74 லட்சம் பேரின் தரவுகள் எங்கே? அதிர்ச்சியில் அமைப்பு சாரா தொழிலாளர்கள்
74 லட்சம் பேரின் தரவுகள் எங்கே? அதிர்ச்சியில் அமைப்பு சாரா தொழிலாளர்கள்
ADDED : மே 22, 2024 02:08 AM

தமிழக அரசின் நல வாரியங்களில் உறுப்பினர்களாக உள்ளவர்களின் குடும்பங்களுக்கு, கல்வி உதவித்தொகை, திருமண உதவித்தொகை, வீடு கட்ட உதவி, இயற்கை மரண ஈமச்சடங்கு உதவி, பெண் தொழிலாளர்களுக்கு, 55 வயதில் ஓய்வூதியம் உள்ளிட்ட, பல்வேறு பலன்கள் வழங்கப்படுகின்றன. இதற்காக, நல வாரியங்களில் பதிவு செய்திருந்த, 74 லட்சம் தொழிலாளர்களின் தரவுகள் அழிந்து விட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.
இதுகுறித்து, முதல்வர் ஸ்டாலினுக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மாநில செயலர் கே.பாலகிருஷ்ணன் அனுப்பியுள்ள கடிதம்:
தொழிலாளர் நலத்துறையின் கீழ் உள்ள நல வாரியங்களில், லட்சக்கணக்கான தொழிலாளர்கள் பதிவு செய்துள்ளனர். அவர்களுக்கு, மாவட்ட சமூக பாதுகாப்பு திட்ட அலுவலகங்கள் வாயிலாக, பல்வேறு பலன்கள் அரசால் வழங்கப்பட்டு வருகின்றன.
கொரோனா தொற்று காலத்தில், அ.தி.மு.க., அரசு, நல வாரிய பணிகள் அனைத்தையும், 'ஆன்லைன்' வாயிலாக செய்வது என்று தன்னிச்சையாக முடிவெடுத்தது. இதன் காரணமாக, 40 லட்சம் தொழிலாளர்களால், நல வாரியங்களுக்கான உறுப்பினர் அட்டையை புதுப்பிக்க முடியாமல் போய் விட்டது.
அதோடு, 'ஆன்லைன்' வாயிலாக பதிவு செய்திருந்த, 74 லட்சம் தொழிலாளர்களின் தரவுகளும் ஆவணங்களும் அழிந்து விட்டதாக, தற்போது தொழிலாளர் நலத்துறை கூறுகிறது. இதையடுத்து, மீண்டும் ஆவணங்களை ஆன்லைனில் பதிவேற்றம் செய்ய நிர்ப்பந்திக்கின்றனர்.
அனைத்தும் டிஜிட்டல் மயமாக்கப்பட்டுள்ள நிலையில், தொழிலாளர் நலத்துறையின் ஆன்லைன் பதிவு மட்டும் அழிந்து விட்டதாக கூறுவது ஏற்புடையதல்ல. தொழிலாளர்களின் பதிவு தரவுகளை மீட்டெடுக்க, அரசும், தொழிலாளர் நலத்துறையும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

