உண்மை தெரியாமல் பேசாதீங்க! பா.ஜ.,வுக்கு இலங்கை மீனவர்கள் எச்சரிக்கை
உண்மை தெரியாமல் பேசாதீங்க! பா.ஜ.,வுக்கு இலங்கை மீனவர்கள் எச்சரிக்கை
UPDATED : ஏப் 03, 2024 04:18 AM
ADDED : ஏப் 02, 2024 08:56 PM

இலங்கையிடம் இருந்து கச்சத்தீவை மீட்க, இந்தியா முயற்சி எடுத்து வருகிறது; விரைவில், அது தொடர்பான நல்ல செய்தி வரும் என, தமிழக பா.ஜ., தலைவர் அண்ணாமலை கூறியிருப்பதற்கு, இலங்கை மீனவர்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.
இதுகுறித்து, யாழ் மாவட்ட கடல் தொழிலாளர் கிராமிய அமைப்புகளின் தலைவர் செல்லதுரை நற்குணம் கூறியதாவது:
கச்சத்தீவு இலங்கையின் சொத்து; அதை மீட்டு இந்தியாவிடம் கொடுக்கப் போவதாக, தமிழக பா.ஜ., தலைவர் அண்ணாமலை கூறியிருப்பது கடும் கண்டனத்துக்கு உரியது. தமிழகத்தில் விரைவில் லோக்சபா தேர்தல் நடக்கவிருக்கிறது.
தேர்தல் ஜுரம்
தேர்தலில் எதிர்பார்த்த வெற்றி தனக்கு கிடைக்குமோ என்ற சந்தேகத்தால், அண்ணாமலைக்கு தேர்தல் ஜுரம் வந்திருக்கிறது.
அதனால், எந்த அறிவிப்பையாவது வெளியிட்டு, அதன் வாயிலாக தமிழக மீனவர்களின் ஓட்டுகளை, தங்கள் பக்கம் திருப்பலாமா என்று திட்டம் போட்டு, ஒரு நாடகம் போட்டிருக்கிறார்.
கடந்த, 1974ல் என்ன நடந்தது என்பது புரியாமலேயே, அரசியலுக்காக பொய் சொல்வதை, இந்திய அரசியல்வாதிகள் வாடிக்கையாக வைத்திருக்கின்றனர். 1974க்கு முன், இலங்கை மீனவர்கள், தமிழகத்தின் கன்னியாகுமரியில் இருந்து நாகப்பட்டினம் வரை, எல்லை கடந்து சென்று மீன் பிடிப்பதை வழக்கமாக வைத்திருந்தனர். இதனால், இலங்கை மீனவர்களுக்கு எதிராக தமிழக மீனவர்கள் கொந்தளித்தனர்.
இதை எப்படி தடுத்து, தமிழக மீனவர்கள் கொந்தளிப்பை அடக்குவது என்று புரியாமல் இந்திய அரசு தவித்தது.
அந்த நேரத்தில் தான், இந்தியாவுக்கு சொந்தமான கச்சத்தீவை, இலங்கைக்கு கொடுத்து, அந்தப்பகுதி வரை இலங்கை மீனவர்கள் மீன்பிடித்துக் கொள்ளலாம்.
இந்திய எல்லைக்குள் வந்து மீன் பிடித்தால் நடவடிக்கை எடுக்கலாம் என்பதற்காக, இந்தியா வலிந்து கச்சத்தீவை இலங்கையிடம் திணித்தது.
அதன்பின், இலங்கை மீனவர்கள் இந்திய எல்லைக்குள் செல்வது தவிர்க்கப்பட்டு விட்டது. இப்படிப்பட்ட நோக்கத்துக்காகவே, இலங்கைக்கு விருப்பப்பட்டு கச்சத்தீவை இந்தியா தாரை வார்த்தது.
நியாயமல்ல
அப்போது முதல், கச்சத்தீவு இலங்கைக்கு சொந்தமானதாகி விட்டது. எந்த நோக்கத்துக்காக இந்தியா, கச்சத்தீவை இலங்கை வசம் ஒப்படைத்ததோ, அந்த நோக்கம் நிறைவேறியது.
இலங்கை மீனவர்களால், இந்தியாவுக்கு தொந்தரவு இல்லாமல் போனது.
இந்த வரலாறு எதுவுமே, தமிழக அரசியல்வாதிகளுக்கு தெரியாது. தெரிந்தாலும், தெரியாதது போல பொய் பேசுகின்றனர். மக்களை முட்டாள்கள் என நினைத்து வரலாற்றை திரித்து கூறுகின்றனர்.
காங்கிரசும், தி.மு.க., வும் முடிவெடுத்து இந்தியாவுக்கு எதிரான நிலைப்பாட்டை எடுத்துவிட்டது போல, ஒப்பந்தம் போடப்பட்டு, 50 ஆண்டுகள் கழித்து பிரச்னையை கிளப்பி விடுவது நியாயமானது அல்ல.
தேர்தலுக்காக என்ன வேண்டுமானாலும் செய்யலாம் என்பது, எப்படி ஜனநாயக ரீதியிலான அணுகுமுறையாக இருக்கும்?
இவ்வாறு செல்லதுரை நற்குணம் கூறினார்.
- நமது நிருபர்-

