குறைய வேண்டிய காலத்தில் மளிகைப் பொருட்கள் திடீர் விலை உயர்வு!
குறைய வேண்டிய காலத்தில் மளிகைப் பொருட்கள் திடீர் விலை உயர்வு!
UPDATED : ஏப் 24, 2024 11:50 AM
ADDED : ஏப் 24, 2024 11:44 AM

மளிகைப் பொருட்களின் விலை குறையும் காலத்தில், திடீரென விலை உயர்ந்து வருகிறது; வடமாநிலங்களில் பெரிய நிறுவனங்கள் 'பல்க்' கொள்முதல் செய்வதே இதற்குக் காரணமென சந்தேகம்எழுந்துள்ளது.
தமிழகத்தில் நகரமயமாக்கல் அதிகமாகி வருவதால், விளைநிலங்களின் பரப்பும், விளைபொருள் உற்பத்தியும் குறைந்து வருகிறது. இதனால் தமிழகத்துக்கான அரிசி, பருப்பு உள்ளிட்ட பெரும்பாலான மளிகைப் பொருட்கள், வடமாநிலங்களில் இருந்தே அதிகளவில் வருகின்றன. முந்தைய ஆண்டின் மழையளவு, விளைச்சலைப் பொறுத்தே, ஒவ்வொரு ஆண்டும் இவற்றின் விலை ஏறி இறங்குகிறது.
வருஷ சாமான்கள் வழக்கம்
வழக்கமாக, மளிகைப் பொருட்களின் விலை, செப்.,- டிச., ஏறுமுகத்தில் இருக்கும். டிசம்பருக்குப் பின் ஏப்ரல் வரையிலும் படிப்படியாக விலை குறைந்து, மே, ஆகஸ்ட் வரையிலும் ஒரே சீராக இருக்கும் என்பது வர்த்தகர்களின் அனுபவம். அதிக வறட்சி, மழை வெள்ளம் போன்ற இயற்கைப் பேரிடர் ஏற்பட்டால் தான், இதில் மாற்றம் ஏற்படும்.
இதனால்தான், குடும்பங்களுக்கு ஓராண்டுக்குத் தேவையான 'வருஷ சாமான்கள்' எனப்படும் மளிகைப் பொருட்களை வாங்கி வைத்துக்கொள்வது, தமிழகத்தில் பாரம்பரிய வழக்கமாகவுள்ளது. ஆனால் கடந்த ஆண்டில் ஓரளவுக்கு நல்ல மழையும், விளைச்சலும் இருந்த போதிலும், இந்த ஆண்டில் மளிகைப் பொருட்களின் விலை, வழக்கத்துக்கு மாறாக இந்த மாதத்தில் உயரத் துவங்கியுள்ளது.
உதாரணமாக, துவரம்பருப்பு கடந்த மாதத்தில் கிலோ 140 ஆக இருந்தது; இந்த மாதத்தில் ரூ.170 ஆக உயர்ந்துள்ளது. கடலைப்பருப்பு கிலோ 80 ரூபாயிலிருந்து 86 ரூபாய் ஆகவும், பொட்டுக்கடலை கிலோ 110 ரூபாயிலிருந்து 120 ரூபாயாகவும், அஸ்கா சர்க்கரை கிலோ ரூ.39லிருந்து ரூ.42 ஆகவும் விலை அதிகரித்துள்ளது. ஆனால் உளுந்தம்பருப்பு விலை மாற்றமின்றி, கிலோ ரூ.136 ஆக உள்ளது.
மஞ்சள் துாள் ரூ.180 லிருந்து ரூ.220 ஆகவும், பெரிய பூண்டு ரூ.180 லிருந்து ரூ.280 ஆகவும் ஒரே மாதத்தில் விலை உயர்ந்துள்ளது. மிளகாய்த் துாள், மல்லித்துாள், மல்லி, கருப்பு சுண்டல், பச்சைப் பட்டாணி, வெந்தயம், அரிசி ஆகியவற்றின் விலையில் மாற்றமில்லை. கோவையில் குறுமிளகு விலையிலும் மாற்றமில்லை.
ஆனால் வாசனைத் திரவியங்கள் அதிகம் விளையும் நீலகிரி மாவட்டம் கூடலுாரில், இவற்றின் விலை, ஒரே மாதத்தில் உயர்ந்துள்ளது.
கடந்த மாதத்தில் கிலோ 600 ரூபாய்க்கு விற்கப்பட்ட குறுமிளகு, இப்போது 700 ரூபாய்க்கு விற்கப்படுகிறது. பட்டை ரூ.300லிருந்து ரூ.380 ஆகவும், கிராம்பு ரூ.1200 லிருந்து ரூ.1300 ஆகவும், ஏலக்காய் ரூ.1600 லிருந்து ரூ.2100 வரையும் விலை அதிகரித்துள்ளது. அதிக தரமுள்ள ஏலக்காய், ரூ.2300 லிருந்து ரூ.2600 வரை விற்கப்படுகிறது.
விலை குறைவும் உண்டு
இப்படி பெரும்பாலான மளிகைப் பொருட்கள் விலை உயர்ந்துள்ள போதிலும், ஆறுதலாக சில பொருட்களின் விலை குறைந்துள்ளது. உதாரணமாக, வெள்ளை சுண்டல், கிலோ ரூ.170 லிருந்து ரூ.150 ஆகவும், சீரகம் ரூ.480 லிருந்து ரூ.360 ஆகவும், சோம்பு ரூ.260 லிருந்து ரூ.220 ஆகவும், வரமிளகாய் ரூ.220 லிருந்து ரூ.190 ஆகவும் குறைந்துள்ளது.
சென்னையை ஒப்பிடுகையில், கோவையில் விலையேற்றம் குறைவாக இருப்பதாகவே வணிகர்கள் கூறுகின்றனர். ஆனால் ஒப்பீட்டளவில், இந்த மாதத்தில் மளிகைப் பொருட்களின் விலையேற்றம் எதிர்பாராத ஒன்றாக இருப்பதாகவும், வணிகர் சங்க நிர்வாகிகள் கருதுகின்றனர். ஆளாளுக்கு ஒவ்வொரு காரணத்தை சொல்கின்றனர்.
மொத்த கொள்முதல் காரணமா?
வடமாநிலங்களில் உள்ள சில பெரிய நிறுவனங்கள், மளிகைப் பொருட்களை ஒரு லட்சம், இரண்டு லட்சம் கிலோ என மொத்தமாக கொள்முதல் செய்து விட்டதால், வரத்து குறைந்ததே காரணமென்று வர்த்தகர் சங்க நிர்வாகிகள் சிலர் சந்தேகிக்கின்றனர். திட்டவட்டமாக காரணம்தெரியவில்லை; தேர்தலுக்கும் இதற்கும் எந்த தொடர்பும் இருப்பதாக தகவல் இல்லை. இந்த திடீர் விலைஉயர்வுக்கான காரணங்களை, அரசு தான் கண்டறிந்து ஆரம்பத்திலேயே தடுக்க வேண்டும்!
-நமது சிறப்பு நிருபர்-

