டில்லி உஷ்ஷ்ஷ்: 'யார் அந்த சார்' விவகாரத்தில் திருப்பம்!
டில்லி உஷ்ஷ்ஷ்: 'யார் அந்த சார்' விவகாரத்தில் திருப்பம்!
ADDED : மார் 09, 2025 01:01 AM

சென்னை: சென்னை அண்ணா பல்கலை வளாகத்தில், மாணவி ஒருவர் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டார். குற்றவாளி கைது செய்யப்பட்டு, தற்போது சிறையில் உள்ளார். இதை விசாரிக்க, சென்னை உயர் நீதிமன்றம் சிறப்பு புலனாய்வு குழுவை அமைத்தது.
வன்கொடுமை சம்பவம் நடந்தவுடன் எதிர்க்கட்சிகள், 'குற்றவாளி ஞானசேகரன் தொடர்பு கொண்ட அந்த சார் யார்?' என கேள்வி எழுப்பின; ஆனால், பதில் கிடைக்காத காரணத்தால் அமைதியாகின.
ஆனால், அரசியல்வாதிகள் மத்தியில், 'அந்த சார் இவர்தான்' என, ஒருவரைக் குறிப்பிடுகின்றனர். இந்நிலையில், டில்லியில் உள்துறை அமைச்சக அதிகாரிகளிடையே பரபரப்பாக ஒரு செய்தி பேசப்படுகிறது.
அது, 'அரசியல்வாதிகள் மத்தியில் குறிப்பிடப்படும் அந்த நபர், உண்மையான சார் இல்லை; அவர், வேறொருவருக்கு இந்த வேலையை செய்துள்ளார்' என, சொல்லப்படுகிறது.
அந்த பிரமுகர் மீது, எவருமே கை வைக்க முடியாதாம். இந்த விவகாரத்தை எப்படியோ மோப்பம் பிடித்த உளவுத்துறை, உள்துறை அமைச்சகத்திற்கு தெரிவித்துவிட்டதாம்.
சிறப்பு புலனாய்வு குழு கூட்டத்தின்போது, ஒரு அதிகாரி, 'ஞானசேகரன் யார் யார் பெயரைச் சொல்கிறாரோ, அவர்களையெல்லாம் வழக்கில் சேர்த்துவிடுவேன்; யாருக்கும் நான் பயப்பட மாட்டேன்' என்றாராம். இதனால் என்ன நடக்குமோ?' என, அதிகாரிகளும் அரசியல்வாதிகளும் அச்சத்தில் உள்ளதாக சொல்லப்படுகிறது.

