ஒரு மின் இணைப்புக்கு மட்டும் 100 யூனிட் இலவசம்: ஆய்வில் இறங்கியது மின்வாரியம்
ஒரு மின் இணைப்புக்கு மட்டும் 100 யூனிட் இலவசம்: ஆய்வில் இறங்கியது மின்வாரியம்
ADDED : செப் 17, 2024 05:19 AM

ராமநாதபுரம்: ஒரே உரிமையாளரின் இரு மின் இணைப்புகளை ஒருங்கிணைத்து ஒரு இணைப்புக்கு மட்டும் 100 யூனிட் இலவச மின்சாரம் கழிக்கும் புதிய நடைமுறையை அமல்படுத்த அது போன்ற இணைப்பு உள்ள வீடுகள், வர்த்தக நிறுவனங்களை கணக்கெடுக்கும் பணி ரகசியமாக நடக்கிறது.
தமிழக மின்வாரியம் வருவாயை பெருக்க ஒரு வீடு அல்லது வர்த்தக நிறுவனத்தில் இரு மின் இணைப்புகள் இருந்தால் அதை ஒரே மின் இணைப்பாக ஒருங்கிணைத்து அதில் ஒன்றில் மட்டும் 100 யூனிட் இலவசமாக கழித்து மின் கட்டணம் கணக்கீடு செய்யும் புதிய நடைமுறையை சென்னையில் அமல்படுத்தியுள்ளது. தொடர்ந்து தென் மாவட்டங்களில் அமல்படுத்த முடிவு செய்து அதுபோன்ற வீடுகள், வர்த்தக நிறுவனங்களை கணக்கெடுக்கும் பணியை ரகசியமாக மின்வாரிய அலுவலர்கள் மேற்கொண்டுள்ளனர்.
மின்வாரிய அலுவலர்கள் கூறியதாவது:
ஒரு வீட்டில் இரு மின் இணைப்பு இருந்தால் ஒருங்கிணைந்த இணைப்பாக கருதி மின் கட்டணத்தை கணக்கிடும் வகையில் சாப்ட்வேர் மாற்றி அமைக்கப்பட்டுள்ளது. வீட்டு இணைப்புக்கு ஒவ்வொரு பில் கணக்கீட்டிலும் 100 யூனிட் இலவசமாக கிடைக்கிறது.
தற்போது ஒரு வீட்டில் இரு இணைப்புகள் பெற்றிருந்தால் தலா 100 யூனிட் இலவசமாக பெறுகின்றனர். அதே போல் வர்த்தக நிறுவனத்துக்கு இரு இணைப்புகள் இருக்கும் போது மின் கட்டணம் குறைவாக வரும். ரகசிய கணக்கெடுப்பில் இத்தகைய இணைப்புகள் கண்டறியப்பட்டு இரு வீடுகளில் ஒன்றுக்கு மட்டும் 100 யூனிட் கழித்து கட்டணம் விதிக்கப்படும்.

