நீட் தேர்வு ரத்து செய்ய தமிழிசை உதவணும்: அமைச்சர் சுப்பிரமணியன்
நீட் தேர்வு ரத்து செய்ய தமிழிசை உதவணும்: அமைச்சர் சுப்பிரமணியன்
UPDATED : மே 06, 2025 12:00 AM
ADDED : மே 06, 2025 11:09 AM

சென்னை:
தமிழ்நாட்டில் நீட் தேர்வை ரத்து செய்ய தமிழிசை சௌந்திரராஜன் உதவ வேண்டும் என அமைச்சர் சுப்பிரமணியன் கூறினார்.
சென்னை கொளத்துாரில் மக்கள் நல்வாழ்வு துறை அமைச்சர் சுப்பிரமணியன் அளித்த பேட்டி:
நீட் தேர்வு வந்த நாள் முதல், குளறுபடிகளுக்கு மேல் குளறுபடிகளாக நடந்து கொண்டிருக்கிறது. உச்ச நீதிமன்றமும் இந்த குளறுபடிகளை கண்டித்துள்ளது. நீட் தேர்வு, மாணவர்களின் மனநிலையை சீர்குலைக்கும் கொடுமையான தேர்வாக உள்ளது.
தாலியை கழற்றி வைத்து விட்டு, நீட் தேர்வு எழுதச் சொல்லி உள்ளனர். இப்படி எந்தத் தேர்வுக்கும் செய்ததில்லை. கட்டுப்பாடு என்ற பெயரில் மாணவ - மாணவியருக்கு அழுத்தம் கொடுத்து உள்ளனர்.
தமிழிசை, நீட் நீட்டாக நடக்கிறது என்கிறார். நீட் தேர்வால் 40க்கும் மேற்பட்டவர்கள் உயிரிழந்துள்ளதை அறிந்தும், அவர் இப்படி ஒரு கருத்தை சொன்னால், அதற்கு என்ன பதில் சொல்வது என தெரியவில்லை.
நீட் தேர்வை விலக்க, தமிழக அரசு தொடர்ந்து பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. ஆனால், மத்திய அரசு தான் முட்டுக்கட்டையாக உள்ளது. நீட் தேர்வில் இருந்து விலக்கு பெறுவதே எங்கள் ஒரே இலக்கு. நீட் தேர்வை ரத்து செய்ய, தானும் குரல் எழுப்புவது போல காட்டிக் கொள்ளும் அ.தி.மு.க., பொதுச்செயலர் பழனிசாமி, எங்கள் முயற்சிகளுக்கு உதவ வேண்டும்.
அதே போல, மாணவர்கள் மீது அக்கறை இருக்குமானால், தமிழக பா.ஜ., முன்னாள் தலைவர் தமிழிசையும், அவர் சார்ந்திருக்கும் கட்சியின் மத்திய தலைவர்களை வலியுறுத்தி உதவ வேண்டும். அதை விட்டு விட்டு, தி.மு.க.,வுக்கு நெருக்கடி கொடுப்பது போல பேசி வருவது, அவர்களுடைய கையாலாகாத்தனம் தான்.
ஓய்வுபெற்ற நீதிபதி கலையரசன் பரிந்துரைப்படி, அரசு பள்ளி மாணவர்களுக்கான மருத்துவ இட ஒதுக்கீட்டை, 7.5 சதவீதத்திலிருந்து 10 சதவீதம் வரை உயர்த்துவது குறித்து, சட்ட விதிகளை ஆய்வு செய்து வருகிறோம். வாய்ப்பு இருக்கும்பட்சத்தில் உடனே நடவடிக்கை எடுக்கப்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.

