அ.தி.மு.க., தேர்தல் அறிக்கை தயாரிப்பு குழு; ஆதிதிராவிடர் சமூக நிர்வாகிகள் அதிருப்தி
அ.தி.மு.க., தேர்தல் அறிக்கை தயாரிப்பு குழு; ஆதிதிராவிடர் சமூக நிர்வாகிகள் அதிருப்தி
ADDED : டிச 27, 2025 05:16 AM

- நமது நிருபர் -
அ.தி.மு.க., தேர்தல் அறிக்கை தயாரிப்பு குழுவில், ஆதிதிராவிட சமூகத்தைச் சேர்ந்தவர்கள் இடம் பெறாதது, அந்த சமுதாயத்தைச் சேர்ந்த நிர்வாகிகளிடம் அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது.
தமிழக சட்டசபை பொது தேர்தல், வரும் ஏப்ரல் மாதம் நடக்க உள்ளது. அதையொட்டி, அ.தி.மு.க.,வில் தேர்தல் அறிக்கை தயார் செய்ய, குழு அமைக்கப்பட்டு உள்ளது.
தேவர் பெயர்
இந்தக் குழுவில், தலித் சமுதாய நிர்வாகிகளுக்கு வாய்ப்பு வழங்கப்படவில்லை. இது, அந்த சமூகத்தைச் சேர்ந்த நிர்வாகிகளிடம் அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது.
இது குறித்து, அ.தி.மு.க.,வில் உள்ள தலித் சமுதாய மாநில நிர்வாகிகள் சிலர் கூறியதாவது:
அ.தி.மு.க., பொதுச்செயலர் பழனிசாமி, 'முத்துராமலிங்க தேவரின் பெயரை, மதுரை விமான நிலையத்திற்கு சூட்ட வேண்டும்; அவருக்கு பாரத ரத்னா விருது வழங்க மத்திய அரசிடம் வலியுறுத்தப்படும்' என வாக்குறுதி அளித்தார்.
இதற்கு, புதிய தமிழகம் கட்சி தலைவர் கிருஷ்ணசாமி, தமிழக மக்கள் முன்னேற்ற கழக தலைவர் ஜான்பாண்டியன் ஆகியோர் எதிர்ப்பு தெரிவித்தனர்.
இதையடுத்து, பரமக்குடியில் இமானுவேல் சேகரனுக்கு அஞ்சலி செலுத்த, அ.தி.மு.க., தரப்பில் யாரும் வரக்கூடாது என, தேவேந்திர பண்பாட்டு கழகம் சார்பில் அறிவிக்கப்பட்டது.
இதனால், தலித் சமுதாயத்தினருக்கு எதிராக அ.தி.மு.க., செயல்படுகிறது என்ற பிம்பம் உருவாகி உள்ளது.
சமீபத்தில் சென்னைக்கு வந்த பா.ஜ., தலைவர்களுடன், அ.தி.மு.க., சார்பில் தொகுதி பங்கீடு பேச்சு நடந்தது. அதில், பா.ஜ., சார்பில், பட்டியலினத்தைச் சேர்ந்த மத்திய இணை அமைச்சர் முருகன் பங்கேற்றார்.
ஒருவர் கூட இல்லை
அ.தி.மு.க.,வில் பட்டியலினத்தைச் சேர்ந்த முன்னாள் அமைச்சர்கள், முன்னாள் சபாநாயகர், முன்னாள் துணை சபாநாயகர், முன்னாள் எம்.பி.,க்கள், எம்.எல்.ஏ.,க்கள் என பலர் இருந்தும், ஒருவரை கூட தொகுதி பங்கீடு பேச்சில் இடம் பெற வைக்கவில்லை.
தேர்தல் அறிக்கை தயாரிப்பு குழுவில், வன்னியர் மற்றும் செட்டியார் சமுதாயத்தில் தலா இருவர், முக்குலத்தோர் சமுதாயத்தில் மூவர், கவுண்டர், பிள்ளை, மீனவர் போன்ற சமூகத்தைச் சேர்ந்தவர்கள் இடம் பெற்றுள்ளனர்.
ஆனால், தலித் சமுதாய நிர்வாகி ஒருவர் கூட இடம் பெறாமல் இருப்பதால், சமூக நீதிக்கு இடமில்லை என்பது உறுதியாகி உள்ளது. சட்டசபை தேர்தலிலும் உரிய பிரதிநிதித்துவம் அளிக்காவிட்டால், பலர் கட்சி மாற வாய்ப்பு உள்ளது. இவ்வாறு அந்த நிர்வாகிகள் தெரிவித்தனர்.

