தகுதித்தேர்வு தீர்ப்பால் பணியில் உள்ள ஆசிரியர்களுக்கு பாதிப்பு வரக்கூடாது
தகுதித்தேர்வு தீர்ப்பால் பணியில் உள்ள ஆசிரியர்களுக்கு பாதிப்பு வரக்கூடாது
UPDATED : செப் 10, 2025 12:00 AM
ADDED : செப் 10, 2025 03:26 PM

மதுரை:
'உச்சநீதிமன்ற தீர்ப்பால் பணியில் உள்ள ஆசிரியர்களுக்கு பாதிப்பு வராமல் இருக்க, அவர்களுக்கு குறைந்தபட்ச மதிப்பெண் நிர்ணயம் செய்து தேர்வில் பங்கேற்க செய்ய வேண்டும்' என அரசுப் பணியாளர் சங்கம் யோசனை தெரிவித்துள்ளது.
சமீபத்தில் ஆசிரியர் தகுதித் தேர்வு தொடர்பான வழக்கில் தீர்ப்பளித்த உச்சநீதி மன்றம், பணியில் உள்ள அனைத்து ஆசிரியர்களும் டெட் தேர்வில் தேர்ச்சி பெற வேண்டும் என்றும், 2011 க்கு முன் பணியில் சேர்ந்தவர்களுக்கும் டெட் தேர்வு கட்டாயம் எனவும் கூறியுள்ளது. பணியில் இருந்து ஓய்வுபெற 5 ஆண்டுகள் உள்ளவர்களுக்கு மட்டும் தளர்வு வழங்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து தமிழ்நாடு அரசுப் பணியாளர் சங்க மாநில துணைத் தலைவர் ஜெயகணேஷ், மாவட்ட செயலாளர் முத்துராஜா, பொருளாளர் சேகர் கூறியிருப்பதாவது:
இத்தனை ஆண்டுகளாக கற்பிக்கும் ஆசிரியர்களை திடீரென தேர்வு எழுதச் சொல்வதோடு, பணிபறிக்கப்படும் எனவும் கூறியிருப்பது பேரதிர்ச்சி. தொடக்க, நடுநிலை கல்வியில் தமிழகம் சிறப்பாக உள்ளது. குறைகளை நிவர்த்தி செய்ய கற்றல், கற்பித்தலில் பல முன்னெடுப்புகள் கொண்டு வரப்பட்டுள்ளன. ஏற்கனவே பகுதிநேர ஆசிரியர்கள், பணிநிரந்தரம், காலியிடம் நிரப்புதல், மத்திய அரசு நிதி வழங்காதது உட்பட பல சிக்கல்கள் இருக்கும்போது, பணியில் இருப்போருக்கும் பாதிப்பு ஏற்படும் வகையில் வழங்கிய உத்தரவு அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.
அரசு பணியாளர் யோசனை இத்தேர்வில் தேர்ச்சி பெற பொதுப்பிரிவில் 60 சதவீதம், பி.சி., எம்.பி.சி., டி.என்.சி., எஸ்.சி. பிரிவினர் மாற்றுத்திறனாளிகளுக்கு 55 சதவீத மதிப்பெண்களும், எஸ்.டி., பிரிவினர் 40 சதவீதமும் பெற வேண்டும். பணியில் உள்ள ஆசிரியர்கள் இதில் தேர்ச்சி பெறுவது கடினமாக இருக்கும்.
தமிழக அரசு 2003 ல் 15 ஆயிரம் தற்காலிக இளநிலை உதவியாளர்களை நியமித்தது. அவர்களை 2006 க்கு பின் தமிழக அரசு சிறப்பு தகுதித் தேர்வு நடத்தியது. அவர்களுக்கு குறைந்தபட்ச தகுதி மதிப்பெண் 25 என நிர்ணயித்து அதனடிப்படையில் தேர்வு நடத்தி அனைவரையும் காலமுறை ஊதியத்தில் பணிநிரந்தரம் செய்தனர். அதேபோல இந்த ஆசிரியர்களுக்கும் தேர்வு நடத்தி பணிநிரந்தரம் செய்ய வேண்டும் என்று தெரிவித்துள்ளனர்.