இல்லம் தேடி சென்ற ஆசிரியர்கள்; மாணவியர் உயர்கல்வி பயில உதவி
இல்லம் தேடி சென்ற ஆசிரியர்கள்; மாணவியர் உயர்கல்வி பயில உதவி
UPDATED : ஆக 05, 2025 12:00 AM
ADDED : ஆக 05, 2025 09:17 AM
ஆனைமலை:
ஆனைமலை அருகே, கோட்டூர் மலையாண்டிபட்டணம் அரசுப்பள்ளி ஆசிரியர்கள், இல்லம் தேடிச் சென்று உயர்கல்வி பயில்வது குறித்து மாணவர்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.
மாணவர்கள் உயர்கல்வி பயில்வதற்கு, தமிழக அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. அவ்வகையில், கோட்டூர் மலையாண்டிபட்டணம் அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளியில் பிளஸ் 2 தேர்ச்சி பெற்ற மாணவியர், தற்போது வரை கல்லுாரியில் சேராதவர்களை கண்டறிந்து, உயர்கல்வி பயில்வதற்காக, மாணவியரின் இல்லம் தேடிச்சென்று மாணவர்களுக்கும், பெற்றோருக்கும் ஆலோசனை வழங்கினர்.
தற்போது, பொருளாதார பிரச்னை காரணமாக கல்லுாரியில் சேராத மாணவியர், மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் நடைபெறும் கல்வி கடன் மேளாவில் பங்கேற்று பயன்பெறலாம் என ஆலோசனை தெரிவிக்கப்பட்டது.
கோட்டூர் மலையாண்டிபட்டணம் அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் ரோஸ்லின் கலைச்செல்வி தலைமையில், ஆனைமலை வட்டார உயர்கல்வி வழிகாட்டுதல் ஒருங்கிணைப்பாளர் மற்றும் முதுகலை ஆசிரியர் சிவக்குமார் மற்றும் ஆசிரியர்கள் சுகன்யா, ஷோபனா ஆகியோருடன் ஆழியாறு, நெல்லித்துறை மன்னம், புளியங்கண்டி, கோட்டூர் எம்.ஜி.ஆர்., நகர் பகுதியில் வசிக்கும் ஆதிதிராவிட மற்றும் பழங்குடியின மாணவியரின் இல்லம் தேடி சென்று வழிகாட்டுதல் வழங்கினர்.
தொடர்ந்து, இரு மாணவியரை பொள்ளாச்சி மற்றும் உடுமலை அரசு கலை கல்லுாரிகளில் சேர்ப்பதற்கான முயற்சிகள் மேற்கொண்டனர். அறக்கட்டளை வாயிலாக பொருளாதார உதவி வழங்கவும் முயற்சிகள் எடுக்கப்பட்டதாக ஆசிரியர்கள் தெரிவித்தனர்.

