UPDATED : ஏப் 21, 2024 04:07 AM
ADDED : ஏப் 20, 2024 11:48 PM

உறக்கத்தில் தட்டியெழுப்பி ஓட்டளிக்கச் சொன்னாலும், தான் சார்ந்துள்ள கட்சிக்கே ஓட்டளிக்கும், அரசியல் கட்சிகளின் அசைக்க முடியாத ஓட்டு வங்கிகள் ஒரு பக்கம்; குறிப்பிட்ட கட்சியின் ஓட்டு வங்கிகளாக அல்லாமல், மாற்றத்தை விரும்பி, ஒவ்வொரு தேர்தலிலும், மாறி, மாறி வாக்களிக்கும் மனநிலையில் உள்ள வாக்காளர்கள் இன்னொரு புறம்;'அதிக பணம், அன்பளிப்பு தரும் வாக்காளர்களுக்கே ஓட்டு' என்ற நிலையில் உள்ள வாக்காளர்கள் மற்றொரு புறம். இந்தச் சூழலுக்கிடையேதான், திருப்பூர் லோக்சபா தொகுதி தேர்தல் களத்தில், வேட்பாளர்கள், களமாடினர். போட்டி அனல் பறந்தது.
வீதி, வீதியாக தெரு, தெருவாக இறங்கி ஓட்டு சேகரிப்பில் ஈடுபட்ட வேட்பாளர்களின் கடைசி ஆயுதம், பணம் தான்.
'பணம், அன்பளிப்பு கொடுத்து, பெறும் ஓட்டுகள் தான் வெற்றியை தீர்மானிக்கின்றன' என்பது, அரசியல்வாதிகளின் கணிப்பு, கணக்காக மாறிப் போயிருக்கிறது.
ரூ.30 கோடியைத் தாண்டி...
அரசியல் நோக்கர்கள் சிலர் கூறியதாவது: ஒரு லோக்சபா தொகுதியில் போட்டியிடும் வேட்பாளர்கள், 95 லட்சம் ரூபாய் வரை செலவு செய்ய, அதிகாரபூர்வ அனுமதியுண்டு. ஆனால், வேட்பாளர்கள் தொகுதிக்கு, 30 முதல், 50 கோடி ரூபாய் வரை செலவழிக்கின்றனர். சில தொகுதிகளில், அதற்கும் மேல் கூட, வேட்பாளர்கள் செலவழிக்கின்றனர்.
கட்சிக்காரர்களுக்கு பணம், அந்தந்த தொகுதியில் தங்களுக்கு ஆதரவளிக்கும் சிறிய சிறிய அமைப்புகள், சங்கங்களுக்கு நன்கொடை, கிராமப்புற மக்களின் ஓட்டுகளை கவர, அங்குள்ள கோவில்களுக்கு நன்கொடை, பிரசார வாகனம், ஒலி பெருக்கி வாடகை, அதில் ஓட்டு சேகரித்து செல்லும் பேச்சாளர்களுக்கு உணவு செலவு உட்பட கை செலவுக்கு பணம், கூட்டணி கட்சியினருக்கு என, வேட்பாளர்களின் செலவு பட்டியல் நீண்டுகொண்டே செல்லும்.
இதில், சில பெரிய கட்சிகள், தங்கள் வேட்பாளர்களுக்கு கட்சியில் இருந்து பணம் வழங்குகின்றன. உதாரணமாக, கட்சி சார்பில், 20 கோடி ரூபாய் வழங்கப்பட்டால், அந்த வேட்பாளர், 20 கோடி ரூபாய் செலவழிக்க வேண்டும். இந்த நிபந்தனை அடிப்படையில் தான், சில கட்சிகள் வேட்பாளர்களையே தேர்வு செய்தன.
இதுபோன்ற சூழலில், தேர்தலுக்கு பணத்தை தண்ணீராய் செலவழிக்கும் வேட்பாளர்கள், கடைசியாக, வாக்காளர்களுக்கு பணம் தர முற்பட்டனர். திருப்பூரில் ஓட்டுப்பதிவு நாளுக்கு முந்தைய நாளில் துவங்கி, ஓட்டுப்பதிவு நாளின் இறுதிக்கட்டம் வரை வாக்காளர்களுக்கு பணம் பட்டுவாடா நடந்துகொண்டேதான் இருந்தது.
இவ்வாறு, அவர்கள் கூறினர்.

