மாணவர்கள் உயிரோடு விளையாடும் திமுக அரசு: இபிஎஸ் கண்டனம்
மாணவர்கள் உயிரோடு விளையாடும் திமுக அரசு: இபிஎஸ் கண்டனம்
UPDATED : டிச 19, 2025 07:02 AM
ADDED : டிச 19, 2025 07:03 AM
சென்னை:
பாழடைந்த அரசுப்பள்ளிக் கட்டுமானங்களால், மாணவர்கள் உயிரோடு விளையாடிக் கொண்டிருக்கும் ஸ்டாலின் மாடல் திமுக அரசுக்கு கண்டனம் என அதிமுக பொதுச்செயலர் இபிஎஸ் கூறியுள்ளார்.
இது தொடர்பாக இபிஎஸ் வெளியிட்ட அறிக்கையில் கூறியுள்ளதாவது:
திருவள்ளூர் மாவட்டம் கொண்டாபுரம் அரசு உயர்நிலைப்பள்ளியில், மதிய உணவு சாப்பிட்டுக் கொண்டிருந்த போது கைப்பிடி சுவர் இடிந்து விழுந்ததில் 7-ம் வகுப்பு படிக்கும் மோகித் என்ற மாணவன் உடல் நசுங்கி உயிரிழந்ததாக வரும் செய்தி மிகுந்த அதிர்ச்சியும் வேதனையும் அளிக்கிறது. உயிரிழந்த மாணவனின் பெற்றோருக்கு எனது ஆழ்ந்த இரங்கலையும் வருத்தங்களையும் தெரிவித்துக்கொள்கிறேன்.
'கல்வியிற் சிறந்த தமிழகம்' என்று சினிமா மேடை போல ஒரு மேடை அமைத்து, தனக்கு தானே ஒரு வெற்றுப் பாராட்டு விழா நடத்திய செலவில், அரசுப்பள்ளிகளின் கட்டுமானங்களைப் பராமரிப்பதில் செலவிட்டு இருந்தால், இன்றைக்கு இந்த பரிதாப உயிரிழப்பை நிச்சயம் தவிர்த்திருக்கலாம்.
பள்ளிக் கல்வித் துறையின் அமைச்சராக இருப்பவரோ, இன்னும் ரசிகர் மன்றத் தலைவர் மனநிலையில் இருந்து வெளிவராமல், உதயநிதி பிறந்தநாளைக் கொண்டாடுவதில் செலவிடும் நேரத்தை, தன் துறை சார்ந்த பணிகளில் என்றைக்காவது செலவிட்டு இருக்கிறாரா?பாழடைந்த அரசுப்பள்ளிக் கட்டுமானங்களால், மாணவர்கள் உயிரோடு விளையாடிக் கொண்டிருக்கும் ஸ்டாலின் மாடல் திமுக அரசுக்கு எனது கடும் கண்டனம்.
உயிரிழந்த மாணவர் மோகித்தின் குடும்பத்தாருக்கு உரிய நிவாரணத்தை உடனடியாக வழங்குவதுடன், அரசுப்பள்ளிகளின் கட்டுமானத்தை போர்க்கால அடிப்படையில் சீர்செய்யுமாறு முதல்வர் ஸ்டாலினை வலியுறுத்துகிறேன்.
இவ்வாறு அந்த அறிக்கையில் இபிஎஸ் கூறியுள்ளார்.

