அரிசி விலை உயர்வில் தவறில்லை; சொல்கின்றனர் வணிகர்கள்
அரிசி விலை உயர்வில் தவறில்லை; சொல்கின்றனர் வணிகர்கள்
ADDED : ஏப் 30, 2024 03:11 AM

திருச்சியில், தமிழ்நாடு அரிசி ஆலை உரிமையாளர்கள் மற்றும் நெல், அரிசி வணிகர் சங்கங்களின் சம்மேளன மாநிலப் பொதுக் குழுக் கூட்டம் நேற்று முன்தினம் நடைபெற்றது.
கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் பற்றி சம்மேளனத் தலைவர் துளசிங்கம், மாநில செயலர் மோகன், செய்தியாளர்களிடம் கூறியதாவது:
தமிழகத்தில், 25 கிலோ மற்றும் அதற்கும் கீழ் உள்ள, பையில் அடைக்கப்பட்ட அரிசிக்கு, மத்திய அரசு ஜி.எஸ்.டி., விதிக்கிறது. இதனால், 1 கிலோ அரிசி கூடுதலாக சேர்த்து, 26 கிலோ அரிசி பையாக விற்பனை செய்ய வேண்டி உள்ளது.
கூடுதலாக சேர்க்கப்பட்ட 1 கிலோவுக்கும் சேர்த்து விலை வைப்பதால், அரிசி விலை உயர்ந்திருப்பதாகக் கூறப்படுகிறது.
தமிழகம் உட்பட நான்கு மாநிலங்களில் மட்டுமே அரிசிக்கு, ஜி.எஸ்.டி., விதிக்கப்பட்டு உள்ளது. எனவே, அரிசிக்கான, 5 சதவீதம் ஜி.எஸ்.டி.,யை முழுமையாக விலக்க வேண்டும்.
வறட்சி, வெள்ளம் போன்ற இயற்கை பேரிடர்கள் தமிழகத்தில் இருந்தாலும், அண்டை மாநிலங்களில் இருந்தும் அரிசி வரத்து இருப்பதால், தட்டுப்பாடு இல்லை.
மற்ற பொருட்கள் விலை உயர்வு ஏற்பட்டு இருப்பதோடு, விவசாய கூலி மற்றும் இடு பொருட்கள் விலையும் உயர்ந்துள்ளன.
அரசு தரப்பிலும், விவசாயிகளுக்கு ஆதார விலை வழங்கப்படுகிறது. இவற்றை கருத்தில் கொண்டால், அரிசி விலை உயர்வு இயல்பானது தான்; விலை குறைய வேண்டும் என்ற எண்ணம் ஏற்புடையது அல்ல. இவ்வாறு அவர்கள் கூறினர்.
- நமது நிருபர் -

