வட்டி மானியம் விரிவுப்படுத்தணும்; மாணவர்கள், பெற்றோர் கோரிக்கை
வட்டி மானியம் விரிவுப்படுத்தணும்; மாணவர்கள், பெற்றோர் கோரிக்கை
UPDATED : மே 02, 2025 12:00 AM
ADDED : மே 02, 2025 10:45 AM

கோவை:
நிர்ணயிக்கப்பட்ட ஆண்டு வருமானத்தை மையப்படுத்தி, கல்விக்கடன் வாங்கி, தொழில்சார் படிப்புகள் படிக்கும் மாணவர்களுக்கு வழங்கப்படும் வட்டி மானியம், இதர படிப்பு படிப்பவர்களுக்கும் வழங்க வேண்டும் என்கிற கோரிக்கை வலியுறுத்தப்பட்டுள்ளது.
மாணவர்களின் கல்வி பாதிக்கக்கூடாது என்ற வகையில், வங்கிகளில் கல்விக் கடன் வழங்கப்பட்டு வருகிறது. இதில், ரூ.4 லட்சம் வரை கல்விக் கடன் பெறுவோருக்கு, பெற்றோர் கையெழுத்து மட்டும் பெறப்படுகிறது.
ரூ.4 லட்சம் முதல் 7.50 லட்சம் வரை கடன் பெறுவோருக்கு, பெற்றோர் கையெழுத்துடன் மூன்றாம் நபர் கையெழுத்தும் அவசியமாகிறது. இதற்கு மேல் பெறப்படும் கல்விக் கடனுக்கு, பிணையம் பெறப்படுகிறது.
படிப்புக்கான, குறிப்பிட்ட வருடங்கள் மற்றும் ஒரு வருட சலுகை காலம் முடிந்த பின், குறிப்பிட்ட வருடங்களுக்கான வட்டி மற்றும் அசல் என, மாதத்தவணைகளில் கடன் தொகையை திருப்பிச் செலுத்த வேண்டும். இதில், மருத்துவம், பொறியியல் உட்பட தொழில்சார்ந்த படிப்புகளை தேர்வு செய்வோருக்கு, அவர்களின் பெற்றோரின் ஆண்டு வருமானம் ரூ.4.50 லட்சத்துக்குள் இருந்தால், கல்விக்கடனுக்கு வட்டி மானியம் வழங்கப்படுகிறது.
ஒரு வருட கடன் தொகைக்கான வட்டியை கணக்கிட்டு, வங்கிகளுக்கு, மத்திய அரசு சார்பில் வழங்கப்படுகிறது. இதனால், ஏராளமானோர் பயன்பெற்று வருகின்றனர். ஆனால், ஆண்டு வருமானம் நிர்ணயம் மற்றும் மற்ற படிப்புகளை படிப்பவர்களுக்கு, இதுபோல் வட்டி மானியம் வழங்கப்படுவதில்லை. எனவே, மற்றவர்களுக்கும் இதை விரிவுப்படுத்த வேண்டும் என்ற கோரிக்கை, மாணவர்கள் மற்றும் பெற்றோர் மத்தியில் எழுந்துள்ளது.

