வெல்லும் வல்லமை யார் வசம்? பிரசாரம் அனல் தெறிக்கிறது
வெல்லும் வல்லமை யார் வசம்? பிரசாரம் அனல் தெறிக்கிறது
UPDATED : ஏப் 16, 2024 12:49 AM
ADDED : ஏப் 15, 2024 10:57 PM

நாளை(ஏப்ரல் 17), தேர்தல் பிரசாரம் நிறைவு பெறுகிறது. கோவை, பொள்ளாச்சி, நீலகிரி, திருப்பூர் தொகுதிகளில், வேட்பாளர்களின் பிரசாரத்தில் அனல் பறக்கிறது.
அண்ணாமலை அபாரம்
நிர்மலா சீதாராமன் உள்ளிட்ட தலைவர்கள், கொங்கு மண்டலப்பகுதியில் பிரசாரத்தில் ஈடுபட்டபோதிலும், அண்ணாமலையின் பிரசாரம்தான் வாக்காளர்களை உற்றுநோக்கச் செய்திருக்கிறது. விவேகம் - ஆவேசம் நிறைந்த உரைவீச்சுகளை மேற்கொண்டு வருகிறார்.
நீலகிரி பா.ஜ., வேட்பாளர் முருகன், மக்களோடு மக்களாக கலந்து பிரசாரத்தை மேற்கொண்டு வருவது கவர்கிறது. திருப்பூர் வேட்பாளர் முருகானந்தமோ, வாக்காளர் எந்த மொழி அறிந்தவரோ, அதற்கேற்ப அதே மொழியில் பிரசாரத்தை முன்னெடுக்கிறார். பொள்ளாச்சி வேட்பாளர் வசந்தராஜனின் பிரசாரமும், வாக்காளரைக் கவர்கிறது.
அ.தி.மு.க.,வினர் சுறுசுறுப்பு
கோவை - சிங்கை ராமச்சந்திரன், திருப்பூர் - அருணாச்சலம், பொள்ளாச்சி - கார்த்திகேயன், நீலகிரி - லோகேஷ் தமிழ்ச்செல்வன் என புதுமுகங்களை அ.தி.மு.க., களமிறக்கியது. இவர்களில் சிங்கை ராமச்சந்திரன் தனித்து தெரிகிறார். லோகேஷ் தமிழ்ச்செல்வன், முன்னாள் சபாநாயகர் தனபாலின் மகன் என்பதால், இவரது பிரசாரமும் உற்றுநோக்கப்படுகிறது. பொதுச்செயலாளர் பழனிசாமி, தி.மு.க., அரசின் மீதான சாடல்களுடன் பொதுக்கூட்டத்தில் காரசாரமாகப் பேசினார்.
தி.மு.க.,வினர் வேகம்
கோவை - கணபதி ராஜ்குமார், பொள்ளாச்சி - ஈஸ்வரசாமி, நீலகிரி - ராஜா ஆகியோர் தி.மு.க.,வில் வேட்பாளராக களமிறங்கியுள்ளனர். திருப்பூரில் இந்திய கம்யூ., வேட்பாளர் சுப்பராயன் களமிறங்கினார். முதல்வர் ஸ்டாலின், அமைச்சர் உதயநிதி, காங்., எம்.பி., ராகுல், மாநில தலைவர் செல்வப்பெருந்தகை, நடிகர் கமல், ம.தி.மு.க., பொதுச்செயலாளர் வைகோ மற்றும் கம்யூனிஸ்ட் தலைவர்கள் உள்பட தி.மு.க., மற்றும் கூட்டணி சார்ந்த தலைவர்கள் பலரது பிரசாரம், தி.மு.க.,வினரைச் சுறுசுறுப்பாக்கியுள்ளது.
நாம் தமிழர் வேட்பாளர்களுக்கு ஆதரவாக ஒருங்கிணைப்பாளர் சீமான் பிரசாரம் செய்துள்ளார். வேட்பாளர்களே தங்கள் பேச்சில் வாக்காளர்களைக் கவர்கின்றனர்.
தலைவர்களின் வருகை கிட்டத்தட்ட நிறைவு பெற்றுவிட்டது. இன்றும், நாளையும் பிரசாரம் சூரியக்கதிர்களின் வெம்மைக்கு நிகராக அனல் கக்கும் என்பது உறுதி. தலைவர்களின் பிரசாரத்தால், நிர்வாகிகளும், தொண்டர்களும் உற்சாகமடைந்துள்ளனர்.
பிரசாரங்களை உற்றுநோக்கியுள்ள வாக்காளர்கள், யாருக்கு முத்திரை பதிக்கப்போகிறார்கள் என்பது 'சஸ்பென்ஸ்'.

