தினமலர்
sub-imageசினிமா
sub-imageடிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

/செய்திகள்/ப்ரீமியம்/ விஜய் மனநிலையில் மாற்றம் வந்தது எப்படி?

விஜய் மனநிலையில் மாற்றம் வந்தது எப்படி?

விஜய் மனநிலையில் மாற்றம் வந்தது எப்படி?


ADDED : மார் 02, 2025 02:48 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : மார் 02, 2025 02:48 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

தி.மு.க., கூட்டணியை வீழ்த்த வேண்டும் என்றால், அதற்கு, அ.தி.மு.க., கூட்டணியில் த.வெ.க., சேர வேண்டும் என்று, விஜய்க்கு பல தரப்பில் இருந்தும் ஆலோசனை சொல்லப்பட்டது. அதை ஏற்று, அ.தி.மு.க., தரப்பில் சிலருடன் பேச்சும் நடத்தப்பட்டது. அதில், பழனிசாமி தரப்பில் சில நிபந்தனைகள் விதிக்கப்பட்டதாக தெரிகிறது.

அ.தி.மு.க., தான் பெரிய கட்சி; பல தேர்தல்களை சந்தித்து, தன் ஓட்டு வங்கியை நிரூபித்திருக்கிறது. அதனால், அ.தி.மு.க., தலைமையில் தான் கூட்டணி. அதில், த.வெ.க., இடம்பெற வேண்டும்

த.வெ.க.,வுக்கு இதுதான் முதல் தேர்தல். இதுவரை தங்களுக்கான ஓட்டு வங்கி எவ்வளவு என்பதை நிரூபிக்காத சூழலில், அக்கட்சிக்கான தொகுதி எண்ணிக்கையை அ.தி.மு.க.,வே முடிவு செய்யும்

அ.தி.மு.க., தலைமையில் அமையும் கூட்டணியில் இடம் பெறலாம். ஆனால், ஆட்சியில் பங்கு தரப்பட மாட்டாது. கூட்டணி ஆட்சிக்கு அ.தி.மு.க., ஒருபோதும் முன்வராது

எந்த நிலையிலும் முதல்வர் பதவியை விட்டுத்தர முடியாது. அ.தி.மு.க., பொதுச்செயலர் பழனிசாமி தான் முதல்வர் வேட்பாளராக இருப்பார். அவரை முன்னிறுத்தி தான் விஜய் பிரசாரம் செய்ய வேண்டும்.

விஜய் தரப்பில் பேச்சு நடத்தச் சென்றவர்கள், இதையெல்லாம் அவரிடம் கூறியுள்ளனர். அதையடுத்து, இந்த கூட்டணி அவசியமா என்பது குறித்து, 'சர்வே' நடத்தி அதன் முடிவுகளை அளிக்குமாறு, வியூக வகுப்பாளர்களிடம் விஜய் கூறியிருந்தார்.

அதன்படி, கடந்த மாதத்தில் தமிழகம் முழுதும் ரகசிய சர்வே நடத்தப்பட்டுள்ளது. அதில், த.வெ.க., தனித்து போட்டியிட்டாலே, 18 சதவீத ஓட்டுகளை பெறும். தி.மு.க., - அ.தி.மு.க., - பா.ஜ., போன்ற கட்சிகள் தவிர்த்து, சிறிய கட்சிகளை துணைக்கு வைத்துக் கொண்டு தேர்தல் களத்தை சந்திக்கும் போது, 20 சதவீதத்துக்கும் கூடுதலான ஓட்டுகளை பெறும் என்றும், கருத்துக்கணிப்பு முடிவாக, விஜயிடம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தி.மு.க., - அ.தி.மு.க., - பா.ஜ., தனித்தனி கூட்டணி அமைத்து போட்டியிடும் சூழலில், த.வெ.க., தனியாக கூட்டணி அமைத்து போட்டியிட்டால், சீமான் உள்ளிட்ட ஐந்துமுனை போட்டியில், த.வெ.க.,வுக்கே கூடுதல் எம்.எல்.ஏ.,க்கள் கிடைக்கும் வாய்ப்பு இருப்பதாகவும் விஜயிடம் தெரிவித்துள்ளனர்.

சீமான் தனக்கென தனி பாதை வகுத்து செயல்படுவதாலேயே, பெரிய அளவில் ரசிகர் பட்டாளமோ, தொண்டர்களோ இல்லாமல் இருந்த அக்கட்சி, இன்றைக்கு 8.6 சதவீத ஓட்டுகளை பெற்றிருக்கிறது. ஏற்கனவே பெரும் எண்ணிக்கையில் ரசிகர் பட்டாளம் வைத்திருக்கும் விஜயால், தமிழக அரசியலில் பெரும் மாற்றத்தை ஏற்படுத்த முடியும் என்றும் வியூக வகுப்பாளர்கள் கூறி உள்ளனர்.

இதையடுத்து, கட்சியின் முன்னணி தலைவர்களுடன் ஆலோசித்த விஜய், அ.தி.மு.க.,வுடன் கூட்டணி இல்லாமலேயே வரும் சட்டசபை தேர்தலை த.வெ.க., சந்திக்கும் என்ற அறிவிப்பை வெளியிடுமாறு, தன் ஆலோசகர் பிரசாந்த் கிஷோருக்கு அறிவுறுத்தி இருக்கிறார். இதில், இன்னொரு உள்விவகாரமும் ஒளிந்திருப்பதாக, அரசியல் வல்லுனர்கள் கூறுகின்றனர்.

அவர்கள் கூறியதாவது:

தொடர்ந்து, 11 தோல்விகளை சந்தித்த பிறகும், பழனிசாமி தன்னை மாபெரும் சக்தி என்று நினைத்துக் கொண்டிருக்கிறார். அதனாலேயே, த.வெ.க., உள்ளிட்ட கட்சிகளை தனக்கு கீழானதாக கருதி, அதற்கேற்ப, 'டீல்' பேச வைத்துள்ளார்.

இது, விஜய்க்கு பிடிக்கவில்லை. த.வெ.க., தனித்து போட்டியிடும் என அறிவிப்பதன் வாயிலாக, தேர்தலில் அ.தி.மு.க., தனித்து விடப்படுமோ என்ற பதற்றம், அக்கட்சியின் இரண்டாம் கட்டத் தலைவர்களுக்கும், தொண்டர்களுக்கும் ஏற்படும்.

அதையடுத்து, த.வெ.க.,வுடன் இணக்கமாக சென்று, கூட்டணி அமைத்தால் மட்டுமே, அ.தி.மு.க.,வின் எதிர்காலம் சிறப்பாக இருக்கும் என, கட்சியின் தலைவர்களும், தொண்டர்களும் பழனிசாமிக்கு நெருக்கடி கொடுப்பர். அதன்பின், பழனிசாமி இறங்கி வந்து பேச்சு நடத்துவார்.

இப்படியொரு திட்டத்துடன் கூட, அ.தி.மு.க.,வுடன் கூட்டணி கிடையாது என விஜய் தரப்பில் அறிவிப்பு வெளியிட வைத்திருக்கலாம். பின்னணியில் பல்வேறு அரசியல் கணக்குகள் இருப்பதால், இது த.வெ.க.,வின் இறுதி முடிவல்ல.

இவ்வாறு அவர்கள் கூறினர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us