''ரிஸ்க்' இல்லாமல் ஏற்றுமதி இல்லை பெண்களும் சாதிக்க முன்வர வேண்டும்'
''ரிஸ்க்' இல்லாமல் ஏற்றுமதி இல்லை பெண்களும் சாதிக்க முன்வர வேண்டும்'
UPDATED : டிச 25, 2025 10:40 AM
ADDED : டிச 25, 2025 10:41 AM
மதுரை:
'ரிஸ்க்' இல்லாமல் ஏற்றுமதி இல்லை என மதுரையில் இந்திய பெண்கள் கூட்டமைப்பு (ஐவின்) நடத்திய பெண் தொழில்முனைவோருக்கான கருத்தரங்கில் ஏற்றுமதி ஊக்குவிப்பு மைய சேர்மன் ராஜமூர்த்தி தெரிவித்தார்.
அவர் பேசியதாவது:
அதிகளவில் உற்பத்தி, வணிகம் செய்வது தான் ஏற்றுமதி என ஒரு காலத்தில் கூறப்பட்டது. தற்போது உலகம் முழுவதும் நுகர்வோர் இருப்பதால் 'இ காமர்ஸ்' தளம் மூலம் குறைந்தளவில் கூட ஏற்றுமதி செய்வதற்கான வாய்ப்பு அதிகரித்துள்ளது. அதற்கான எளிமையான தகவல் தொழில்நுட்பங்கள் இருப்பதால் வீட்டில் இருக்கும் பெண்களும் ஏற்றுமதித் தொழிலில் ஈடுபடலாம். மத்திய அரசின் எஸ்.எம்.இ., அமைப்பில் பெண் ஏற்றுமதியாளரை ஊக்குவிக்கும் வகையில் தனித்திட்டம் உள்ளது.
அதன் மூலம் பயிற்சி, பிற உதவிகள் வழங்கப்படுகின்றன. விழிப்புணர்வு அதிகரித்து வருகிறது. பெண்களும் ஏற்றுமதிக்கு முன்வரவேண்டும்.
ஏற்றுமதி துறையில் சவால்கள் உள்ளது சகஜம் தான். அதை கையாள்வதற்கான நிறைய தளங்கள் உருவாக்கப்பட்டுள்ளன. 'கிரெடிட் ரிஸ்க் பாலிசி, கன்ட்ரி பாலிசி' திட்டங்கள் உள்ளன. மதுரை சொக்கிகுளத்தில் 'எக்ஸ்போர்ட் கிரெடிட் கேரண்டி கார்ப்பரேஷன்' அலுவலகம் உள்ளது. அங்கு சென்று நிறைய விவரங்களை தெரிந்து கொள்ளலாம். வெளிநாட்டுக்கு ஒரு பொருளை ஏற்றுமதி செய்த நிலையில் அங்கு அப்பொருளுக்கு சேதாரம் ஏற்பட்டால் 'கன்ட்ரி பாலிசி' மூலம் அதற்கான இழப்பீட்டுத் தொகையை பெறலாம்.
'ரிஸ்க்' இல்லாமல் ஏற்றுமதி இல்லை. அதைக் கற்றுக் கொண்டு கையாள்வது அவசியம். 'பேஷன் டிசைனிங்', சுகாதாரமான உணவு, உடனடி உணவு, மூலிகைப்பொருட்களுக்கான ஏற்றுமதிக்கான வாய்ப்புகள் அதிகம் உள்ளன. உங்களது தனிப்பட்ட திறமைகளை சேவைத்தொழில் மூலமும் ஏற்றுமதி செய்யலாம் என்றார்.

