டெட் தேர்வுக்கு தயாராவதால் கற்பித்தல் பணியில் பாதிப்பு; பிரதமருக்கு ஆசிரியர்கள் மனு
டெட் தேர்வுக்கு தயாராவதால் கற்பித்தல் பணியில் பாதிப்பு; பிரதமருக்கு ஆசிரியர்கள் மனு
UPDATED : செப் 22, 2025 12:00 AM
ADDED : செப் 22, 2025 08:45 AM

கோவை:
ஆசிரியர் தகுதித் தேர்வு (டெட்) தொடர்பான பிரச்னைக்கு தீர்வு காணக் கோரி, 'அகில பாரத ராஷ்ட்ரிய ஷைக்ஷிக் மகாசங்' கீழ் அங்கீகாரம் பெற்ற ஆசிரியர் சங்கத்தினர், நாடு தழுவிய அளவில் மாவட்ட கலெக்டர் மூலம், பிரதமர் மோடிக்கு மனு அனுப்பியுள்ளனர்.
கோவையில் மாவட்ட தேசிய ஆசிரியர் சங்கத் தலைவர் சித்ரா பாலசுப்பிரமணியன் தலைமையில், மாவட்ட கலெக்டரிடம், மனு அளித்துள்ளனர்.
சங்கத்தின் தலைவர் திரிலோக சந்திரன் கூறியதாவது:
கட்டாயகல்வி உரிமைசட்டம் 2009படி, 2010ம் ஆண்டுக்கு முன் நியமிக்கப்பட்ட ஆசிரியர்களுக்கு 'டெட்' தேர்விலிருந்து விலக்கு அளிக்கப்பட்டது.
ஆனால், 2010க்குபிறகு நியமிக்கப்பட்ட ஆசிரியர்கள் குறிப்பிட்ட காலத்திற்குள் 'டெட்' தேர்வில் தேர்ச்சி பெற வேண்டும் என்று அறிவிக்கப்பட்டது. தமிழகத்தில், அரசு உதவி பெறும் பள்ளிகளில் ஆசிரியர் நியமனத்திற்கு 'டெட்' தேர்வு கட்டாயம் என்ற செயல்முறை 2012ல் வெளியிடப்பட்டது.
இந்த சூழலில், உச்ச நீதிமன்றத்தின் சமீபத்திய தீர்ப்பு, ஏற்கெனவே விதிகளின்படி நியமிக்கப்பட்டு பணியாற்றி வரும் அனுபவம் வாய்ந்த ஆசிரியர்களின் பணி பாதுகாப்பை கேள்விக்குறியாக்கியுள்ளது. ஆசிரியர்கள் 'டெட்' தேர்வுக்கு தயாராக, அதிக நேரம் ஒதுக்க வேண்டியிருப்பதால், அவர்களின் தற்போதைய கற்பித்தல் பணி பாதிக்கப்படுகிறது; மாணவர்களின் கல்வியில் பாதிப்பு ஏற்படும் அபாயம் உள்ளது.
எனவே, பணிநீக்கம் அல்லது வாழ்வாதார இழப்பில் இருந்து, லட்சக்கணக்கான ஆசிரியர்களை பாதுகாக்க தேவையான கொள்கை அல்லது சட்ட நடவடிக்கைகளை உடனடியாக எடுக்க வேண்டும்.
இவ்வாறு, அவர் கூறினார்.