித்தபோதும் அதிகாரிகள் யாரும் அலைபேசியை எடுக்கவில்லை.

