அஜித் பவார் - பட்னவிஸ் 'லடாய்' சூடுபிடிக்கும் மஹா., தேர்தல் களம்
அஜித் பவார் - பட்னவிஸ் 'லடாய்' சூடுபிடிக்கும் மஹா., தேர்தல் களம்
ADDED : நவ 15, 2024 11:43 PM

மும்பை: மஹாராஷ்டிராவில் சட்டசபை தேர்தலுக்கு நான்கு நாட்களே உள்ள நிலையில், ஆளும் கூட்டணி அரசின் துணை முதல்வர்கள் அஜித் பவார் - தேவேந்திர பட்னவிஸ் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டுள்ளது.
மஹாராஷ்டிராவில், முதல்வர் ஏக்நாத் ஷிண்டே தலைமையில் சிவசேனா, பா.ஜ., - தேசியவாத காங்கிரஸ் அடங்கிய, 'மஹாயுதி' கூட்டணி ஆட்சி நடக்கிறது. மொத்தம் 288 சட்டசபை தொகுதிகளுடைய இம்மாநிலத்தில், வரும் 20ல் ஒரே கட்டமாக தேர்தல் நடக்கிறது; 23ல் ஓட்டுகள் எண்ணப்படுகின்றன.
பலத்த போட்டி
இந்த தேர்தலில், ஆளும் மஹாயுதி கூட்டணிக்கும், எதிர்க்கட்சியான உத்தவ் தாக்கரேயின் சிவசேனா, காங்., - சரத் பவாரின் தேசியவாத காங்., அடங்கிய, 'மஹா விகாஸ் அகாடி' கூட்டணிக்கும் இடையே பலத்த போட்டி நிலவுகிறது.
பா.ஜ., வேட்பாளர்களை ஆதரித்து, மஹாராஷ்டிரா முழுதும் சமீபத்தில் பிரசாரம் செய்த அக்கட்சியின் மூத்த தலைவரும், உத்தர பிரதேச முதல்வருமான யோகி ஆதித்யநாத், 'பிரிவு என்பது அழிவு' என்ற கோஷத்தை முன்வைத்தார்.
இது, முஸ்லிம்களுக்கு எதிரான கருத்து எனக் கூறிய மஹா விகாஸ் அகாடி கூட்டணி, ஆதித்யநாத் பேச்சுக்கு கடும் எதிர்ப்பு தெரிவித்த நிலையில், தற்போது சில பா.ஜ., நிர்வாகிகளும், கூட்டணி கட்சிகளுமே கண்டனம் தெரிவித்துள்ளன.
இது குறித்து, முஸ்லிம்களின் பெரும் ஆதரவுள்ள மஹாயுதி கூட்டணியில் அங்கம் வகிக்கும் தேசியவாத காங்., தலைவரும், துணை முதல்வருமான அஜித் பவார் கூறியதாவது:
யோகி ஆதித்யநாத் கருத்தை நான் ஆதரிக்கவில்லை. இதை நான் பல முறை தெரியப்படுத்தி விட்டேன். சில பா.ஜ., தலைவர்களும் இந்த கருத்தை ஆதரிக்கவில்லை.
'அனைவருக்கும் வளர்ச்சி' என்ற அடிப்படையில் மஹாயுதி கூட்டணி அரசு செயல்படுகிறது. ஆதித்யநாத் கூறியது, மஹாராஷ்டிராவில் எடுபடாது. உ.பி., - ஜார்க்கண்ட் போன்ற மாநிலங்களில் அவர் கூறியது எடுபடலாம்.
இவ்வாறு அவர் கூறினார்.
இதே போல், பா.ஜ., தலைவர்கள் பங்கஜா முண்டே, அசோக் சவான் ஆகியோரும், யோகி ஆதித்யநாத் கருத்துக்கு எதிர்ப்பு தெரிவித்தனர்.
அஜித் பவாருக்கு பதிலளித்து, பா.ஜ., மூத்த தலைவரும், துணை முதல்வருமான தேவேந்திர பட்னவிஸ் கூறியதாவது:
யோகி ஆதித்யநாத் கூறியதில் எந்த தவறுமில்லை. மதச்சார்பின்மை என்று கூறுபவர்களிடையே உண்மையான மதச்சார்பின்மை இல்லை.
பரபரப்பு
பல ஆண்டுகளாக ஹிந்துத்துவாவை எதிர்ப்பது தான், உண்மையான மதச்சார்பின்மை என நினைப்பவர்களுடன் அஜித் பவார் இருந்தார். இதனால், மக்களின் மனநிலையை புரிந்து கொள்ள அவருக்கு சிறிது காலம் தேவைப்படும்.
யோகி ஆதித்யநாத்தின் கருத்தை எதிர்க்கட்சியினர் புரிந்து கொள்ளவில்லை. அவர்கள் மக்களின் உணர்வுகளையும் மதிக்கவில்லை.
இவ்வாறு அவர் கூறினார்.
ஓட்டுப்பதிவுக்கு இன்னும் நான்கு நாட்களே உள்ள நிலையில், அஜித் பவார் - தேவேந்திர பட்னவிஸ் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டுள்ளது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

