10ம் வகுப்பு படித்தவர் பல கோடிக்கு அதிபதி; போலி மருந்து கதையில் விறுவிறு காட்சிகள்
10ம் வகுப்பு படித்தவர் பல கோடிக்கு அதிபதி; போலி மருந்து கதையில் விறுவிறு காட்சிகள்
UPDATED : டிச 14, 2025 07:57 AM
ADDED : டிச 14, 2025 07:38 AM

புதுச்சேரி: வேலை தேடி புதுச்சேரிக்கு வந்த ராஜா (எ) வள்ளியப்பன் போலி மருந்து தயாரித்து பல கோடிக்கு அதிபதியான அதிர்ச்சியூட்டும் தகவல்கள் அடுத்தடுத்து அம்பலமாகி உள்ளது.
புதுச்சேரியில் பெரும் புயலை கிளப்பியுள்ள போலி மருந்து விவகாரத்தில் முன்ஜாமின் பெற்று தலைமறைவாக இருந்த ராஜா (எ) வள்ளியப்பன்,42; விவேக் ஆகியோர் கடந்த 10ம் தேதி புதுச்சேரி கோர்ட்டில் சரணடைந்தனர். அவர்களை எஸ்.பி., நல்லாம்பாபு தலைமையிலான சிறப்பு புலனாய்வு குழு போலீசார் அழைத்து சென்று விசாரித்தனர்.
சிவகங்கை மாவட்டம், திருப்பத்துார் அடுத்த கருங்குழி கிராமத்தில் விவசாய குடும்பத்தில் பிறந்தவர் வள்ளியப்பன். 10ம் வகுப்பில் தோல்வி அடைந்த இவர், வேலை தேடி கடந்த 2000ம் ஆண்டு புதுச்சேரிக்கு வந்தவர், மருந்து கடையில் வேலை செய்தார். பின், கடலுாரில் ஏஜென்சி எடுத்து, மருந்து மொத்த வியாபாரம் செய்து வந்தார்.
அப்போது, கடலுார் தங்கராஜ் நகரில் தங்கியிருந்த மருந்து விற்பனை பிரதிநிதியான சிவகங்கை மாவட்டம், காரைக்குடி அடுத்த கழனிவாசலை சேர்ந்த முருகேசன்,31; என்பவர் அறிமுகமானார். அவர், அளித்த திட்டத்தின்படி வள்ளியப்பன், கடந்த 2010ம் ஆண்டு ஜனவரி மாதம் சென்னை குரோம்பேட்டையில் விலை குறைந்த 'அல்டெக்ஸ்' இருமல் மருந்தை வாங்கி, அதனை புதுச்சேரி மாநிலம் நெட்டப்பாக்கத்தில் வைத்து லேபிளை கிழித்துவிட்டு, விலை அதிகமுள்ள போலியாக அச்சடித்து வைத்திருந்த 'பெனட்ரில் சிரப்' லேபிளை ஒட்டி தமிழகத்தின் பல்வேறு பகுதிகளுக்கு அனுப்பி விற்பனை செய்து வந்தார்.
இது குறித்த புகாரின் பேரில், கடந்த 2010ம் ஆண்டு ஏப்ரல் மாதம் திருப்பாதிரிப்புலியூர் போலீசார் வழக்கு பதிந்து, வள்ளியப்பன் உள்ளிட்ட மூவரை கைது செய்து கடலுார் சிறையில் அடைத்தனர். அவ்வழக்கில் 6 மாதம் கழித்து ஜாமினில் வந்த வள்ளியப்பன், அடுத்த சில மாதங்களில் தனது பெயரை ராஜா என மாற்றிக் கொண்டு விழுப்புரம் மாவட்டம் கண்டமங்கலத்தில் 'யாசித் பார்மசி' பெயரில் கம்பெனி துவங்கி மருந்து தயாரித்து வந்தார்.
பின், 2020ம் ஆண்டு புதுச்சேரி மாநிலம் அபிேஷகப்பாக்கத்தில் 'நியூ ஜெர்ஜி' பெயரில் கம்பெனி துவங்கி மருந்து தயாரித்து விற்பனை செய்து வந்தார். அதில், போலி மருந்து தயாரித்ததாக ஆந்திர போலீசார் வழக்கு பதிந்து அபிேஷகப்பாக்கம் கம்பெனியை கடந்த 2023ம் ஆண்டு 'சீல்' வைத்தனர்.
அதன்பிறகு, 2024ம் ஆண்டு திருபுவனைபாளையத்தில் மூடிக்கிடந்த லார்வான் கம்பெனியை ரூ.450 கோடிக்கு விலைக்கு வாங்கி, பிரபல நிறுவனங்களின் அதிகம் விற்பனையாகும் மற்றும் விலை உயர்ந்த மருந்துகளை போலியாக தயாரித்து, அதனை புதுச்சேரி செட்டித் தெருவில் உள்ள தனது ஸ்ரீ சன்பார்மா ஏஜென்சி மூலம், இல்லாத குடோன்களுக்கு அமன் பார்மா மற்றும் மீனாட்சி பார்மா என உரிமம் பெற்று, வட மாநிலங்களுக்கு விற்பனை செய்து, பல கோடி ரூபாய் சம்பாதித்திருப்பது தெரிய வந்துள்ளது.
அதன் மூலம் புதுச்சேரி, மதுரை, கடலுார் உள்ளிட்ட தமிழகத்தில் பல்வேறு பகுதிகளில் நிலம் உள்ளிட்ட பல நுாறு கோடி ரூபாய் மதிப்பிலான சொத்துக்களும், 16 வால்வோ பஸ்கள் வாங்கி தமிழகம் முழுதும் இயக்கி வருவதும், மேலும், இவர் தனது தொழிலை விரிவுப்படுத்த அரசு மற்றும் தனியார் வங்கிகளில் பல கோடி ரூபாய் கடன் பெற்றிருப்பதும், சமீபத்தில் தனியார் வங்கியில் ரூ.40 கோடி கடன் பெற்றிருப்பதும், பல்வேறு மருந்து நிறுவனங்களில் மூலப் பொருட்கள் வாங்கி, அந்த நிறுவனம் பெயரிலேயே மருந்துகள் தயாரித்து விற்பனை செய்து வந்ததும், மூலப் பொருட்கள் வாங்கியதற்கு பல கோடி ரூபாய் பணத்தை தராமல் ஏமாற்றி வந்துள்ளதும் தெரிய வந்துள்ளது.
இந்நிலையில், வள்ளியப்பன் போலி மருந்து தயாரிக்க உதவிய புதுச்சேரி மற்றும் கடலுாரை சேர்ந்த 9 பேரை கைது செய்தனர். இந்நிலையில் சென்னை மாதவரத்தில் உள்ள லுாபின் மருந்து நிறுவனம் அளித்த போலி மருந்து புகாரின் பேரில், மேட்டுப்பாளையம் போலீசார் வழக்கு பதிந்து, ராஜா (எ) வள்ளியப்பனையும், அமன் மற்றும் மீனாட்சி பார்மா குடோன்களின் உரிமையாளரான விவேக் ஆகியோரை நேற்று முன்தினம் கைது செய்து கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

