நீட் தேர்வு கமிட்டி அறிக்கை எட்டு மொழிகளில் வெளியீடு
நீட் தேர்வு கமிட்டி அறிக்கை எட்டு மொழிகளில் வெளியீடு
UPDATED : ஜூன் 11, 2024 12:00 AM
ADDED : ஜூன் 11, 2024 09:30 AM

சென்னை:
மருத்துவ கல்வி மாணவர் சேர்க்கைக்கான, நீட் தேர்வை ரத்து செய்யுமாறு, தி.மு.க., அரசு வலியுறுத்தி வருகிறது. இதுதொடர்பாக, உயர் நீதிமன்ற ஓய்வு பெற்ற நீதிபதி ஏ.கே.ராஜன் தலைமையில் கமிட்டி அமைக்கப்பட்டது.
இந்த கமிட்டியின் அறிக்கை, 2021 ஜூலையில் முதல்வர் ஸ்டாலினிடம் அளிக்கப்பட்டது.
அதில், 'நீட் தேர்வை ரத்து செய்ய, தமிழக அரசு சட்டம் இயற்றி ஜனாதிபதி ஒப்புதலை பெற வேண்டும்' என்று, பரிந்துரைக்கப்பட்டது. அதன்படி, சட்டசபையில் சட்டம் இயற்றி, ஜனாதிபதி ஒப்புதலுக்கும் அனுப்பப்பட்டுள்ளது.
நடப்பாண்டில் நீட் தேர்வில் குளறுபடிகள் நடந்துள்ளதாக புகார் எழுந்துள்ள சூழலில், நீட் தேர்வை ரத்து செய்ய பரிந்துரைத்துள்ள, ஏ.கே.ராஜன் கமிட்டி அறிக்கையை, எட்டு மொழிகளில், தமிழக அரசு நேற்று வெளியிட்டது.
ஆங்கிலம் மட்டுமின்றி, தமிழ், மலையாளம், தெலுங்கு, கன்னடம், ஹிந்தி, மராத்தி, பஞ்சாபி மற்றும் வங்க மொழிகளில், இந்த அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது. இந்த தகவலை, முதல்வர் ஸ்டாலின் தன் சமூக வலைதள பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.
அவர் கூறியிருப்பதாவது:
தி.மு.க., தான் நீட் தேர்வின் தீமைகளை முதலில் கண்டு உணர்ந்து, பெரிய அளவில் அதற்கு எதிராக பிரசாரம் செய்தது.
ஆட்சிக்கு வந்ததும், நீட் தேர்வின் அடிப்படை யில், மருத்துவ படிப்புகளுக்கான சேர்க்கை மேற்கொள்வதால் ஏற்படும் தாக்கங்களை ஆராய, ஓய்வு பெற்ற நீதிபதி ராஜன் தலைமையில் உயர் நிலை கமிட்டி அமைக்கப்பட்டது.
மிக விரிவான தரவு பகுப்பாய்வுகள், மாணவர்கள், பெற்றோர்கள், பொது மக்களிடம் இருந்து பெறப்பட்ட கருத்துகள் அடிப்படையில், இக்கமிட்டி வழங்கிய அறிக்கை வெளியிடப்பட்டது.
நீட் தேர்வு ஏழைகளுக்கும், சமூக நீதிக்கும் எதிரானது என்பதை அனைவரும் அறிந்து கொள்ளும் வகையில், பிற மாநில அரசுகளுக்கு, அந்த அறிக்கை அனுப்பி வைக்கப்பட்டது.
அறிக்கையில் இடம் பெற்ற பரிந்துரைகளின் அடிப்படையில், நீட் தேர்வில் இருந்து விலக்கு கோரும் மசோதா, சட்ட சபையில் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டு, கவர்னர் ஏற்படுத்திய தேவையற்ற தாமதத்தை தொடர்ந்து, தற்போது ஜனாதிபதியின் ஒப்புதலுக்காக நிலுவையில் உள்ளது.
நீட் தேர்வில், அண்மையில் நடந்த பரவலான குளறுபடிகளால், நாடு முழுதும் நீட் தேர்வுக்கு எதிர்ப்பு வலுத்து வருகிறது.
இந்த வேளையில், நீட் தேர்வின் பாதகங்களை அனைத்து தரப்பினரும் அறிந்து கொள்வதற்காக, நீதிபதி ஏ.கே.ராஜன் கமிட்டி அறிக்கையை, ஆங்கிலம் உள்ளிட்ட எட்டு மொழிகளில் பகிர்ந்துள்ளோம்.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

