மத்திய அரசு திட்டத்துக்கு தமிழக அரசு ஒத்துழைப்பு இல்லை; மத்திய இணை அமைச்சர் குற்றச்சாட்டு
மத்திய அரசு திட்டத்துக்கு தமிழக அரசு ஒத்துழைப்பு இல்லை; மத்திய இணை அமைச்சர் குற்றச்சாட்டு
UPDATED : மார் 29, 2024 01:50 AM
ADDED : மார் 29, 2024 12:26 AM

அன்னூர்;'சர்வதேச அளவில், பொருளாதாரத்தில் இந்தியா ஐந்தாவது இடத்தை எட்டி உள்ளது,' என, மத்திய இணை அமைச்சர் முருகன் அன்னூரில் தெரிவித்தார்.
குறு, சிறு, நடுத்தர தொழில் நிறுவனங்களுக்கான அமைப்பான, 'லகு உத்தியோக் பாரதி' அமைப்பு சார்பில், அன்னூர் அருகே தெலுங்குபாளையத்தில் கலந்துரையாடல் நிகழ்ச்சி நடந்தது.
இவ்வமைப்பின் தேசிய துணைத் தலைவர் மோகனசுந்தரம், குறு, சிறு, நடுத்தர தொழில் நிறுவனங்களுக்கான கோரிக்கைகள் குறித்து தெரிவித்தார். இதையடுத்து மத்திய இணை அமைச்சர் முருகன் பேசியதாவது :
பா.ஜ., 2014ல் பொறுப்பேற்கும் போது இந்தியா சர்வதேச அளவில் பொருளாதாரத்தில் 10வது இடத்தில் இருந்தது.
பிரதமர் மோடியின் கடும் முயற்சியால் உங்களைப் போன்ற தொழில் முனைவோர்களின் ஒத்துழைப்பால் தற்போது ஐந்தாவது இடத்தை எட்டி உள்ளது.
2047ல் நாம் சுதந்திரம் பெற்ற 100வது ஆண்டில் இந்தியா வல்லரசு நாடாக உருவாக பிரதமர் உழைத்து வருகிறார்.
சுதந்திரத்திற்கு பிறகு கடந்த பத்து ஆண்டுகளில் தான் நாட்டில் அதிக அளவு தேசிய நெடுஞ்சாலை அமைக்கப்பட்டுள்ளது. விமான நிலையங்கள் விரிவுபடுத்தப்பட்டுள்ளன. ரயில்வே துறையில் புதிய சகாப்தம் உருவாகியுள்ளது. விமான நிலையங்களுக்கு இணையாக ரயில்வே ஸ்டேஷன்கள் உருவாக்கப்பட்டுள்ளன.
ஆனால், மத்திய அரசு திட்டங்களுக்கு தமிழக அரசு ஒத்துழைப்பு தருவதில்லை, தேசிய நெடுஞ்சாலை விரிவாக்கத்திற்கு அரசு நிதி ஒதுக்கி இரண்டு ஆண்டுகள் ஆகிவிட்டது. ஆனால் தமிழக அரசு நிலம் கையகப்படுத்தி தராததால் தேசிய நெடுஞ்சாலை விரிவாக்கம் முடங்கிக் கிடக்கிறது.
விமான நிலைய விரிவாக்கத்திற்கும் தமிழக அரசின் ஒத்துழைப்பு இல்லாததால் அதுவும் முடங்கியுள்ளது. தி.மு.க., அரசு தனக்கு கமிஷன் எதில் வருமோ அதில் மட்டுமே கவனம் செலுத்தும்.
அன்னூர் அருகே விவசாய நிலங்களை கையகப்படுத்த தமிழக அரசு முயற்சித்த போது பா.ஜ., போராட்டம் நடத்தியதால் விவசாய நிலங்கள் கையகப்படுத்தப்படுவது கைவிடப்பட்டது. தமிழகத்தில் ஊழல், கட்டப்பஞ்சாயத்து, குடும்ப ஆட்சி, போதை பொருட்கள் அதிகரிப்பு என உள்ளது.
3,000 கோடி ரூபாய் மதிப்புள்ள போதைப் பொருள் கடத்தியவர் தி.மு.க.,வைச் சேர்ந்தவர் என தெரிய வந்துள்ளது. எந்த ஊருக்கு சென்றாலும் அங்கு டாஸ்மாக் கடையும், கஞ்சா விற்பனையாளர்களும் தான் நம்மை வரவேற்கின்றனர்.
இவ்வாறு அவர் பேசினார்.
நிகழ்ச்சியில் பா.ஜ., வடக்கு மாவட்ட தலைவர் சங்கீதா, மாவட்ட செயலாளர் ஜெயபால், ஒன்றிய தலைவர் ரத்தினசாமி, ஆன்மீக அணி மாவட்ட தலைவர் வெள்ளிங்கிரி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

