தி.மு.க., ஆட்சியில் கோவைக்கான திட்டங்களில் அரசு கைவிட்டதே அதிகம்: 3 ஆண்டுகளாக புதிதாக எதுவும் நிறைவேறவில்லை!
தி.மு.க., ஆட்சியில் கோவைக்கான திட்டங்களில் அரசு கைவிட்டதே அதிகம்: 3 ஆண்டுகளாக புதிதாக எதுவும் நிறைவேறவில்லை!
ADDED : ஏப் 15, 2024 02:32 AM

தி.மு.க., ஆட்சிக்கு வந்த பின், கடந்த மூன்றாண்டுகளாக கோவையில் புதிதாக எந்தத் திட்டமும் நிறைவேற்றப்படவில்லை என்பதால், இப்போதுஅளித்துள்ளவாக்குறுதிகள், மக்களிடம் நம்பிக்கையை ஏற்படுத்தவில்லை.
கோவையில் சர்வதேச கிரிக்கெட் ஸ்டேடியம் அமைக்கப்படும்; அறிவியல் மையம், கலைஞர் அறிவுசார் மையம் அமைக்கப்படும் என்று, தி.மு.க., சார்பில் தேர்தல் வாக்குறுதிகள் சில அறிவிக்கப்பட்டுள்ளன. இந்த அறிவிப்புகள், மக்களிடம் மகிழ்ச்சியை ஏற்படுத்துவதற்குப் பதிலாக, பல கேள்விகளை எழுப்பியுள்ளன.
புதிய திட்டம் ஏதுமில்லை
அதற்குக் காரணம், தி.மு.க., ஆட்சிக்கு வந்து மூன்றாண்டுகளாகியும், கோவையில் புதிதாக எந்த திட்டமும் நிறைவேற்றப்படவில்லை என்பதுதான்.
கோவை நகரில் தற்போது அவிநாசி ரோட்டிலும், உக்கடம் - ஆத்துப்பாலம் இடையிலும் பிரமாண்டமான பாலங்கள் கட்டப்பட்டு வருகின்றன. இவை இரண்டுமே, கடந்த அ.தி.மு.க., ஆட்சியில் துவக்கப்பட்டவை.
அதேபோல, செம்மொழிப் பூங்கா அமைக்கும் பணியும், மேற்கு புறவழிச்சாலை முதற்கட்டப் பணியும் நடந்து கொண்டிருக்கிறது.
இந்த இரண்டு திட்டங்களுமே, 2010ல் செம்மொழி மாநாட்டின்போது, அன்றைய முதல்வர் கருணா நிதியால் அறிவிக்கப்பட்ட திட்டங்கள். இவை தவிர்த்து, புதிய திட்டம் எதையும் நிறைவேற்றாத அரசு, பல திட்டங்களைக் கைவிட்டுள்ளது.
லாலி ரோடு சந்திப்பில் பாலம் கட்டுவது, விரிவாக்கம் செய்வது இரண்டுமே, நீண்ட கால கோரிக்கையாகும். இதை இன்று வரை நிறைவேற்றவேயில்லை.
மேட்டுப்பாளையம் பை பாஸ் திட்டம், டெண்டர் விடும் நிலையில், பல ஆண்டுகளுக்குப் பின், மீண்டும் தேசிய நெடுஞ்சாலைத்துறைக்கு, தள்ளி விடப்பட்டுள்ளது.
நிதி ஒதுக்கியும் நிறுத்தம்
காந்திபுரம் சந்திப்பில் மேம்பாலம் கட்டியும், போக்குவரத்து நெரிசல் குறையாத காரணத்தால், பாரதியார் ரோட்டை நோக்கி ஒன்றும், ஜி.பி.,சிக்னல் சந்திப்பில் 100 அடி ரோட்டை நோக்கி மற்றொன்றுமாக, இரண்டு இறங்குதளங்கள் அமைக்க அரசு ஒப்புதல் அளித்து, ரூ.23 கோடியே 92 லட்சம் நிதி ஒதுக்கப்பட்டது. ஆனால் மெட்ரோ ரயில் திட்டத்தைக் காரணம் காட்டி, அந்தத் திட்டம் கைவிடப்பட்டுள்ளது.
இதே மெட்ரோ ரயில் திட்டத்தைச் சுட்டிக்காட்டி, சரவணம்பட்டி மேம்பாலமும் கூடுதல் நிலம் தேவையென்று கிடப்பில் போடப்பட்டுள்ளது. சிங்காநல்லுார் பாலம் கட்டும் பணி, தள்ளிக் கொண்டே போகிறது.
சுரங்கப்பாதைகளும் ரத்து
அவிநாசி ரோட்டில் கட்டப்படும் பாலத்தில், பாதசாரிகள் ரோட்டைக்கடக்க, ஐந்து இடங்களில் சுரங்க நடைபாதை அமைப்பதற்கு திட்டமிடப்பட்டிருந்தது.
லட்சுமி மில் சந்திப்பு, ஜி.ஆர்.ஜி., பள்ளி, கிருஷ்ணம்மாள் கல்லுாரி, பி.எஸ்.ஜி., கல்லுாரி மற்றும் கே.எம்.சி.எச்., ஆகிய ஐந்து இடங்கள், இதற்காக தேர்வு செய்யப்பட்டிருந்தன.
ஆனால், முதற்கட்டமாக அவிநாசி ரோட்டில் மெட்ரோ ரயில் திட்டம் செயல்படுத்தப்படுவதாக கூறி, அந்த சுரங்க நடைபாதைகளையும் நெடுஞ்சாலைத்துறையினர் கை விட்டுள்ளனர்.
ஆனால் திட்டமிடப்பட்ட பணிகளையும், கேட்ட கோரிக்கைகளையும் நிறைவேற்றாத தமிழக அரசு, புதிதாக ஸ்டேடியம், கலைஞர் நுாலகம், அறிவியல் மையம் என்று வாக்குறுதிகளை அள்ளி வீசுவதை, கோவை மக்கள் யாரும் நம்புவதற்குத் தயாராக இல்லை என்பதே, உண்மை நிலவரம்.
-நமது நிருபர்-

