எழுத்துப்பிழை போன்ற காரணங்களால் ஓட்டளிக்கும் உரிமை மறுக்கப்பட கூடாது
எழுத்துப்பிழை போன்ற காரணங்களால் ஓட்டளிக்கும் உரிமை மறுக்கப்பட கூடாது
ADDED : ஏப் 05, 2024 02:47 AM

புதுடில்லி: எழுத்துப்பிழை உள்ளிட்ட சிறிய தவறுகளால், உண்மையான வாக்காளர்கள் ஓட்டளிக்கும் உரிமையை தவறவிடாமல் இருப்பதை உறுதி செய்ய, மாநில தேர்தல் அதிகாரிகளுக்கான வழிகாட்டுதல்களை தலைமை தேர்தல் கமிஷன் வழங்கி உள்ளது.
வரும் 19ம் தேதி துவங்கி, ஜூன் 1 வரை, ஏழு கட்டங்களாக லோக்சபா தேர்தலுக்கான ஓட்டுப்பதிவு நடக்கிறது. முடிவுகள் ஜூன் 4ல் வெளியாகின்றன.
இதற்கான ஏற்பாடுகளை தலைமை தேர்தல் கமிஷன் முழுவீச்சில் செய்து வருகிறது. வாக்காளர் அடையாள அட்டையில் எழுத்துப்பிழை, புகைப்படம் அல்லது முகவரி மாற்றம் உள்ளிட்ட சிறிய பிழைகளால் வாக்காளர்கள் ஓட்டளிக்க முடியாத நிலை ஏற்படுகின்றன.
இவற்றை தவிர்த்து, உண்மையான வாக்காளர்கள் ஓட்டுரிமையை இழக்காமல் இருக்க, தலைமை தேர்தல் கமிஷன் வழிகாட்டுதல்களை வெளியிட்டுள்ளன.
அதன் விபரம்:
பெயர் மற்றும் முகவரியில் எழுத்துப் பிழை போன்ற சிறிய காரணங்களுக்காக வாக்காளரை ஓட்டளிக்கவிடாமல் திருப்பி அனுப்பக் கூடாது.
வாக்காளர் அடையாள அட்டையில் புகைப்படம் மாறி இருந்தாலோ, வாக்காளர் அடையாள அட்டை இல்லாமல் இருந்தாலோ, வேறு முறையான ஆவணங்களை காட்டினால் ஓட்டளிக்க அனுமதிக்க வேண்டும்.
ஆதார், புகைப்படத்துடன் கூடிய வங்கி அல்லது தபால் துறை பாஸ்புக், தொழிலாளர் அமைச்சகம் வழங்கிய சுகாதார காப்பீடு அட்டை, ஓட்டுனர் உரிமம், வருமான வரிக்கணக்கு அட்டை உள்ளிட்ட அட்டைகளில் ஒன்றை காண்பித்து ஓட்டளிக்கலாம்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

