தமிழகத்தில் இருந்து ஐ.ஏ.எஸ்., ஆக தேர்வாகும் மாணவர்கள் குறைகிறது!
தமிழகத்தில் இருந்து ஐ.ஏ.எஸ்., ஆக தேர்வாகும் மாணவர்கள் குறைகிறது!
UPDATED : ஏப் 27, 2024 12:00 AM
ADDED : ஏப் 27, 2024 10:11 AM
கோவை:
கடந்த சில ஆண்டுகளாக, நமது மாநிலத்தில் இருந்து ஐ.ஏ.எஸ்., ஆக தேர்வாகும் மாணவர்களின் எண்ணிக்கை சரிந்துள்ளது என இலவச ஐ.ஏ.எஸ்., தேர்வு மைய பயிற்சியாளர் கனகராஜ் பேசினார்.
டாக்டர் நஞ்சப்பா ரோட்டில் உள்ள, இலவச ஐ.ஏ.எஸ்., தேர்வு பயிற்சி மையத்தில், குடிமைப் பணி தேர்வில் வெற்றி பெற்ற மாணவி சத்யாநந்திக்கு, பாராட்டு விழா நடந்தது. துடியலுாரை சேர்ந்த இவர் இப்பயிற்சி மையத்தில், இரண்டு ஆண்டுகள் பொது அறிவு பாடம் பயின்று, நேர்காணல் பயிற்சியும் பெற்றுள்ளார்.
குடிமைப் பணி தேர்வில், 513வது ரேங்க் பெற்றுள்ளார். தேர்வுக்கு தயாராகும் மாணவ, மாணவியரிடம் கலந்துரையாடிய சத்யாநந்தி, குடிமைப் பணி தேர்வில் வெற்றி பெற வேண்டும் என்றால் நன்கு படிக்க வேண்டும்; கடினமாக உழைக்க வேண்டும். பரந்த, விசாலமான அறிவும், நேர்மறையான அணுகுமுறையும் அவசியம். தேர்வின் முதல் கட்டமாகிய முதல்நிலை தேர்வில் திறனறிவு தாள் மிக முக்கியமானது; அதிக கவனம் செலுத்த வேண்டும் என்றார்.
பேராசிரியர் கனகராஜ் பேசுகையில், கடந்த சில ஆண்டுகளாக, நமது மாநிலத்தில் இருந்து தேர்வாகும் மாணவர்களின் எண்ணிக்கை சரிந்துள்ளது. ஆண்டுக்கு, 20-30 ஐ.ஏ.எஸ்., அதிகாரிகளை உருவாக்கிய நமது மாநிலத்தில் தற்போது, 10க்கும் குறைவானவர்களே தேர்வாகின்றனர்.
மொத்த குடிமைப் பணிகளுக்கு, தேர்வான மாணவர்களின் எண்ணிக்கை, 50க்கும் குறைவாகவே உள்ளது. மாறிவரும் சூழலுக்கு ஏற்ப, நம் மாணவர்கள் தங்களை தயார்ப்படுத்திக்கொள்ள வேண்டும் என்றார்.

