தமிழக ஸ்மார்ட் சிட்டி திட்ட நிலை: மத்திய அரசு புதிய தகவல்
தமிழக ஸ்மார்ட் சிட்டி திட்ட நிலை: மத்திய அரசு புதிய தகவல்
UPDATED : நவ 29, 2024 12:00 AM
ADDED : நவ 29, 2024 05:12 PM
சென்னை:
தமிழகத்தில் சென்னை, மதுரை, கோவை, சேலம், வேலுார் உட்பட 11 நகரங்களில், 17,470 கோடி ரூபாய் செலவில் நடைபெற்று வரும் ஸ்மார்ட் சிட்டி திட்டப்பணிகளில், 97 சதவீதம் வரை நிறைவடைந்திருப்பதாகவும், மீதமுள்ள பணிகள் 2025 மார்ச் மாதத்திற்குள் முடியும் என்றும், மத்திய அரசு தெரிவித்துள்ளது.
ராஜ்ய சபாவில், தி.மு.க., - எம்.பி., கனிமொழி சோமு எழுப்பியிருந்த கேள்விக்கு, மத்திய நகர்ப்புற மேம்பாட்டு இணை அமைச்சர் தோகான் சாகூ அளித்துள்ள எழுத்துப்பூர்வமான பதிலில் கூறப்பட்டுள்ளதாவது:
தமிழகத்திலுள்ள 11 நகரங்களில் நடக்கும் ஸ்மார்ட் சிட்டி பணிகளுக்கு, தன் பங்களிப்பாக 100 சதவீத நிதியை மத்திய அரசு தந்துவிட்டது.
கடந்த 15ம் தேதி நிலவரப்படி, இந்த 11 நகரங்களுக்குமான மத்திய, மாநில அரசுகளின் நிதியாக, மொத்தம், 10,879 கோடி ரூபாய் அளிக்கப்பட்டுள்ளது. இதில், 94 சதவீத நிதி, அதாவது 10,490 கோடி ரூபாய், முழுவதுமாக செலவழித்து முடிக்கப்பட்டுவிட்டது.
மேலும், 11 நகரங்களிலும் மொத்தம் 708 திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன. இதன் மதிப்பு 17,470 கோடி ரூபாய். இது மொத்தமுள்ள 733 திட்டங்களுக்கான நிதியில் 97 சதவீதம். இத்திட்டங்கள் அனைத்தும் நிறைவடைந்துவிட்டன.
மீதமுள்ள 514 கோடி ரூபாய் மதிப்பிலான 25 திட்டங்கள், விரைவில் நிறைவடையும் சூழ்நிலையில் உள்ளன. தமிழகத்துக்கு என, புதிய ஸ்மார்ட் சிட்டி திட்டங்கள் எதையும் ஒதுக்கீடு செய்யும் எண்ணம் மத்திய அரசிடம் இல்லை.
தற்போது மேற்கொள்ளப்பட்டு வரும் ஸ்மார்ட் சிட்டித் திட்ட பணிகள் எல்லாவற்றையும், வரும் 2025 மார்ச் 31ம் தேதிக்குள் முடித்து, குறித்த காலக் கெடுவுக்குள் நிறைவேற்ற வேண்டும் என்பதே மத்திய அரசின் நோக்கம்.
இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

