சந்தேக வளையத்தில் அ.தி.மு.க., பிரமுகர்: தொண்டாமுத்துாருக்கு சங்கர் போனது ஏன்?
சந்தேக வளையத்தில் அ.தி.மு.க., பிரமுகர்: தொண்டாமுத்துாருக்கு சங்கர் போனது ஏன்?
ADDED : மே 20, 2024 12:24 AM

'பெண் போலீசாரை தவறாக விமர்சித்து பேட்டியளித்தார் என்பதால், யு டியூபர் சவுக்கு சங்கர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்' என, சிலர் புகார் அளித்தனர். இதையடுத்து, அவர் கைது செய்யப்பட்டு கோவை சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். அவர் மீது கஞ்சா வைத்திருந்தது உட்பட, பல்வேறு வழக்குகள்பதியப்பட்டு உள்ளன.
இந்நிலையில், அவரை காவலில் எடுத்து விசாரித்த திருச்சி சைபர் க்ரைம் போலீசார், அவருடைய செயல்பாடுகள் குறித்து பல்வேறு கேள்விகளை கேட்டு விசாரணை நடத்தியதாக தெரிகிறது.
அத்துடன், அ.தி.மு.க., தரப்புடன் நெருக்கமாக இருந்து, தி.மு.க.,வையும், ஸ்டாலின் அரசையும், பெண் போலீசாரையும், பெண் போலீஸ் அதிகாரிகளையும் சமூக வலைதளங்களில் சவுக்கு சங்கர் விமர்சித்தது குறித்தும் கேட்டுள்ளனர்.
திருச்சி போலீசார் கூறியதாவது:
தமிழகத்தில் அ.தி.மு.க., ஆட்சி நடந்த போது, அக்கட்சியையும், ஆட்சியையும் சவுக்கு சங்கர் கடுமையாக விமர்சித்து வந்தார். அப்போதும், சிலருடைய பின்னணியில், இயங்கி இருக்கிறார்.
தி.மு.க.,வுடன் அந்த சமயத்தில் நட்பாக இருந்த அவர், தமிழகத்தில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டு தி.மு.க., ஆட்சிக்கு வந்ததும், அ.தி.மு.க., ஆதரவு நிலைப்பாடு எடுத்து செயல்பட துவங்கியுள்ளார்.
அத்துடன், முன்னாள் அமைச்சர்கள் பலருடன் அவர் தொடர்பில் இருந்துள்ளார். அவர்கள் வாயிலாக பல உதவிகளையும் பெற்றுள்ளார். இதுபற்றி தான், அவரிடம் நீண்ட நேரம் விசாரணை நடத்தப்பட்டது. ஆனால், இந்த கேள்விகளுக்கு எல்லாம், அவர் சரியான தகவல்களை தெரிவிக்க மறுத்ததுடன், மாற்றி மாற்றி பேசி, போலீசாரை குழப்பி விட்டார்.
அதுமட்டுமின்றி, சவுக்கு சங்கர் கைது செய்யப்பட்ட பின், அவருடைய மொபைல் போன் மற்றும் லேப்டாப் உள்ளிட்ட எலக்ட்ரானிக் கேட்ஜெட்டுகள் முழுதும் சோதனைக்கு உட்படுத்தப்பட்டதில், பல்வேறு தகவல்கள் கிடைத்துள்ளன.
குறிப்பாக, கைது செய்யப்படுவதற்கு பல நாட்களுக்கு முன்னும் பின்னும், சவுக்கு சங்கர் கோவைக்கு சென்று வந்துள்ளார். கோவை தொண்டாமுத்துார் தொகுதியில், அவர் இருந்ததை, மொபைல் போன் டவர் வாயிலாக கண்டறிந்தோம். அங்கு இருக்கும் அ.தி.மு.க., முக்கிய பிரமுகர் ஒருவரை தான் அவர் சந்தித்துள்ளார் என்பதையும் கண்டறிந்து உள்ளோம்.
குறிப்பிட்ட அந்த முக்கிய பிரமுகரின் உறவுக்கார பையன் வீட்டு திருமணம் சமீபத்தில் நடந்தது. அதற்காகவும், சவுக்கு சங்கர் கோவைக்கு சென்று திரும்பியுள்ளார். ஆனால், விசாரணையின் போது அந்த விபரங்கள் குறித்து, உருப்படியான தகவல் எதையும் அவர் தெரிவிக்கவில்லை.
இதனால், அந்த முக்கிய பிரமுகருக்கும், சவுக்கு சங்கருக்கும் இருக்கும் நெருக்கம் குறித்து தீவிரமாக விசாரித்து வருகிறோம். நெருக்கத்தை வெளிப்படுத்தும் ஆதாரங்கள் எதுவும் கிடைத்தால், முக்கிய பிரமுகரை விசாரணைக்கு அழைப்பது குறித்து யோசிப்போம்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.
- நமது நிருபர் -

