பள்ளிகளில் காலை உணவு சாப்பிடும் மாணவர்கள் எண்ணிக்கை சரிவு
பள்ளிகளில் காலை உணவு சாப்பிடும் மாணவர்கள் எண்ணிக்கை சரிவு
UPDATED : டிச 14, 2025 09:15 AM
ADDED : டிச 14, 2025 09:16 AM

சென்னை:
காலை உணவு திட்டத்தில் பயன்பெறும் மாணவர்களின் எண்ணிக்கை, 40 சதவீதம் சரிந்துள்ளது, பள்ளிக்கல்வித் துறையில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
தமிழகத்தில் உள்ள அரசு பள்ளிகளில், ஒன்று முதல் ஐந்தாம் வகுப்பு வரை படிக்கும் மாணவ - மாணவியருக்கு, நாட்டிலேயே முதல் முறையாக, இலவசமாக காலை உணவு வழங்கும் திட்டம், கடந்த 2022 செப்., 15ம் தேதி துவங்கப்பட்டது.
நடவடிக்கை அதன்பின், அரசு உதவிபெறும் பள்ளிகள் மற்றும் நகர்ப்புற பள்ளிகளுக்கு விரிவுபடுத்தப்பட்டது. இந்நிலையில், கடந்த சில மாதங்களாக, காலை உணவு உண்ணும் மாணவர்களின் எண்ணிக்கை குறைந்துள்ளது.
இது குறித்து ஆய்வு நடத்தி, அனைத்து மாணவர்களும் பயன் பெறும் வகையில், நடவடிக்கை எடுக்க வேண்டும் என, தொடக்கக்கல்வி இயக்குநர் நரேஷ், மாவட்ட தொடக்கக் கல்வி அலுவலர்களுக்கு உத்தரவிட்டுள்ளார்.
தலைமை ஆசிரியர்கள் சிலர் கூறியதாவது:
தினமும் காலை உணவு சாப்பிடும் மாணவர்கள் விபரத்தை, பள்ளி தலைமை ஆசிரியர்கள் அல்லது அதற்கான பொறுப்பாளர், காலை உணவு திட்ட செயலியில் பதிவேற்றம் செய்ய வேண்டும்.
ஆனால், பல பள்ளிகளில், தலைமை ஆசிரியர்கள், எஸ்.ஐ.ஆர்., திருத்தப்பணியில் ஈடுபட்டுள்ளதாலும், பல்வேறு பணிபளு காரணமாகவும், கடந்த சில மாதங்களாக, பல தலைமை ஆசிரியர்கள் காலை உணவு சாப்பிடும் மாணவர்கள் விபரங்களை பதிவேற்றம் செய்ய வில்லை. காலை உணவு திட்ட செயலியின் வேகமும் மந்தமாக உள்ளது.
மேலும், நகர்ப்புறங்களில் வேலைக்கு செல்லும் பெற்றோர், தங்கள் குழந்தைகளுக்கு, வீட்டில் தயாரிக்கும் உணவை கொடுத்து பள்ளிக்கு அனுப்புகின்றனர். அபாயம் சமூக நலத்துறை கடந்த மாதம் எடுத்த கணக்கெடுப்பில், 4 லட்சத்து 68,554 மாணவர்களில், 2 லட்சத்து, 87,997 மாணவர்கள் மட்டுமே, காலை உணவு சாப்பிட்டது தெரிய வந்துள்ளது.
மொத்தத்தில், 40 சதவீதம் மாணவர்கள், காலை உணவு சாப்பிடவில்லை. இந்நிலை தொடர்ந்தால், காலை உணவு திட்ட நிதி ஒதுக்கீடு, உணவுப்பகிர்வு குறைக்கப்படும் அபாயம் உள்ளது.
இவ்வாறு அவர்கள் கூறினர்.

